Upbeat Pictures சார்பில், தயாரிப்பாளர் VRV குமார் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கௌதம் கணபதி இயக்கத்தில், தர்ஷன் நாயகனாக நடிக்க, காவல்துறை பின்னணியில், அதிரடி ஆக்சன் திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் “சரண்டர்”.
இப்படத்தில் தர்ஷன் நாயகனாக நடித்துள்ளார், பாடினி குமார் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் மன்சூர் அலிகான், லால், சுஜித் ஷங்கர், முனிஷ் காந்த் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தயாரிப்பாளர்: VRV. குமார், எழுத்து & இயக்கம் – கௌதமன் கணபதி, ஒளிப்பதிவு : மெய்யேந்திரன், இசை : விகாஸ் படிஸா, எடிட்டர்: ரேணு கோபால், கலை இயக்குநர்: R K மனோஜ் குமார், ஸ்டண்ட்: ஆக்ஷன் சந்தோஷ், ஒலி வடிவமைப்பு: கே.பிரபாகரன் & பி.தினேஷ் குமார், ஒலி கலவை: ஷரோன் J மனோகர், பத்திரிக்கை தொடர்பு : சதீஷ்குமார் S2 Media.
இது ஒரு புதுமையான கதை, திரைக்கதையில் உருவாகி இருக்கும் சஸ்பென்ஸ், திரில்லர் கலந்த திரைப்படம்.
தேர்தல் வாக்குப் பதிவு நடக்கும் ஐந்து நாட்களுக்கு முன்பு ஆரம்பிக்கும் இக்கதை வாக்குப் பதிவு நடக்கும் தினத்தன்று முடிவடைகிறது.
தமிழகத்தின் சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி துப்பாக்கியில் வைத்திருப்பவர்கள் அனைவரும் தங்களுடைய துப்பாக்கிகளை சரண்டர் செய்யும்படி காவல்துறை உத்தரவிட்டுள்ளது. இதையொட்டி நடிகர் மன்சூர் அலிகான் தன்னுடைய கை துப்பாக்கியை சரண்டர் செய்வதற்காக காஞ்சிபுரம் மாவட்டம் திருமழிசை காவல் நிலையத்திற்கு வருகிறார். அங்கே இருக்கும் ஏட்டு பெரியசாமியிடம் தன்னுடைய கை துப்பாக்கியை ஒப்படைக்கிறார்.
அதற்கு முந்தைய நாள் இரவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் சட்டமன்றத் தொகுதிகளில் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பதற்காக கருப்பு பணத்தை கனகு என்ற சுஜித் சங்கர் மூலமாக ஒவ்வொரு தொகுதிக்கும் கொடுத்து அனுப்புகிறார் மாவட்ட அமைச்சர்.
சோளிங்கநல்லூர் தொகுதிக்கான பணத்தை அந்தப் பகுதி இன்ஸ்பெக்டரிடம் கொடுத்து அனுப்புகிறார் கனகு. அந்தப் பணத்தை பெற்றுக் கொண்டு போகும் இன்ஸ்பெக்டர் சென்ற ஜீப் விபத்துக்குள்ளாகி அவர் படுகாயம் அடைகிறார். இப்பொழுது அந்த பணம் எங்கே போனது என்று தெரியவில்லை.
மறுநாள் காலை விழுந்து அடித்துக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடிவரும் கனகு, இன்ஸ்பெக்டரிடம் “அந்தப் பணம் என் கைக்கு கிடைக்காவிட்டால் நடப்பதே வேறு..” என்ற எச்சரித்துவிட்டு போகிறார்.
திருமழிசை ஸ்டேஷனில் ஸ்டேஷன் எஸ்.ஐ.யான ரம்யாவுக்கும், ஏட்டுவான பெரியசாமிக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்படுகிறது. இந்த வாக்குவாதம் மிகப் பெரிய அளவுக்கு வளர்ந்த நேரத்தில் மனம் உடைந்து போன பெரியசாமி ஏதோ ஒரு நினைப்பில் துப்பாக்கியை ஜன்னல் ஓரமே வைத்துவிட்டு லாக்கரில் வைத்து விட்டதாக நினைத்து லாக்கரைப் பூட்டிவிட்டுச் செல்கிறார்.
திருமழிசை இன்ஸ்பெக்டர் ஸ்டேஷனுக்கு வந்தவுடன் அந்தத் துப்பாக்கியை பார்க்க வேண்டும் என்று சொல்ல துப்பாக்கியை தேடுகிறார் பெரியசாமி. துப்பாக்கி கிடைக்கவில்லை துப்பாக்கி காணாமல் போய்விட்டதாக சொல்ல இன்ஸ்பெக்டர் கண்டபடி திட்டுகிறார். அதைக் கண்டுபிடித்து கொடுக்காவிட்டால் டிஸ்மிஸ் உறுதி என்கிறார் இன்ஸ்பெக்டர்.
பெரியசாமி இன்னும் ஆறு மாதங்களில் ஓய்வு பெறப் போகிறார். இந்த நேரத்தில் அவர் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்க… அதே ஸ்டேஷனில் பயிற்சி எஸ்.ஐ.யாக இருக்கும் ஹீரோ தர்ஷன் இன்ஸ்பெக்டரிடம் போராடி நான்கு நாட்கள் அவகாசம் கேட்கிறார். மன்சூர் அலிகான் எப்படியும் ஓட்டு போட்டுவிட்டு வந்துதான் துப்பாக்கியை கேட்க போகிறார். அதனால் அந்த நான்கு நாட்களுக்குள்ளாக எப்படியும் துப்பாக்கியை மீட்டுவிடலாம் என்கிறார். அதுவரையில் மேலிடத்தில் சொல்லாமல் இருங்கள் என்கிறார் தர்ஷன்.
இதற்கு இன்ஸ்பெக்டர் ஒத்துக் கொள்ள அந்த ஸ்டேஷனே துப்பாக்கியைத் தேடி அலைகிறது. துப்பாக்கியை தேடி ஒவ்வொருவராக ஓடுகிறார்கள்.
இன்னொரு பக்கம் இன்ஸ்பெக்டரிடம் கொடுத்து காணாமல் போன அந்த 10 கோடி ரூபாயை தேடி கனகுவின் ரவுடி கும்பலும் அலைகிறது.
இந்த இரண்டு கும்பல்களின் தேடுதல் வேட்டையில் மூன்றாவதாக முனீஸ்காந்தும் ஒரு கள்ளத் துப்பாக்கியை விலைக்கு வாங்குவதற்காக மதுரையிலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருக்கிறார்.
இந்த மூன்று கதைகளும் கிளைமாக்ஸில் ஒரு இடத்தில் சந்திக்கின்றன. அது எந்த இடம்.. துப்பாக்கியை கைப்பற்றினார்களா… இல்லையா… 10 கோடி ரூபாய் பணம் மீட்கப்பட்டதா.. இல்லையா.. என்பதுதான் இந்த சுவையான, பரபரப்பான திரைக்கதை கொண்ட படத்தின் கதை.
படத்தின் ஹீரோவாக தர்ஷன் சொல்லப்பட்டாலும் உண்மையான ஹீரோ ஏட்டு பெரியசாமியாக நடித்திருக்கும் லால்தான்.
இரண்டு பெண் குழந்தைகளுக்கு தந்தை என்ற வகையில் இன்னும் ஆறு மாதத்தில் ஓய்வு பெற இருக்கும் நிலையில் யாருடனும் எந்த பிரச்சனையிலும் மாட்டிக் கொள்ளாமல் அமைதியாக ரிட்டயர்மென்ட் வாங்க வேண்டும் என்று நினைப்பில் இருக்கும் 60 வயதான லால், தன்னுடைய வயதில் பாதி வயதுடைய பெண் எஸ்.ஐ. ரம்யாவின் அநாகரீக பேச்சை கண்டிக்கவும் முடியாமல், ஏற்கவும் முடியாமல் தத்தளித்து கோபத்தில் பொங்குகின்ற அந்த காட்சிகளில் எல்லாம் உண்மையான ஒரு போலீஸ்காரனை நம் கண் முன்னால் காட்டி இருக்கிறார்.
துப்பாக்கி தொலைந்து போன செய்தி அறிந்தவுடன் அந்தப் பதட்டம், அந்த படபடப்பு, இயலாமை, இன்ஸ்பெக்டரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டு எப்படி இந்த பிரச்சனையில் இருந்து தப்பிப்பது என்பது தெரியாமல் அவர் படும் துயரம் உண்மையில் காண சகிக்காதது.
கனகுவின் தம்பியால் அவமானப்படுத்தப்பட்ட அன்று இரவில் மது அருந்திவிட்டு “எனக்கு ஒரு மகன் இருந்திருந்தால் இந்நேரம் அவன் தட்டிக் கேட்டிருப்பானே.. என்னன்னு போய் கேட்டு இருப்பானே..” என்று சொல்லி கோபத்தில் கொந்தளிக்கின்ற அந்தக் காட்சியில் அவருடைய நடிப்பு அட்டகாசம்.
தர்ஷன் புதுமுக நடிகர் என்பதாலும் அவரால் முடிந்த அளவுக்கு தன்னுடைய நடிப்பு திறமையை காண்பித்து இருக்கிறார். கோபத்தில் கொந்தளிக்கும்போதுதான் தர்ஷன் என்ற நடிகரை நாம் காண முடிகிறது. மிக சாதாரணமாக இயல்பான ஒரு தர்ஷனை சில காட்சிகளில் மட்டுமே காண்பித்து இருக்கிறார் இயக்குனர்.
தேர்தல் டூட்டிக்கு போக மாட்டேன் என்று இன்ஸ்பெக்டரிம் அடம் பிடித்து செல்லும் அந்த காட்சியில் தர்ஷனை ரொம்பவே பிடித்து போகிறது. லால் கேட்ட அந்த கேள்வியால் தர்ஷன் உணர்ச்சிவசப்பட்டு காட்டுகின்ற எமோஷன்ஷில் நல்லதொரு நடிப்பை காண்பித்திருக்கிறார்.
வில்லன் சுஜித் சங்கர் வில்லனுக்குரிய பார்மெட்டில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை இந்தப் படத்தில் அழுத்தம் திருத்தமாக கொடுத்திருக்கிறார். அவருடைய முகம் காட்டும் கோபமும், தீவிரமும்… அதைவிட அவர் உடல் மொழிகள் மூலம் அவர் காட்டும் அனாசயமான நடிப்புமே இந்தப் படத்தின் அசத்தல் வில்லன் சுஜித் சங்கர் என்பதைச் சொல்லிவிட்டது.
நேர்மையான, பொறுமையான போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் அருள் சங்கரும் இன்னொரு பக்கம் தன்னுடைய சிறந்த குணசித்திர நடிப்பை இந்தப் படத்தில் காண்பித்து இருக்கிறார்.
படத்தின் முக்கிய துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தப்பட்டிருக்கும் அன்னமும் அவருடைய மகனும் சிறப்பாக நடித்துள்ளனர்.
சுஜித் சங்கரின் தம்பியாக நடித்திருக்கும் கௌஷிக்கின் கோபமும், ஆத்திரமும்… பெரியசாமியைப் பார்க்கும்போதெல்லாம் அவனிடம் வருகின்ற அந்த வெறியும்… அந்த வயதுக்குரிய ஒரு இளைஞனின் கோபத்தை காட்டி இருக்கிறார் கௌஷிக்.
முனீஸ்காந்த் கதாபாத்திரமும் அவருடைய கதையும் படத்திற்கு வெளியில் துறுத்தலாக இருந்தாலும் அந்த நேரத்தில் மைண்டை டைவர்ட் செய்வதற்கு பயன்படுத்தப்பட்டதோடு, படத்தின் டிவிஸ்ட்டுக்கும் உதவியிருக்கிறார் மனுஷ்காந்த்.
படத்தின் பெரும் பகுதி இரவு நேர காட்சிகளாக இருப்பதால் ஒளிப்பதிவாளர் மெய்யேந்திரன் அந்தர் காட்சிகளை உயிர்ப்புடன் படமாக்கி இருக்கிறார் ஆனால், மிக அதிகமான இரவு நேர விளக்குகள் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரிகிறது.
கௌசிக்கும், தர்ஷனுக்கும் அந்தப் பழைய பேருந்தில் நடக்கும் சண்டையை காட்சிப்படுத்தியவிதம் அருமை. அவ்வளவு சின்ன இடத்தில் கேமராவை வைத்துக் கொண்டு எப்படித்தான் அவ்வளவு ஆக்ரோஷமான சண்டையை படமாக்கினார்களோ தெரியவில்லை, அதேபோல் இந்த சண்டை காட்சிகளை வடிவமைத்த சண்டை இயக்குநரையும் மனதார பாராட்ட வேண்டும்.
படத் தொகுப்பாளர் ரேணு கோபால் சண்டை காட்சிகளை நறுக்கி கொடுத்த விதத்திலும் இறுதி கட்சியில் நடக்கும் பரபர காட்சிகளை தொகுத்தளித்தவிதத்திலும் பாராட்டை பெறுகிறார்.
விகாஸ் படிசாவின் பின்னணி இசை காதுகளிலேயே ஒலிக்காத அளவுக்கு படத்தின் திரைக்கதையும், இயக்கமும், நடிப்பும் இருப்பதால் பின்னணி இசையை நாம் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் அந்த அளவுக்கு மிக மென்மையாக பட்டும் படாமல் இசைக்கப்பட்டு இருக்கும் இசையும் பாராட்டுக்குரியதுதான்.
அது உண்மையான திருமழிசை காவல் நிலையமா என்று அனைவரும் சந்தேகப்படும் அளவுக்கு அதன் உட்புறத்தை அழகாக வடிவம் வைத்திருக்கிறார் கலை இயக்குநர் மனோஜ்குமார். அதேபோல் சுஜித் சங்கரின் வீடு, அவருடைய ஐஸ் பேக்டரி இவற்றை அழகாக வடிவமைத்தமைக்கும் நமது பாராட்டுக்கள்.
காவல் நிலையத்துக்குள் நடக்கும் உள் அரசியல்… மேல் அதிகாரிகளுக்கும், கீழ் அதிகாரிகளுக்கும் இடையில் நடக்கும் உரசல்கள், அரசியல்வாதிகளுக்கும் காவல் துறையினருக்குமான பிணைப்புகள், ரவுடிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையில் இருக்கும் சகோதர நட்பு… இவையெல்லாம் இந்தப் படத்தில் அவ்வப்பொழுது சொல்லப்பட்டிருக்கும் உண்மைகள். இந்த உண்மைகள் பின்னிப் பிணைந்து ஒன்றுக்கொன்று தொடர்புபடுத்தி மிக அழகாக பார்க்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும் திரைக்கதை நம்மை மிகவும் ரசிக்க வைத்திருக்கிறது.
முதல் பாதியில் துப்பாக்கி காணாமல் போனதற்கு அடுத்தக் கதையாக கௌசிக்கிற்கும், பெரியசாமிக்கும் இடையில் நடக்கும் அக்கப்போர், அவர்கள் இருவருக்கும் இடையிலான மோதல், அதன் விளைவாக பெரியசாமிக்கு நடக்கும் அநியாயங்கள், அவமரியாதைகள் என்று.. இதுவும் ஒரு தனி கதையாக பிரிந்து சுவாரஸ்யத்தைக் கூட்டியிருக்கின்றன.
இடைவேளைக்குப் பின்பு துப்பாக்கி காணாமல் போன கதையே சில நிமிடங்கள் காணாமல் போய் பெரியசாமி மீதான அவமரியாதையை மிகப் பெரிய கதையாக தொடர்ச்சியான காட்சிகளால் கொண்டு செல்லப்பட கதை அப்படியே போய் விடுமோ என்று ஒரு கணம் பயமே வந்துவிட்டது. நல்ல வேலையாக ஒரு இடத்தில் யூ டர்ன் அடித்து மீண்டும் துப்பாக்கி கதைக்குக் கொண்டு வந்து நிறுத்திவிட்டு நம்மை ஆசுவாசப்படுத்தி இருக்கிறார் இயக்குநர்.
இன்னமும் பல திரைப்படங்களில் போலீஸ் ஸ்டேஷனில் உள்ளே நடக்கும் சடங்குகள், சம்பிரதாயங்கள், வழிமுறைகள் எதுவும் சொல்லப்படாமல் திரைக்கதைக்காக பொய்யான தகவல்களை சொல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். ஆனால், இந்தப் படத்தில் அப்படி சொல்லாமல் 95 சதவீதம் மிக நேர்மையாக காவல் துறையின் விதிமுறைகளை அப்படியே இங்கே சொல்லியிருக்கிறார்கள். இதற்காகவும் இயக்குநருக்கு நமது பாராட்டுக்கள்.
ஒரு மிகச் சிறந்த என்டர்டைன்மென்ட் படம் இது. இந்தப் படத்தை கண்டிப்பாக தியேட்டரில் பார்த்து ரசிக்க வேண்டும்.
மிஸ் பண்ணி விடாதீர்கள்.!
RATING : 4 / 5









