full screen background image

கேப்டன் பிரபாகரன் – சினிமா விமர்சனம்

கேப்டன் பிரபாகரன் – சினிமா விமர்சனம்

தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு மறக்க முடியாத திரைப்படமாக அமைந்தது 1991-ம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி வெளியான கேப்டன் பிரபாகரன்’ என்ற திரைப்படம்.

விஜயகாந்தின் நெருங்கிய நண்பரான இப்ராஹிம் ராவுத்தர் தயாரித்த இந்த திரைப்படம், கேப்டன் விஜயகாந்தின் திரை உலக வாழ்க்கையில் ஒரு முக்கியமான திரைப்படம் ஆக அமைந்திருந்தது.

25 ஆண்டுகளாக காட்டுப் பகுதியில் காட்டு ராஜா போல் வாழ்ந்து தமிழ்நாடு, கர்நாடக அரசுகளுக்குச் சின்னச் சொப்பனமாக வாழ்ந்து  மறைந்து சந்தனக்கடத்தல் வீரப்பன் பின்னணியில் இந்தப் படம் உருவாகியிருந்தது.

அந்தக் காலகட்டத்தில் சந்தன கடத்தல் வீரப்பன் என்கின்ற பெயர் வெளியானதே ஒழிய, அவர் எப்படி இருப்பார் என்பதே தெரியாத நிலையில் தென்னிந்தியா முழுவதுமே சந்தன கடத்தல் வீரப்பனின் பெயர் பரவியிருந்தது.

அந்தச் சூழலில்தான் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் இந்தக் கேப்டன் பிரபாகரன் திரைப்படம் வெளிவந்தது.

ஆனால் படத்தில் காட்டப்படும் வீரப்பன் கதாபாத்திரத்திற்கும் நிஜமான வீரப்பனுக்கும் எந்த ஒரு ஒற்றுமையும் இல்லை என்பதை நிஜ வீரப்பனை உலகமே அறிந்தபோதுதான் தெரிந்தது.

சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் வீரபத்ரன் என்ற மன்சூர் அலிகான் சட்ட விரோதமாக சந்தன மரங்களை வெட்டி நாடு முழுவதும் அனுப்பி சம்பாதித்து வருகிறான்.

அவனுடைய இந்த சட்ட விரோத செயலுக்கு லோக்கல் அரசியல்வாதிகளும், ஒரு மந்திரியுமே உறுதுணையாக இருக்கிறார்கள். இவர்களை கைக்குள் வைத்துக் கொண்டு மன்சூர் காடுகளுக்குள் சந்தன மரமே இல்லை என்கின்ற நிலைமை வரும் அளவுக்கு வெட்டி தள்ளிக் கொண்டே இருக்கிறான்.

இந்த நேரத்தில் தான் இதை எதிர்த்து வீரப்பனுடன் சண்டை இட்ட வன இலாகா அதிகாரியான சரத்குமாரை படு பயங்கரமாக கொலை செய்கிறான் வீரபத்திரன்.

இது வீரபத்ரன் தமிழக அரசுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை என்பது போல இருந்தாலும் சத்தியமங்கலம் காட்டுப் பகுதிக்கு வனத்துறை அதிகாரியாக செல்ல யாருமே ஒத்துக் கொள்ள மறுக்கிறார்கள். இந்த நேரத்தில் துணிந்து அந்த இடத்துக்கு எனக்கு போஸ்டிங் வேண்டும் என்று கேட்டு வாங்கிக் கொண்டு சத்தியமங்கலம் புறப்படுகிறார் கேப்டன் விஜயகாந்த்.

வீரப்பனை எப்படியும் உயிருடன் படித்து வருவேன் என்ற சவால்விட்டு சத்தியமங்கலம் வந்திறங்கும் விஜயகாந்த் அதை செய்து முடித்தாரா? வீரப்பன் சிக்கினானா?.. விஜயகாந்த் நிலைமை என்ன?.. ஊழல் செய்த அரசியல் வியாதிகள் கைது செய்யப்பட்டார்களா?.. இல்லையா?… என்பது போன்ற கேள்விகளுக்கு விடைதான் இத்திரைப்படத்தின் பிற்பகுதி.

படம் துவங்கி அரை மணி நேரம் கழித்துதான் விஜயகாந்த் படத்தில் தலையை நீட்டுகிறார் ஆனால் அதன் பின்பு அவர் இல்லாமல் ஒரு சீன்கூட இல்லை என்கின்ற நிலைமைக்கு இயக்குர் அவருடைய கேரக்டரை வடிவமைத்திருக்கிறார்.

தன்னுடைய உயர் அதிகாரி, எம்,எல்,ஏ,, அமைச்சர் இவர்களிடத்திலெல்லாம் விஜயகாந்த் ஆவேசமாக பேசுகின்ற அந்த வசனங்கள் எல்லாம் அப்போதைய காலகட்டத்தில் விஜயகாந்தின் தீவிர ரசிகர்களுக்கு மனப்பாடமாகிவிட்டது. அந்த அளவுக்கு அரசியல் வியாதிகளை வெளுத்து கட்டி இருந்தார் விஜயகாந்த். அதே நிலைமைதான் இப்பொழுதும் இருக்கிறது என்பது நமக்கு கிடைத்த சோகம்.

விஜயகாந்த் என்றால் சண்டை வித்தியாசமாக இருக்கும். எதிரிகளுடன் நிஜமாகவே பறந்து, பறந்து பந்தாடுவார் என்று பலரும் சொல்வார்கள். உண்மையில் அது மாதிரியான ஸ்டைலான சண்டை காட்சிகளை வேறு எந்த நடிகரின் படத்திலும் நீங்கள் பார்க்க முடியாது. ஒன்லி ஒன் விஜயகாந்த் படத்தில் மட்டும்தான் பார்க்க முடியும்.

வசன காட்சிகளைத் தாண்டி சண்டை காட்சிகளில்தான் கேப்டன் என்ற அந்தப் பெயருக்கு பொருத்தமாக விஜயகாந்த் தன்னுடைய உயிரை கொடுத்து நடித்திருக்கிறார் பல காட்சிகளில் இந்தக் காட்சிகளை எல்லாம் எப்படி படம் ஆக்கினார்கள் என்கின்ற சந்தேகம் இப்போதுவரையிலும் நமக்கு எழுகிறது அப்படி  திரில்லிங்கான சண்டைக் காட்சிகளில்  நடித்துள்ளார் விஜயகாந்த்.

இந்தப் படத்தை திரும்பத் திரும்ப ரசிகர்கள் அப்போதைய காலகட்டத்தில் வந்து வந்து பார்த்ததற்கு காரணம் என்னவென்றால் அது ரம்யா கிருஷ்ணனை பார்க்கத்தான்.  அவர் ஆடுகின்ற “ஆட்டமா தேரோட்டமா” என்று அந்த பாடல் காட்சி இப்போது வரையிலும் இளையராஜாவின் மாஸ் ஹிட்டான பாடல்களில் ஒன்றாகவே இருக்கிறது.

“பாசமுள்ள பாண்டியரே” என்ற பாடல் காட்சியை படமாக்கியவிதம் வேற லெவல் என்றுதான் சொல்ல வேண்டும் அந்த அளவுக்கு அழகு உணர்ச்சியோடு படமாக்கி இருந்தார் ஆர்.கே.செல்வமணி. அதேபோல் ஆட்டமா தேரோட்டமா பாடல் கட்சியும் அந்த நேரத்தில் ரசிகர்களின் மனதை டைவர்ட் செய்யும் விதமாக இருந்தாலும் அந்த பாடல் முடிந்த உடனே ஏற்படும் சண்டைக் காட்சியில் மீண்டும் நம்மை உள்ளேயே இழுத்துவிடுகிறார் இயக்குநர்.

விஜயகாந்தின் மனைவியாக நடித்திருக்கும் ரூபினிக்கு பெரிய அளவுக்கு காட்சிகள் இல்லை என்றாலும் ஒரு கவன ஈர்ப்பை தன் பக்கமும் திருப்புகிறார் சில காட்சிகளில்!

நேர்மையான  வனத்துறை அதிகாரியாக சரத்குமார் நடித்திருக்கிறார். அவருடைய அப்போதைய தோற்றத்தை பார்த்தபோது நிச்சயம் இவர் மிகப் பெரிய ஹீரோவாக வரலாம் என்று அப்பொழுதே நாங்கள் பேச ஆரம்பித்தோம் அந்தப் பேச்சு பின்னாளில் உண்மையானது.

வில்லனாக வீரபத்திரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மன்சூர் அலிகான் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த ஒரு மிகப் பெரிய வில்லன். இந்தப் படம்தான் அவருக்கு அறிமுகப் படம். அட்டகாசமாக தன்னுடைய வில்லத்தனத்தை கடைசிவரையிலும் காட்டியிருக்கிறார். ஹீரோவுக்கு இணையான வில்லனாக நடித்திருக்கும் மன்சூரின் நடிப்பும் சிறப்பு.

ராஜராஜனின் ஒளிப்பதிவு அழகோ அழகு என்று சொல்லலாம். சத்தியமங்கலம் காட்டுப் பகுதியை அவ்வளவு அழகாக படம் பிடித்திருக்கிறார். பாறைகள், ஆறுகள் ஓடும் இடங்கள், உள்ளடங்கிய காடுகள், அதை ஒட்டிய பயணம் செய்யும் சாலைகள் என்று பலவற்றிலும் ஒளிப்பதிவே ஒரு கேரக்டராக தனித்து நிற்கிறது. இரண்டு பாடல் காட்சிகளையும் படமாக்கிய விதத்தில் ராஜராஜன் ஒளிப்பதிவியிலும் தான் ஒரு ராஜராஜன் என்பதை நிரூபித்திருக்கிறார்.

இசைஞானி இளையராஜாவின் இசையை கேட்கவே வேண்டாம். அந்த இரண்டு பாடல்களும் இன்றுவரையிலும் கொடிகட்டி பறக்கின்றன. பின்னணி இசையிலும் அடித்து ஆடி இருக்கிறார் இசைஞானி. வீரப்பனை அறிமுகப்படுத்தும் காட்சியிலும், விஜயகாந்தை அறிமுகப்படுத்தும் காட்சிகளும் அவருடைய இசையே ரசிகர்களின் கை தட்டலுக்கு ஒரு தூண்டுதலாக அமைந்திருக்கிறது.

இத்தனை ஆண்டுகள் கழித்து இந்த படத்தை மறுபடியும் கலர் கிரேடிங் செய்து கொண்டு வந்திருக்கிறார்கள். ஆனால் அதிலும் கொஞ்சம் அரைகுறையாக இருக்கிறது என்பதை நாம் சொல்லத்தான் வேண்டும்.

டப்பிங் ஒட்டவே இல்லை. திரையில் கதாபாத்திரங்கள் பேசி முடித்த பின்பு அவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இப்படி ஒரு தப்பும் தவறுமான வகையில் தொழில் நுட்பத்தை இந்த 2025-ல் கொடுத்திருக்கிறார்கள் என்றால் நிச்சயம் நமக்கு வருத்தம்தான்.

ஃபிலிம் பிரதிகளை டிஜிட்டல் மயமாக்கும்போது ஏற்பட்ட சில பிரச்சனைகளினால் சில இடங்களில் காட்சிகளின் தொடர்பே போய் விடுகிறது. இதையெல்லாம் முன்பே பார்த்து சரி செய்திருக்கலாம். ஆனால், ஏன் இவ்வளவு அவசரமாக கொண்டு வந்தார்கள் என்று தெரியவில்லை.

இந்தப் படத்தில் வீரபத்திரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்த மன்சூர் அலிகானை தமிழ் திரையுலகம்  இன்றுவரையிலும் மறக்கவே இல்லை. ஆனால் அதே சமயம் உண்மையான வீரப்பனை பற்றிய உண்மைகள் வெளிவர தொடங்கிய பொழுது இந்தப் படத்தில் காண்பிக்கப்பட்ட அத்தனையும் அதாவது வீரபத்திரனின் கேரக்டர் ஸ்கெட்ச் முழுவதும் பொய் என்பது நமக்குத் தெரிந்தது.

ஒரு பரபரப்பான கிரைம், திரில்லர் கதையை பரபரப்பான திரைக்கதையை வைத்துக்கொண்டு மிக அழகான இயக்கத்தினால் இந்தப் படத்தை சூப்பர் ஹிட் படமாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி அவருக்கு நமது மனமார்ந்த பாராட்டுக்கள்.

இந்தப் படத்தை எடுத்துக் கொண்டிருக்கும்போதே பல்வேறு பிரச்சனைகள், விபத்துக்கள்… அதனால் தொழில் நுட்ப கலைஞர்கள் இரண்டு பேரும் மரணம் ஆன சம்பவும் நடந்திருக்கிறது.

இப்படி பெரிதும் கஷ்டப்பட்டு எடுத்த இந்தப் படத்தை இப்போது திரைக்குக் கொண்டு வந்திருக்கும் தயாரிப்பாளருக்கு நமது பாராட்டுக்கள், இந்தப் படம் நிச்சயமாக தமிழ் சினிமாவில் ஒரு மைல் கல் என்று சொன்னால் அது மிகையில்லை. அதேபோல் புதிதாக சினிமா உலகத்தில் கால் பதிக்க வரும் இயக்குநர்கள் நிச்சயமாக பார்க்க வேண்டிய திரைப்படம் இது. இதுவே இந்தப் படத்திற்கு இப்போதுவரையிலும் கிடைத்திருக்கும் மிகப் பெரிய வெற்றி என்று சொல்லலாம்.

இந்தப் படத்தில் விஜயகாந்தின் நடிப்பை பார்த்த பொழுது இவ்வளவு சீக்கிரம் அவரை ஆண்டவன் அழைத்து இருக்கக் கூடாது அல்லது அவர் திரையுலகத்தை விட்டு போயிருக்கும் கூடாது என்ற எண்ணம்தான் பொதுவான ரசிகர்கள் மனதில் ஏற்பட்டது.

மிகச் சிறந்த ஒரு நடிகனை நாம் இழந்து விட்டோம் என்பதுதான் உண்மை. எல்லாப் புகழும் கேப்டன் பிரபாகரன்’ என்ற ‘புரட்சி கலைஞர்’ விஜயகாந்துக்கே போகட்டும்.!

RATING : 4 / 5

Our Score