GPS Creations நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் G.P. செல்வகுமார் தயாரிப்பில், அழகான ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ‘பேபி & பேபி’.
இப்படத்தில் ஜெய் நாயகனாக நடிக்க, நடிகர் சத்யராஜ் திருப்புமுனை பாத்திரத்தில் நடித்துள்ளார். யோகிபாபு மிக முக்கியமான ஒரு கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
‘நாளைய தீர்ப்பு’ படத்தில், விஜய்யின் முதல் கதாநாயகியாகவும், ‘பவித்ரா’ படத்தில் அஜித்தின் ஜோடியாகவும் நடித்த, நடிகை கீர்த்தனா இப்படத்தில் ஜெய்யின் அம்மாவாகவும், நடிகர் சத்யராஜுக்கு ஜோடியாக மீண்டும் திரையில் களமிறங்கியுள்ளார். நடிகை பிரக்யா நாக்ரா, நடிகர் ஜெய்க்கு ஜோடியாக நடித்திருக்கிறார். மற்றொரு நாயகியாக புதுமுகம் சாய் தன்யா நடித்துள்ளார்.
இவர்களுடன் ஆனந்தராஜ், ஸ்ரீமன், மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, இளவரசு, சிங்கம்புலி, நிழல்கள் ரவி, கே.பி.ஒய்.ராமர், கே.பி.ஒய்.தங்கதுரை, ஆர்.ஜே.விக்னேஷ்காந்த், சேசு ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.
எழுத்து, இயக்கம் – பிரதாப், இசை – D. இமான், ஒளிப்பதிவு – T.P. சாரதி, படத்தொகுப்பு – K.ஆனந்தலிங்ககுமார், பத்திரிக்கை தொடர்பு – சதீஷ்குமார்.
தமிழ் சினிமாவில் ரசிகர்கள் குடும்பங்களோடு இணைந்து ரசிக்கும் படங்கள் வருவது அரிதாகிவிட்டது. அந்த வகையில் குடும்ப உறவுகளின் பின்னணியில், குழந்தைகளை மையப்படுத்தி, அனைத்து தரப்பினரும் கொண்டாடும் வகையில் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. காமெடியும், எமோஷனும் சம அளவில் கலந்து ஒரு அசத்தலான ஃபேமிலி எண்டர்டெயினராக இப்படத்தை தந்திருக்கிறார் அறிமுக இயக்குநரான பிரதாப்.
சத்யராஜ் கோவையைச் சேர்ந்தவர் இவருடைய மகன் ஜெய். இவர் சத்யராஜின் பேச்சை கேட்காமல் பிரக்யா நக்ராவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டு துபாய் சென்று விடுகிறார்.
துபாயிலேயே ஜெய்க்கு ஒரு பையன் பிறக்கிறான். இந்த செய்தியை சத்யராஜுக்கு தெரிவிக்கப்பட தன்னுடைய குடும்பத்திற்கு வாரிசு பிறந்து விட்டதாக நினைத்து உடனடியாக ஜெய்யையும், பிரக்யாவையும் பேரணையும் அழைத்துக் கொண்டு கோவைக்கு வரும்படி சொல்கிறார் சத்யராஜ். இதனால் ஜெய்யும், பிரக்யாவும் மகனான கைக்குழந்தையுடன் துபாயிலிருந்து நாடு திரும்புகிறார்கள்.
மதுரையைச் சேர்ந்தவர் இளவரசு. இவருடைய மகன் யோகி பாபு. இவரும் அப்பாவை எதிர்த்து கொண்டு சாய் தன்யாவைத் திருமணம் செய்து துபாய்க்கு வந்துவிட்டார். இவருக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது.
ஜோதிடத்தில் மிகுந்த நம்பிக்கை உள்ள இளவரசு, அவருடைய குடும்பத்தில் அடுத்த பெண் குழந்தை பிறந்தால் அடுத்தடுத்து நல்ல காரியங்கள் நடக்கும் என்று ஜோதிடர் சொல்லியிருப்பதை உண்மையாக முழுமையாக நம்புகிறார் இளவரசு.
இந்த நேரத்தில் அவருடைய மகன் யோகிபாபுவுக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதை அறிந்து உடனடியாக யோகிபாபுவையும், அவருடைய மனைவியையும் ஊருக்கு வரும்படி அழைக்கிறார் இளவரசு. இதனால் யோகிபாபுவும் அவருடைய மனைவி பெண் குழந்தையுடன் ஊர் திரும்புகிறார்கள்.
ஆனால் சென்னை விமான நிலையத்தில் நடக்கும் ஒரு சின்ன குட்டி கலாட்டாவில் இரண்டு குழந்தைகளும் இடம் மாறி விடுகிறார்கள் யோகி பாபுவின் குழந்தை ஜெய்யிடமும், ஜெய்யின் குழந்தை யோகிபாபுவிடமும் மாறி வந்துவிட குழப்பம் ஏற்படுகிறது.
இந்த குழந்தையை மறுபடியும் கொடுத்து விடலாம் என்று நினைக்கின்றபொழுது குடும்பத்தில் ஒவ்வொரு பிரச்சனையாக வந்து நிற்க இரண்டு பெற்றோர்களும் தவியாய் தவிக்கிறார்கள்.
இறுதியில் என்ன ஆனது..? இந்தக் குழந்தைகள் மறுபடியும் இடம் மாற்றினார்களா? அவர்களுடைய ஒரிஜினல் அம்மா, அப்பாவை சென்றடைந்தார்களா என்பதுதான் இந்த பேபி அண்ட் பேபி படத்தின் சுவையான நகைச்சுவையான திரைக்கதை.
ஜெய்க்கு மிக நீண்ட நாட்கள் கழித்து ஒரு நல்லதொரு கதாபாத்திரம் படைத்திருக்கிறது. குழந்தைக்காக மல்லுக்கட்டும் கேரக்டர். அதே சமயம் அப்பாவுக்கு பயந்து போய் இருக்கும் இடங்களில் மட்டும் அவருடைய நடிப்பு வெளிப்பட்டிருக்கிறது
சத்யராஜ் கண்டிப்பான அப்பாவாக அந்தக் கேரக்டருக்கு ஏற்றபடி நடித்திருக்கிறார். இளவரசு முழுக்க, முழுக்க ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ள ஒரு கிராமத்து மனிதராக நடித்துள்ளார். தன் மகனே ஆனாலும் ஜோதிடத்தை விட்டுக் கொடுக்காமல் பேசுபவராக மிகவும் ரசிப்பதுபோல தன்னுடைய நடிப்பை காண்பித்திருக்கிறார்.
ஹீரோயின்கள் பிரக்யா நக்ராவுக்கும், சாய் தன்யாவுக்கும் மிகப்பெரிய அளவுக்கு ஸ்கோப் இல்லை என்றாலும் பிள்ளைகளை எண்ணி கண்ணீர் விடும் காட்சிகளில் மட்டும் கொஞ்சமே நடித்திருக்கிறார்கள்.
படம் முழுக்க, முழுக்க காமெடி என்று சொல்லப்பட்டு விட்டதால் காமெடி நடிகர்கள் அத்தனை பேரையும் கொண்டு வந்து திணித்திருக்கிறார்கள்.
துப்பறியும் இன்ஸ்பெக்டராக வந்து ஏதோ ஒரு பக்கம் பூந்தி வாயேன் என்று யோகி பாபுவால் அழைக்கப்படும் ரெடின் கிங்ஸ்லி சிச்சுவேஷனில் சிரிக்க வைக்கிறார். ஸ்ரீமன் காஞ்சனா-3 அந்த கதாபாத்திரத்தை இன்னுமும் மறக்காமல் அது போலவே நடித்து காண்பித்து இருக்கிறார். மொட்டை ராஜேந்திரன் கூலிப்படையின் தலைவனாக நடித்திருக்கிறார். சிங்கம் புலி தன்னுடைய ஸ்பெஷல் வசன உச்சரிப்பினால் கவனிக்க வைக்கிறார். எப்போதும் போதையில் அலப்பறை செய்யும் ராமர் கொஞ்சம் சிரிக்க வைத்து இருக்கிறார். இன்னொரு பக்கம் தங்கத்துரையும் சேஷுவும் வரும் காட்சிகளில் கவனிக்க வைத்திருக்கிறார்கள்.
படத்தின் ஒளிப்பதிவாளரை நிச்சயமாகப் பாராட்ட வேண்டும். கேமராவில் ஒரு சிறிய குறைகூட இல்லாமல் படம் முழுவதும் ஒரே மாதிரியான ஒளிப்பதிவை மிக அழகாக கொடுத்திருக்கிறார். பாடல் காட்சிகளிலும் கேமராவின் பங்களிப்பு அதிகம்.
இமானின் இசையில் அழகிய அமுதே பாடல் அட்டகாசம். அந்தப் பாடல் இந்த ஆண்டின் மிகச் சிறந்த பாடலாக இருக்க வாய்ப்புண்டு. காமெடி படம் என்பதால் அதற்கு ஏற்றவாறு காட்சிகளை நறுக்கித் தந்திருக்கிறார் எடிட்டர் ஆனந்த்.
பல ஆண்டுகளுக்கு முன்பாக ராம்கி, விவேக் நடிப்பில் ‘எனக்கு ஒரு மகன் பிறப்பான்’ என்ற திரைப்படம் இதே போன்ற ஒரு குழந்தை இடம் மாறுதல் கதையில் வந்தது. ஆனால், அந்தப் படத்தில் இதைவிட மிக அதிகமாக சிரிப்பலை தியேட்டரில் எழுந்தது என்பது மறுக்க முடியாத உண்மை.
ஆனால் இந்தப் படத்தில் அந்த அளவுக்கு நகைச்சுவை இல்லை என்றாலும் ஓரளவு நம்மை புன்னகைக்க வைத்திருக்கிறார்கள். சிரிக்கவும் வைத்திருக்கிறார்கள்.
இந்தப் படத்தின் இயக்குநரான பிரதாப்பிற்கு மிகச் சிறந்த திரைக்கதை எழுதும் ஆற்றலும், காமெடி இயக்கமும் இருக்கிறது. அதை இன்னும் அடுத்தடுத்த படங்களில் மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வார் என்று எதிர்பார்க்கிறோம்.
RATING : 3.5 / 5









