full screen background image

ஜென்ம நட்சத்திரம் – சினிமா விமர்சனம்

ஜென்ம நட்சத்திரம் – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை அமோஹம் ஸ்டூடியோஸ் ஒயிட் லாம்ப் பிக்சர்ஸ் தயாரிப்பில் கே.சுபாஷினி தயாரித்து பெருமையுடன் வழங்க ‘ஒரு நொடி’ பட இயக்குநர் பி.மணிவர்மன் இயக்கியுள்ளார்.

இந்த ‘ஜென்ம நட்சத்திரம்’ படத்தில் தமன் அக்ஷன், மால்வி மல்ஹோத்ரா, மைத்ரேயா, ரக்ஷா செரின், சிவம், அருண் கார்த்தி, காளி வெங்கட், முனிஸ்காந்த், வேல ராமமூர்த்தி, தலைவாசல் விஜய், சந்தான பாரதி, பாய்ஸ் ராஜன், நக்கலைட்ஸ் நிவேதிதா மற்றும் யாசர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு பணிகளை கே.ஜி. மேற்கொள்ள, இசையை சஞ்சய் மாணிக்கம் மேற்கொண்டுள்ளார். படத்தொகுப்பு பணிகளை எஸ். குரு சூரியாவும், கலை இயக்க பணிகளை எஸ்.ஜே. ராம் மேற்கொண்டுள்ளனர். ஆடை வடிவமைப்பை சுபிகா ஏ மேற்கொள்ள காஸ்ட்யூமராக ரமேஷ் பணியாற்றியுள்ளார். சண்டை காட்சிகளை மிராக்கிள் மைக்கேல் படமாக்கி இருக்கிறார். பத்திரிக்கை தொடர்பு – டி ஒன், சுரேஷ் சந்திரா.

ஹீரோ தமன்  சினிமாவில் உதவி இயக்குநர். திருமணம் ஆகிவிட்டது. இவருடைய மனைவியான மால்வி இரவு நேரத்தில் தூங்கும்போது அடிக்கடி தன்னுடைய கனவில் ஒரு கெட்ட ஆவிகளை சந்தித்துக் கொண்டு இருக்கிறார் அதன் மூலம் அவர் ஏதோ ஒன்று தன்னைச் சுற்றி நடப்பதாக நினைத்து பயந்து கொண்டிருக்கிறார்.

இந்த நேரத்தில் ஒரு தயாரிப்பாளர் தமனிடம் கதை கேட்க அழைக்கிறார். தமனும் அவருடைய நெருங்கிய நண்பரும் தயாரிப்பாளரைச் சந்திக்கிறார்கள். கதையைச் சொல்கிறார்கள்.

இதற்கு இடைப்பட்ட நேரத்தில் சட்டமன்ற உறுப்பினரான வேல ராமமூர்த்தி வரும் தேர்தலில் ஜெயிப்பதற்காக முனைப்போடு இருக்கிறார். மக்களுக்கு லஞ்சம் கொடுப்பதற்காக 52 கோடி ரூபாயை பதுக்கி வைத்திருக்கிறார். இந்த நேரத்தில் அவருடைய பி.ஏ. வடிவில் அவருக்கும் ஒரு சோதனை வருகிறது.

எம்.எல்.ஏ.வின் பி.ஏ.வான காளி வெங்கட்டின் 10 வயது மகள் திடீரென்று மயங்கி விட மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகிறாள். அங்கே அவளுக்கு உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டும் எனவும் அதற்காக இருவது லட்ச ரூபாய் தேவை என்றும் மருத்துவர் சொல்கிறார்.

தன் மகளைக் காப்பாற்றுவதற்காக பண உதவி செய்யும்படி வேல.ராமமூர்த்தியிடம் கேட்கிறார் காளி வெங்கட். ஆனால் ராமமூர்த்தி அதை அலட்சியப்படுத்தி காளி வெங்கட்டையும் திட்டி அனுப்புகிறார். இந்தக் கோபத்தில் வேல.ராமமூர்த்தி பதுக்கி வைத்திருந்த அந்த 52 கோடி ரூபாயையும் எடுத்துக் கொண்டு காளி வெங்கட் தப்பிக்கிறார்.

ஆனாலும் எம்.எல்.ஏ.வின் நாட்கள் காளி வெங்கட்டையும், அவரது மனைவியையும் தேடிப் படிக்கிறார்கள். இந்தச் சண்டையில் காளி வெங்கட் உயிரிழக்கிறார். ஆனால் உயிரிழப்பதற்கு முன்பு தமனின் வீட்டருகே குத்துயிரும், குலையுயிருமாக கிடக்கும் காளி வெங்கட் தமினின் மனைவி மற்றும் அவருடைய நண்பர்களிடம் தன்னுடைய சொந்தக் கதை முழுவதையும் சொல்லி பணத்தை எங்கே பதுக்கி வைத்திருக்கிறேன் என்பதையும் சொல்லிவிட்டு தன்னுடைய மகளை எப்படியாவது காப்பாற்றும்படி கேட்டுக் கொண்டு மரணம் அடைகிறார்.

இதே நேரத்தில் தயாரிப்பாளர் தன் கதையில் சொல்லும் மாற்றத்தை ஏற்காமல் தமன் வெளியேறி வருகிறார். அவரிடத்தில் காளி வெங்கட் பற்றியத் தகவல்கள் சொல்லப்பட… உடனடியாக பெங்களூரில் இருந்து சென்னை திரும்பவும் தமன் அந்தப் பணத்தை எடுத்து அந்தக் குழந்தையை காப்பாற்ற வேண்டும் என்று முனைகிறார்.

இந்த நேரத்தில் அந்த செல்போன் பேச்சு கிராஸ் டாக்காக அப்சரின் காதில் விழுகிறது. அப்சர் பணப் பிரச்சினையில் சிக்கித் தவிக்கும் தன்னுடைய நண்பர் முனீஸ் காந்திடம் சொல்கிறார்.

தமன் பணத்தை எடுக்க காளி வெங்கட் சொன்ன இடத்திற்கு தன்னுடைய நண்பர்கள் குழுவுடன் செல்கிறார். அந்தப் பணத்தை எடுப்பதற்காக அதே இடத்திற்கு அதே நேரத்திற்கு முனீஸ்காந்தும், அப்சரும் வருகிறார்கள்.

தமன்னும் அவரது நண்பர்களும் சேர்ந்து பணத்தை தேடும் பொழுது இன்னொரு பக்கம் முனீஸ்காந்தும், அப்சரும் சேர்ந்து இவர்களை வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறிக்கலாம் என்று நினைத்து அந்த இடத்தில் வீடியோ எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் அதே இடத்தில் சைத்தான்களை அரங்கேற்றம் செய்வதற்கான பூஜையும் நடந்து கொண்டிருக்கிறது. அது தெரியாமல் இவர்கள் வந்து அந்த இடத்தில் மாட்டிக் கொள்ள பேய்களின் அட்டூழியமும் ஆரம்பிக்கிறது.

கடைசியாக அந்தப் பணத்தை எடுத்தார்களா.. குழந்தையை காப்பாற்றினார்களா… இல்லையா என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.

நாயகன் தமன் இந்தப் படத்தில் இருந்து சிறப்பாகத்தான் நடித்திருக்கிறார் அவருடைய குரலும் ஒரு தனித்துவம் வாய்ந்தது. அதிலும் நம்மை கவனிக்க வைத்திருக்கிறார். ஆனாலும் இரவு நேர காட்சிகளில் பரபரவென ஓடும் திரைக்கதை அமைப்பில் நடிப்புக்கு ஸ்கோப் உள்ள காட்சிகள் குறைவாக இருப்பதாலும் அவரும் மற்ற நடிகர்களை போலவே நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார்.

அவருடைய நண்பர்களாக நடித்தவர்களும் சிறப்பாகத்தான் நடித்திருக்கிறார்கள். ஹீரோயின் மால்வி தூக்கத்தில் அடிக்கடி பொய் கனவு கண்டு நம்மையும் கொஞ்சம் பயமுறுத்துவதை போலவே நடித்திருக்கிறார். இன்னொரு நாயகியும் இறுதிவரையில் அப்படி ஓடு… இப்படி ஓடு… என்று ஓடி, ஓடி நடித்திருக்கிறார்.

அனைத்து நடிகர், நடிகைகளுக்கும் நடிப்புக்கான அதிகமான ஸ்கோப் இல்லாமல் உடல் உழைப்புக்கான ஸ்கோப் மட்டுமே இந்த படத்தில் அதிகமாக கொடுக்கப்பட்டிருப்பதால் நாமும் இவ்வளவுதான் இவர்கள் நடிப்பை பற்றி எழுத முடிந்திருக்கிறது.

படம் துவக்கத்தில் அந்த பேய்களின் கனவில் வரும் பேய்களை பற்றி சொல்லும் பொழுது ஏதோ ஒரு பேய் வேட்டை காத்திருக்கிறது என்று நாமும் நம்புகிறோம் ஆனால் அந்த பால் அடைந்த பங்களாவுக்குள் நண்பர்கள் கால் வைத்த உடனே கதை அங்கேயே படுத்து விடுகிறது நீ அந்த பக்கம் போய் நீ இந்த பக்கம் போய் என்று சொல்லிவிட்டு அவர்கள் ஓடுகின்ற ஓட்டமும் திரும்பத் திரும்ப ஒரே மாதிரியான காட்சிகள் வந்து நம்மையும் பேய் தூக்கத்தில் ஆழ்த்தி விட்டது.

படத்தின் மிகப் பெரிய பலம் ஒளிப்பதிவாளர் கே.ஜி.யின் ஒளிப்பதிவுதான். மனிதர் ஓட்டமாய் ஓடி இருக்கிறார். கேமராவை தூக்கிக் கொண்டு எப்படி இந்த அளவுக்கு ஓடினார் என்று தெரியவில்லை. அவருடைய அபாரமான உழைப்புக்கு நமது பாராட்டுக்கள்.

இசையமைப்பாளர் சஞ்சய் மாணிக்கத்தின் பின்னணி இசை கூர்ந்து கவனிக்க வைத்திருக்கிறது. பேய் படம் என்றாலும் திரில்லிங் என்றாலும் திகில் என்றாலும் அதற்கென்று ஒரு தனியாக ஒரு இசையமைப்பு உள்ளது. அதை கொஞ்சமும் மாற்றம் இல்லாமல் பின்னணி இசையில் பதிவு செய்து அவ்வப்பொழுது இது பேய் படம் பேய் படம் என்பதை நமக்கு உணர்த்திக் கொண்டே இருக்கிறார் சஞ்சய் மாணிக்கம்.

படத் தொகுப்பாளரையும் நிச்சயமாக பாராட்ட வேண்டும். பங்களாவுக்குள் நடைபெறுகின்ற காட்சிகள் எல்லாம் தொகுத்து வழங்கியதில் மிகுந்த பிரயத்தனப்பட்டு இருக்கிறார். அவருடைய உழைப்புக்கு நமது பாராட்டுக்கள்.

1976-ம் ஆண்டிலேயே உலக சினிமா ரசிகர்களை அதிர வைத்த ஒரு அதிரடித்  திரைப்படம் ஓமன்’. அந்தப் படம் வந்த பின்புதான் பல நாடுகளிலும் இது போன்ற பேய் படங்களை எடுக்க ஆரம்பித்தார்கள். அந்த வகையில் அந்த ஓமனை காப்பி அடித்து 1991-ம் ஆண்டில் தமிழில் ‘ஜென்ம நட்சத்திரம்’ என்ற படத்தை எடுத்தார்கள். இப்போது அதே பெயரிலேயே அதே கதையை கொஞ்சம் மாற்றி இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள்.

படத்தின் துவக்கத்திலேயே ‘சைத்தான்’ என்ற கேரக்டர் எப்படி உலகத்திற்கு அறிமுகமானது? இயேசு கிறிஸ்துவின் பைபிளில் இருந்து எப்படி எடுத்தாளப்பட்டது என்பதை எல்லாம் தெளிவாக சொல்லி இருக்கிறார்கள்.

அதன் பிறகு அந்த சைத்தான் இங்கே தமிழ்நாட்டில் சென்னைக்கு வந்து அந்த பாழடைந்த பங்களாவில் தன்னை நிறுவிக் கொள்வதற்காக என்னென்ன வேலைகள் செய்கிறது என்பதை தன்னால் முடிந்த அளவுக்கான வகையில் எடுத்துக் கொடுத்திருக்கிறார் இயக்குநர்.

படத்தின் மையக் கரு பேய்களா அல்லது பேய்களை வைத்துக் கொண்டு மனிதர்கள் ஆடும் ஆட்டமா? என்பதை தெளிவாக வரையறுத்து இருக்க வேண்டும். ஆனால், இயக்குநர் இரண்டையுமே பாதி பாதியாக கலந்து பேய்களும் இருக்கின்றன… அதேபோல் பேய்களை வைத்து மனிதர்களும் ரகளை செய்கிறார்கள் என்பதுபோல படத்தை எடுத்துக் கொடுத்திருப்பதால் இந்தப் படம் நமக்கு பாதி பேய் படம், பாதி மனிதர்கள் படம் என்று உள்ளுணர்வு சொல்ல படத்தின் மீதான ஆர்வமும் தீர்ந்து போய்விட்டது.

படத்தின் துவக்கத்தில் சைத்தானை பற்றி இவர்கள் கொடுக்கின்ற பில்டப்புகளை பார்த்த பொழுது அந்த சைத்தானை வைத்துதான் படத்தை முடிக்க போகிறார்கள் என்று நினைத்தால், கடைசியாக அந்த சைத்தானை கண்ணில்கூட காட்டவில்லை என்பதுதான் சோகத்திலும் சோகம்.

   

RATING : 2.5 / 5

Our Score