full screen background image

’செம்பியன் மாதேவி’ – திரைப்பட விமர்சனம்

’செம்பியன் மாதேவி’ – திரைப்பட விமர்சனம்

இந்தப் படத்தை லோக பத்மநாபன் தயாரித்து, பாடல்களை எழுதி. இயக்கி, நாயகனாக நடித்தும் உள்ளார்.

படத்தில் லோக பத்மநாதன் நாயகனாகவும், அம்சரேகா நாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் ஜெய்பீம் மொசக்குட்டி, மணிமாறன், ரெஜினா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – கே.ராஜசேகர், இசை – லோக பத்மநாபன், படத்தொகுப்பு – ராஜேந்திரசோழன், பாடல்கள் – லோக பத்மநாபன், வா.கருப்பன், கவிஞர் அரவிந்த், கலை இயக்கம் – பிரவீன், பின்னணி இசை – ஏ.டி.ராம், சண்டை இயக்கம் – மெட்ரோ மகேஷ், நடன இயக்கம் – செல்வி, சக்தி, எழுத்து, இயக்கம் – லோக பத்மநாபன்.

வட தமிழகத்தில் திருவண்ணாமலே அருகேயிருக்கும் செம்பியன் என்ற கிராமத்தில் 2004-ம் ஆண்டு தலித் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்படுகிறார். அந்த இளைஞரின் படுகொலைக்கு காரணமானவர்களை சட்ட ரீதியாக தண்டிக்க அவரது தந்தை 10 வருடங்களாக போராடிக் கொண்டிருக்க, கொலையாளிகள் யார்? என்பதையே காவல்துறை கண்டு பிடிக்காமலேயே இருக்கிறது.

இதற்கிடையே, படுகொலை செய்யப்பவட்டவரின் தங்கை நாயகி அம்சரேகாவை நாயகன் லோக பத்மநாபன் காதலிக்கிறார். ஆரம்பத்தில் சாதி பாகுபாட்டுக்கு பயந்து நாயகனின் காதலுக்கு நாயகி எதிர்ப்பு தெரிவித்தாலும், ஒரு கட்டத்தில் நாயகன் மீது நம்பிக்கை ஏற்பட்டு அவரை காதலிக்க தொடங்குகிறார்.

காதலர்களிடையே நெருக்கம் அதிகரிக்க, இருவரும் உடல் ரீதியாக ஒன்றிணைந்து விடுகிறார்கள். இதனால், நாயகி கர்ப்பமடைந்து விடுகிறார். கர்ப்பமடைந்த நாயகி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு நாயகனிடம் கேட்க, அவர் என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறுவதோடு, தனது சமூகத்தைச் சேர்ந்த நண்பர்களிடம் உதவி கேட்கிறார்.

ஆனால், இதை தங்களுடைய நண்பனின் பிரச்சனையாக பார்ப்பதை விட்டுவிட்டு தங்கள் சமூகத்திற்கு ஏற்பட்ட இழுக்காக நினைக்கும் அந்த சாதி வெறிப் பிடித்தவர்கள், நண்பனின் காதலியை கொலை செய்ய திட்டம் போட, அவர்களிடம் இருந்து நாயகி தப்பித்தாரா? இல்லையா..? அவரது காதல் வெற்றி பெற்றதா? என்பதையும், தலித் இளைஞரின் படுகொலைக்கான பின்னணி மற்றும் அதை தெரிந்து கொண்ட தந்தையின் அடுத்தக் கட்ட நடவடிக்கையை உண்மைக்கு நெருக்கமாக சொல்வதுதான் இந்த ‘செம்பியன் மாதேவி’ திரைப்படம்.

படத்தை இயக்கி, தயாரித்து, இசையமைத்திருப்பதோடு கதையின் நாயகனாகவும் நடித்திருக்கும் லோக பத்மநாபன் பார்ப்பதறகு சம காலத்திய சினிமா நாயகனாக இல்லாமல் கதையின் நாயகனாக பயணித்து கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார்.

உயர் சாதி என்று சொல்லிக் கொள்ளும் சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், சக மனிதர்களிடம் எந்தவித பாகுபாடும் காட்டாமல் சமமாக பழகுவது, சாதி வெறியர்களால் தனது காதலிக்கு நேர்ந்த கொடுமையை கண்டு கொந்தளிப்பது என உணர்வுப்பூர்வமாக நடித்திருக்கிறார்.

ஆனாலும் நாயகியின் கர்ப்பத்தைத் தெரிந்து கொண்டவுடன் திருமணம் முடிப்பதற்கான முடிவுகளை எடுக்கக் கூட முடியாமல் தவிக்கும் சின்னப் பையன் கேரக்டர் ஸ்கெட்ச்சில் நாயகன் பேசுவதுதான் படத்திற்கு மிகப் பெரிய மைனஸ் பாயிண்ட். இந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வராமல் அடுத்தடுத்த வேலைகளுக்குள் போவதும், கலைத்துவிடு என்று சொல்வதும் நாயகனின் கேரக்டரை தாழ்த்திவிட்டது.

நாயகியாக நடித்திருக்கும் அம்ச ரேகாவுக்கு கதாநாயகிக்கான அம்சங்கள் குறைவாக இருந்தாலும், கதாபாத்திரத்திற்கு பொருந்துவதோடு, கொடுக்கப்பட்ட வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார். குறிப்பாக இறுதிக் காட்சியில் தன் காதலனை திருமணம் செய்துக் கொண்டு வாழ வேண்டும் என்ற எண்ணத்தை அவர் வெளிப்படுத்தும் இடத்தில் அவரது நடிப்பு குறிப்பிடத்தக்கது. 

ஜெய் பீம் மொசக்குட்டியின் லீலைகள் கொஞ்சம் சிரிக்க வைத்தாலும், நிறையவே முகம் சுழிக்க வைக்கிறது. ஆனால், நகைச்சுவை என்பதால் அவரது கள்ளத்தனத்தை கண்டுக்கொள்ளாமல் விட்டுவிடலாம். வில்லனாக மணிமாறன், ரெஜினா என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.

லோக பத்மநாபன் இசையில், அரவிந்த், லோக பத்மநாபன், வா.கருப்பன் ஆகியோரது வரிகளில் பாடல்கள் கமர்ஷியலாக இருக்கிறது. பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர் கே.ராஜசேகரின் கேமரா, காட்சிகளை எளிமையாக படமாக்கினாலும், கதாபாத்திரங்களின் உணர்வுகளையும், அவர்களின் வலிகளையும் ரசிகர்களிடத்தில் நேர்த்தியாக கடத்தியிருக்கிறார். படத் தொகுப்பாளர் ராஜேந்திர சோழனின் பணியும் திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறது.

முதல் படத்திலேயே நடிப்பு மட்டும் இன்றி இயக்கம், இசை மற்றும் தயாரிப்பு என பல களங்களில் பயணித்திருக்கும் லோக பத்மநாபன், தற்போதும் நாட்டின் எதாவது ஒரு பகுதியில் நடந்துக் கொண்டிருக்கும் சாதிய வன்கொடுமைகள் பற்றி தைரியமாக சொல்லியிருப்பதோடு, அதன் பின்னணியில் இருக்கும் அரசியலையும் மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். குறிப்பாக சாதிய வன்கொடுமையில் காதலர்களும், அவர்களது எதிர்கால கனவுகளும் எப்படி சிதைக்கப்படுகிறது என்பதை மிக அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்.

இருந்தாலும் இயக்கத்தில் போதாமையும், நடிப்பில் தேறாமையும் படம் நெடுகிலும் வலம் வருவதால் படத்தை ஆஹா.. ஓஹோவென்று பாராட்ட முடியவில்லை. சாதிய அடக்கு முறைகளை எதிர்க்கும் படமென்று சொல்லிவிட்டு ஆதிக்க சாதியால் அவமானப்படுத்தப்படும் சாதிக்காரர் மட்டும் தவறான பெண் தொடர்புகளை வைத்திருக்கிறார் என்று காட்டுவது அநியாயமில்லையா.. இது படத்தில் அந்த சாதியையும் சேர்த்தல்லவா கீழே தள்ளியிருக்கிறது..! குதிரை குப்புறத் தள்ளியதோடு, லாயத்தையும் இழுத்துப் பூட்டிய கதையாகிவிட்டது..!

தமிழக வரலாற்றில் நீங்கா இடம் பெற்றிருக்கும் பேராசான் ராஜராஜ சோழனின் பெரியம்மாவான செம்பியன் மாதேவியின் பெயரை நாயகியின் பெயருக்குச் சூட்டியிருக்கும் இயக்குநர் அந்த அளவுக்குப் பெருமைப்படும் வகையில் படத்தை உருவாக்கவில்லை என்பது வருத்தத்திற்குரியது..!

RATING : 2 / 5

Our Score