full screen background image

ராயன் சினிமா விமர்சனம்

ராயன் சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

படத்தில் தனுஷ் நாயகனாக நடித்துள்ளார். சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், பருத்திவீரன் சரவணன், எஸ்.ஜே.சூர்யா, துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, செல்வராகவன், பிரகாஷ்ராஜ், கீதா கைலாசம் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – ஓம் பிரகாஷ், கலை இயக்கம் – ஜாக்கி, இசை – ஏ.ஆர்.ரஹ்மான், படத்தொகுப்பு – பிரசன்னா, சண்டை பயிற்சி இயக்கம் – பீட்டர் ஹெயின், எழுத்து, இயக்கம் – தனுஷ்.

இந்தப் படம் நடிகர் தனுஷின் 50-வது படம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஒரு மலை கிராமத்தில் வசித்து வந்த காத்தவராயன் என்னும் தனுஷ் தன் தாய், தந்தை திடீரென்று காணாமல் போனதால் அனாதையாகிறார். கைக்குழந்தையாய் இருக்கும் தங்கையை விற்க நினைத்த ஊர்ப் பூசாரியை வெட்டிக் கொலை செய்துவிட்டு தன் தம்பிகள் சந்திப் கிஷன், காளிதாஸ் ஜெயராம் மற்றும் தங்கை துஷாரா விஜயனுடன் சென்னைக்கு பிழைப்பு தேடி வருகிறார் தனுஷ்.

சென்னையில் அவர்களுக்கு சேகர்’ என்னும் செல்வராகவன் அடைக்கலம் தந்து வேலையும் போட்டுக் கொடுத்து தங்க வைத்துப் பார்த்துக் கொள்கிறார். மூட்டை தூக்கி தன் குடும்பத்துக்காக உழைக்க ஆரம்பிக்கும் தனுஷ் இப்போது வடசென்னையில் ஒரு பாஸ்ட்புட் கடையை நடத்தி வருகிறார்.

தாய், தந்தை இல்லாத குறை தெரியாத அளவுக்கு தம்பிகளையும் தங்கையையும் வளர்த்திருக்கும் தனுஷ் மீது அவர்களுக்கும் பாசம் உண்டு. தம்பி ‘மாணிக்கவேல் ராயன்’ என்னும் காளிதாஸ் கல்லூரியில் படித்து வருகிறான். இன்னொரு தம்பியான ‘முத்துவேல் ராயன்’ என்னும் சந்தீப் கிஷன் மட்டும் குடிப் பிரியராகவும், ரவுடியாகவும் இருக்கிறான். இவனும், ‘மேகலா’ என்ற அபர்ணா பாலமுரளியும் காதலர்கள். தங்கை ‘தர்கா’ என்னும் துஷாரா வீட்டில் இருக்கிறார்.

அந்த ஏரியாவில் மிகப் பெரிய ரவுடிக் கும்பல் தலைவர்களாக இருப்பவர்கள் துரையப்பா’ என்னும் பருத்தி வீரன் சரவணணும், ‘சேது’ என்னும் எஸ்.ஜே.சூர்யாவும். இவர்கள் இருவருக்குமிடையே பல ஆண்டுகளாக ரத்தப் பகை நடந்து வருகிறது. ஆனால், இப்போது ஏனோ அமைதியாக இருக்கிறார்கள்.

இந்த நேரத்தில் போலீஸ் கமிஷனராக வந்து சேர்கிறார் பிரகாஷ்ராஜ். அவருடைய தந்தை சப்-இன்ஸ்பெக்டராக இருந்தபோது இந்த ரவுடிக் கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அந்தக் கொலைக்குப் பழி வாங்கத் துடிக்கும் பிரகாஷ்ராஜ், சரவணன், எஸ்.ஜே.சூர்யா இரு தரப்பினரையுமே போட்டுத் தள்ள பிளான் போடுகிறார்.

இந்தப் பிளானின்படி ‘பருத்தி வீரன்’ சரவணனின் மகனுக்கு ஸ்கெட்ச் போட்ட சமயத்தில் எதிர்பாராமல் தனுஷின் தம்பியான சந்தீப் கிஷனும் இடையில் நுழைந்ததால் சரவணனின் மகனைக் கொன்ற பழி சந்தீப் கிஷன் மீது விழுகிறது.

இப்போது சரவணன் சந்தீப் கிஷனை கொல்லப் போவதாகச் சொல்ல..  ராயனோ தன் தம்பியைக் காப்பாற்றத் தானே களத்தில் குதிக்க..! அங்கே ரத்த ஆறு ஓடத் துவங்குகிறது. இந்த ரத்த வெறியாட்டத்தில் ராயன் மற்றும் அவரது குடும்பத்தினர் தப்பித்தார்களா, இல்லையா? என்பதே இந்த ராயன்’ படத்தின் மீதி கதை.

படத்தின் நாயகனான தனுஷ் வழக்கம்போல் தன் அசுரத்தனமான நடிப்பை காண்பித்திருக்கிறார். வெற்று மொட்டைத் தலையுடன், முறுக்கு மீசையுடனும், எப்போதும் சிரிப்பேயில்லாத சீரியஸான முகத்துடன் கடைசிவரையிலும் வலம் வந்திருக்கிறார் தனுஷ்.

அதிகம் பேசாமல், முக பாவனையிலேயே காட்சியை நகர்த்தும்விதமாக அமைதி விரும்பியாகவே காட்சியளிக்கும் தனுஷ், பொருளைக் கையில் எடுத்தவுடன் காட்டும் ஆட்டம் அகோரம்.

தம்பிகளைக் கண்டிப்பதிலும், தங்கை மீது காட்டும் பாசத்திலும், வன்முறையை எந்தக் கோணத்திலும் தன் குடும்பம் தொட்டுவிடக் கூடாது என்பதில் உறுதியாய் இருக்கும் அந்த நடிப்பிலும் தனுஷ் மிகவும் பிடித்தவராக தெரிகிறார்.

சந்தீப் கிஷனின் புரிதலற்ற தன்மை.. காளிதாஸின் அவசரக்குடுக்கைத்தனம்.. இதையெல்லாம் தாங்கிக் கொண்டு இவர்களை கரை சேர்க்க அவர் படும்பாடு.. எதிர்பாராத சூழலில் மாட்டிக் கொண்டதால் தானே பொருளைக் கையில் எடுத்து சின்னாபின்னமாகியும் தங்கை மீதான பாசத்தைக் கைவிடாமல் கடைசிவரையிலும் பாசமுள்ள அண்ணனாக நடித்திருப்பது தனுஷின் கேரக்டர் ஸ்கெட்ச்சை உயர்த்தியிருக்கிறது.

சண்டை காட்சிகளில் தனுஷ் காட்டியிருக்கும் ஆவேசமும், சூர்யா மற்றும் சரவணனுடன் பேசும்போது காட்டும் ஸ்டைலான நடிப்பும், “எனக்கு இன்னொரு பேர் இருக்கு” என்ற பாணியில் திடீர், திடீரென்று வில்லத்தனமாகப் பேசும்போதும் அவருக்குள் இருக்கும் அசுரன்’ அசுரத்தனமாக வெளிப்பட்டிருக்கிறான். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்!

தம்பிகளாக நடித்திருக்கும் சந்திப் கிஷனும், காளிதாஸ் ஜெயராமும் தங்களுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர். அண்ணனிடம் பார்வையில் இருந்து விலகி தனியாளாக நடை போடத் துடிக்கும் சந்தீப் கிஷனின் நடிப்பும், அபர்ணாவிடம் சண்டையிட்ட பின்பு டாஸ்மாக் கடையில் வந்து புலம்பித் தள்ளும்போதும் ரசிக்க வைத்திருக்கிறார்.

காளிதாஸ் ஜெயராஜ், அண்ணனையே குத்திவிட்டோமே என்ற குற்றவுணர்ச்சியில் சிக்கித் தவித்து கடைசியில் தங்கையின் கையில் குத்துப்பட்டு சாகும்போது நம் பரிதாபத்தைப் பெற்றுக் கொள்கிறார்.

சந்திப் கிஷனின் காதலி ‘மேகலா’வாக நடித்திருக்கும் அபர்ணா பாலமுரளி மிக சிறப்பான யதார்த்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இவரது குண்டான உருவமும், துடிப்பான நடிப்பும் முற்பாதியில் படத்துக்கு மிகப் பெரிய பிளஸ் பாயிண்ட்டை கொடுத்து படத்தை ரசிக்க வைத்திருக்கிறது.

தங்கை ‘துர்கா’வாநடித்திருக்கும் துஷாரா விஜயன் 10 படங்களின் நடிப்பை இந்த ஒரு படத்திலேயே கொட்டிக் கொடுத்திருக்கிறார். கூடவே பல சண்டைக் காட்சிகளிலும் நடித்து, குத்து வாங்கி, ரத்தம் சிந்தி நம்மைப் பெரிதும் கவர்ந்திழுக்கிறார். ‘ராயன்’ அண்ணனை எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்காமல் பேசுவதும், அண்ணனை காப்பாற்ற உயிர்த் தியாகம் செய்யவும் துடிக்கும் அவரது நடிப்பு படத்தின் மிகப் பெரிய பிளஸ் பாயிண்ட் என்றே சொல்லலாம்.

தன்னை பாலியல் பலாத்காரம் செய்த திலீபனை சம்ஹாரம் செய்யும் காட்சியிலும், பாடல் காட்சியில் வெறிகொண்டு ஆடிவிட்டு காளிதாஸ் ஜெயராமை அதே பாணியில் தீர்த்துக் கட்டும் காட்சியிலும் ஆத்தாடி.. இதுக்கு ராயனே பரவாயில்லை என்றுகூட சொல்ல வைக்கிறார்.

தனுஷ் குடும்பத்திற்கு அடைக்கலம் கொடுத்து கடைசிவரையிலும் அவர்களுக்கு எல்லாமுமாக இருக்கும் செல்வராகவன் தனது மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். “ராயன் உன்னை எப்படி கொல்லப் போறான்னு நினைச்சேன். சிரிப்பு வருது” என்று சாகும் தருவாயிலும் ராயனுக்கு பில்டப் கொடுத்து சாகும் காட்சியிலும் அழகுற நடித்திருக்கிறார் செல்வா.

வில்லன் துரையப்பா’வாக நடித்திருக்கும் ‘பருத்தி வீரன்’ சரவணன் மாறுபட்ட இயக்கத்தினால் வித்தியாசமான நடிப்பைக் காண்பித்திருக்கிறார். அவருடைய மரணக் காட்சி கொடூரம் என்றாலும் திரைக்கதையின் மிகப் பெரிய டிவிஸ்ட்டே இதுதான்.

இன்னொரு வில்லனாக ‘சேது’வாக நடித்திருக்கும் எஸ்.ஜே.சூர்யா வழக்கமான அவரது டிரேட் மார்க் நடிப்பை சில காட்சிகளில் காண்பித்து நம்மை சிரிக்க வைக்கிறார். அவரது முதல் மனைவியாக நடித்திருக்கும் வரலட்சுமி, தனது சக்களத்தி திவ்யா பிள்ளை சிக்கலில் மாட்டிக் கொண்டதை அறிந்து கொண்டு நமட்டுச் சிரிப்பு சிரிக்கும்போது நம்மையும் சேர்த்து சிரிக்க வைத்திருக்கிறார்.

போலீஸ் கமிஷனராக நடித்திருக்கும் பிரகாஷ்ராஜ் தனது அனுபவ நடிப்பின் மூலம் தனது கேரக்டரை நம்ப வைத்திருக்கிறார்.  

ராயனைக் காப்பாற்றும் மருத்துவராக தேவதர்ஷிணி சில காட்சிகளில் என்றாலும் கவனிக்க வைத்திருக்கிறார். மேலும் சண்டை காட்சிகளில் உயிரைப் பணயம் வைத்து நடித்திருக்கும் அனைத்து சண்டை கலைஞர்களும் தங்களது பங்களிப்பைக் கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.

இப்படத்தின் இன்னொரு நாயகன் இசைப் புயல் ஏ.ஆர்.ரகுமான்தான். படத்தின் டைட்டிலில் துவங்கி, கடைசிவரையிலும் ஒலிக்கும் பின்னணி இசை படத்திற்கு மிகப் பெரிய பூஸ்ட்டாக அமைந்துள்ளது.

முக்கியமாக சரவணன்-எஸ்.ஜே.சூர்யா சந்திக்கும் காட்சிகளிலும், ராயன் இவர்களை சந்திக்கும் காட்சிகளிலும் பின்னணி இசை தரம். அதேபோல் சண்டை காட்சிகளிலும் அனல் தெறிக்க விடும் அளவுக்கு இசையைக் கூட்டிக் குறைத்து ரசிக்க வைத்திருக்கிறார். பாடல்களில் ‘அடங்காத அசுரன்’ பாடல் இளசுகளைக் கொண்டாட வைத்துள்ளது.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் இரவு நேரமாகவே இருப்பதால் ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு அதை அழகுப்படுத்தியிருக்கிறது. அனைத்து சண்டைக் காட்சிகளையும் ஹாலிவுட் லெவலுக்கு சிறப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். ஆனால், அதே நேரம் அதீத வன்முறையும், ரத்தச் சிதறலும் ரசிகர்களை பயமுறுத்துகிறது என்பதும் உண்மைதான்.

கலை இயக்குநர் ஜாக்கியின் கலை இயக்கமும் இந்தப் படத்திற்கு இன்னொரு மிகப் பெரிய பிளஸ்தான். 32 கோடி ரூபாய் செலவு செய்து அந்த வடசென்னை செட்டை அமைத்திருக்கிறார்கள். உண்மையான இடம் போலவே தெரிவதுதான் இந்தப் படத்தின் வெற்றி. அவ்வப்போது ஏரியல் ஷாட்டில் அந்த இடத்தினை பல்வேறு கோணங்களில் படம் பிடித்துக் காட்டும்போதுதான் அதன் விஸ்வரூபம் நமக்குத் தெரிகிறது.

தான் இயக்கிய முதல் படமான ‘பா.பாண்டி’யை குடும்ப பின்னணியில் எடுத்து அனைத்துத் தரப்பினரிடமும் பாராட்டைப் பெற்ற தனுஷ், இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப்குமார், அட்லீக்குப் போட்டியாளராக தன்னை நினைத்துக் கொண்டு உருவாக்கியிருக்கிறார்போலும்!.

படம் ஆரம்பித்தது முதல் இறுதிவரை கலர் டோனில் இருந்து கலை இயக்கம்வரையிலும் தொழில் நுட்பத்தில் சிறப்பாகப் பேசும் அளவுக்கு ஒவ்வொரு காட்சியையும் மிக நேர்த்தியாக செதுக்கியிருக்கிறார் இயக்குநர் தனுஷ்.

ஒரு கேங்ஸ்டர் படத்திற்கு என்ன தேவையோ அந்த அளவுக்கான கதாப்பாத்திரத் தேர்வுடன், அவர்களுக்கான கதை, திரைக்கதை போர்ஷனை எழுதி, எதார்த்தமான நடிப்பையும் அவர்களிடமிருந்து மிக சிறப்பான முறையில் வெளிக்கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர் தனுஷ்.

படத்தின் முதல் பாதி சுவாரஸ்யமான, எதார்த்தமான திரைக்கதையோடு ரசிக்கும்படி அமைந்திருந்தது. ஆனால் இரண்டாவது பாதிதான் குடும்பக் கதையிலிருந்து முற்றிலுமாக விலகி கேங்ஸ்டர் கதைக்குள் ராயனும் நுழைவதாகச் சொல்லி படத்தை சாதாரணமான பழிக்குப் பழி வாங்கும் படமாக மாறிவிட்டது.

தனுஷ் ஒரு இயக்குநராக காட்சிக்கு காட்சி தன்னுடைய உழைப்பையும், திறமையையும் கொட்டியிருக்கிறார். ஆனால் கதை என்ற வஸ்து சாதாரணமானதாக அமைந்துவிட்டதால் அந்தக் கடின உழைப்பு விழலுக்கு இறைத்த நீராகிவிட்டது..!

படத்தின் மேக்கிங்கும், திரைக்கதையும் நன்றாக அமைந்திருந்தாலும் படத்தில் ரசிகனை ஒன்ற வைக்கும் வகையிலான ஒரு ஈர்ப்பு இல்லாமல் போனது படத்தின் மிகப் பெரிய மைனஸ்தான்.

ஒரு கதையாக பார்க்கும்பொழுது நம் மனதைத் தொடும் அளவுக்கு இதில் சென்டிமெண்ட் காட்சிகள் இல்லாமல் போனதாலோ என்னவோ.. துஷாரா மீதுகூட நமக்குப் பெரிய அனுதாபம் வரவில்லை என்பதுதான் உண்மை.

படம் முழுவதிலும் இருக்கும் சில, பல லாஜிக் எல்லை மீறல்களும் படத்தின் கதைக்குப் பங்கம் விளைவித்திருக்கிறது. பிரகாஷ்ராஜ் செய்யும் அத்தனை திரைக்கதையும் அவரும் இன்னொரு கேங்ஸ்ட்ர் போலவே காட்டுகிறது. அத்தனை பேரையும் சுட்டுத் தள்ளிவிட்டு “டிஸ்போஸ் செஞ்சிருங்க..” என்று அலட்சியமாகச் சொல்வதெல்லாம் டான்கள் செய்யும் வேலை.. கமிஷனர்கள் செய்யும் வேலையல்ல..!

கொலை செய்யப்பட்டவர்களை டிரான்ஸ்பர்மரில் தொங்கவிடுவதும், அதைப் பற்றி போலீஸ் கண்டு கொள்ளாமல் இருப்பதெல்லாம் பழங்காலத்துக் கதை. ஒரு இடத்தில்கூட மீடியாக்களை காண்பிக்காதது ஏன் என்றும் தெரியவில்லை. ஒட்டு மொத்தமாய் பார்க்கப் போனால் இந்தக் கதை நடக்கும் காலக்கட்டம் எது என்று நமக்குச் சொல்லப்படாததே படத்தின் மிகப் பெரிய மைனஸ் என்றும் சொல்லலாம்.

ஒரு முழுப் படமாக இதைப் பார்க்கும்போது விக்ரம்’, ‘ஜெயிலர்’ பாணியில் வன்முறையை விரும்பும் இளைய சமுதாயத்தினருக்காக தனுஷ் விரும்பியே இந்தப் படத்தை உருவாக்கியிருப்பதுபோல தெரிகிறது.

அதனாலேயே ‘விக்ரம்’, ‘ஜெயிலர்’ பாணியிலேயே இந்தப் படமும் முதல் 3 நாளிலேயே பிளாக் பஸ்டர் ஹிட் அடித்துவிட்டது.

இனியெல்லாம் இயக்குநர் தனுஷூக்கு சுகமே..!

RATING : 3.5 / 5

Our Score