full screen background image

இங்க நான்தான் கிங்கு – சினிமா விமர்சனம்

இங்க நான்தான் கிங்கு – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை கோபுரம் பிலிம்ஸ் G.N.அன்புசெழியன் வழங்க, அவரது மகளான சுஷ்மிதா அன்புசெழியன் பிரம்மாண்டமான செலவில் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில் சந்தானம் நாயகனாக நடிக்க,  பிரியாலயா என்ற புதுமுகம் கதாநாயகியாக அறிமுகமாகிறார். மேலும் தம்பி ராமையா, மனோபாலா, முனீஷ்காந்த், விவேக் பிரசன்னா, பால சரவணன், மாறன், கூல் சுரேஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

பல வெற்றி படங்களுக்கு கதை, வசனம் எழுதிய எழிச்சூர் அரவிந்தன் இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். D.இமானின் இசையில் மூன்று பாடல்கள் மிக சிறப்பாக வந்துள்ளன. பாடல்களை இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் முத்தமிழ் எழுதியுள்ளனர்.

ஒளிப்பதிவு – ஓம் நாராயண், படத் தொகுப்பு – எம்.தியாகராஜன், கலை இயக்கம் – எம்.சக்தி வெங்கட்ராஜ், சண்டை பயிற்சி இயக்கம் – மிராக்கிள் மைக்கேல், நடன இயக்கம் – கல்யாண், பாபா பாஸ்கர், எழுத்து, இயக்கம் – ஆனந்த் நாராயணன்.

கல்யாண ஏக்கத்தில் தவித்துக் கொண்டிருக்கும் சந்தானம் தனக்குப் பெண் தேடி அலைகிறார். வெறும் பயல் என்பதாலோ என்னவோ தனக்குப் பெண் கிடைக்காமல் இருக்கிறது என்று நினைத்த சந்தானம், 25 லட்சம் ரூபாய் கடன் வாங்கி ஒரு வீட்டை வாங்குகிறார். இப்போதும் பெண் கிடைக்கவில்லை.

தனது நெருங்கிய நண்பரான விவேக் பிரசன்னாவின் மேட்ரிமோனியல் அலுவலகத்தில் வேலைக்கு சேர்கிறார் சந்தானம். அங்கே வேலை பார்த்துக் கொண்டே வரக் கூடிய வரன்களில், தனக்குத் தோதான பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம் என்று எண்ணுகிறார்.

அப்படியொரு வரனாக ரத்தினபுரியின் ஜமீன்தாரர் தம்பி ராமையாவின் ஒரே மகளான பிரியாலயாவின் வரன் வந்து சிக்குகிறது. பெரிய இடம்.. பணத்துக்குப் பஞ்சமிருக்காது என்று நினைத்த சந்தானம் தானே பிரியாலயாவைத் திருமணம் செய்ய எண்ணுகிறார்.

இதற்காக பெண் பார்க்க புரோக்கர் மனோபாலவுடன் ரத்தினபுரிக்கு செல்கிறார். போன இடத்தில் அவசரம், அவசரமாக திருமணமும் நடந்தேறுகிறது. பின்புதான் தெரிகிறது, ரத்தினபுரி ஜமீன்தாரர் மொத்தமாகத் திவாலாகிவிட்டார் என்று.

கட்டிய துணி, மணியுடன் ஜமீன்தார் குடும்பத்தோடு சந்தானத்தையும் அந்த அரண்மனையிலிருந்து வெளியேற்றி அரண்மனைக்கு பூட்டுப் போட்டுவிட்டுப் போகிறார்கள் தம்பி ராமையாவுக்கு கடன் கொடுத்த வங்கிக்காரர்கள்.

வேறு வழியில்லாமல் மனைவி, மச்சான், மாமனாருடன் சென்னைக்கு வரும் சந்தானம் 25 லட்சம் கடனை எப்படி கட்டுவது என்ற குழப்பத்தில் இருக்கிறார். போதாக்குறைக்கு மாமனார் தம்பி ராமையாவும், மச்சான் பால சரவணனும் வீட்டுக்குள் குட்டிக் கலாட்டா செய்து கொண்டிருக்க அதை சமாளிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில், சென்னையில் பல இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு நடத்த ஒரு தீவிரவாத கும்பல் முயல்கிறது. இந்தக் கும்பலைப் பிடித்துக் கொடுத்தால் 50 லட்சம் ரூபாய் பரிசாகக் கிடைக்கும் வாய்ப்பு சந்தானத்துக்கும், அவரது குடும்பத்தினருக்கும் கிடைக்கிறது.

அந்த வாய்ப்புதான் என்ன..? அந்த 50 லட்சம் ரூபாய் சந்தானத்திற்குக் கிடைத்ததா?.. இல்லையா..? என்பதை நகைச்சுவை கலாட்டாக்களின் வழியே சொல்வதுதான் இந்த ‘இங்க நான்தான் கிங்கு’ திரைப்படம்.

இந்தப் படத்தில் சந்தானத்தின் கதாப்பாத்திரம் அனைத்து இளைஞர்களும் ரசித்து கொண்டாடும்விதமாக உருவாகியுள்ளது. மேலும், சந்தானத்தின் ரசிகர்கள் கொண்டாடும்வகையில் படம் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது.

சந்தானம் வழக்கம் போல் காமெடி நாயகனாக வலம் வந்து டைமிங் காமெடியில் அனைவரையும் கலாய்த்துத் தள்ளியிருக்கிறார். மனைவியுடன் டூயட் காட்சிகளில் கலர்புல்லான ஆடைகளை அணிந்து, அட்டகாசமாக நடனமும் ஆடியிருக்கிறார்.  காதல் பாடல் காட்சியில் சந்தானம், நாயகியுடன் காட்டியிருக்கும் நெருக்கம் மற்றைய கமர்ஷியல் ஹீரோக்களின் காதுகளில் நிச்சயமாகப் புகையை வரவழைக்கும்.

மாமனார் தம்பி ராமையா, மச்சான் பால சரவணன் செய்யும் குட்டிக் கலாட்டாக்களை சமாளிக்க முடியாமல் தவித்துவிட்டு வரிசையாக வந்து கொண்டேயிருக்கும் புதிய, புதிய எதிரிகளைப் பார்த்து புலம்பித் தள்ளுவதிலேயே நகைச்சுவையைக் கொணர்ந்திருக்கிறார் சந்தானம்.

சந்தானம் மிகச் சிறந்த காமெடி நடிகர்தான் என்பதை இந்தப் படமும் உறுதி செய்துள்ளது. சந்தானம் இனிமேல் ஹீரோயிஸ கதைகளைக் கைவிட்டுவிட்டு இதுபோல் காமெடி கதைகளில் நடித்தாரென்றால் நிச்சயமாக அவர் ஒரு வெற்றிப் பட நாயகனாகவே தமிழ் சினிமாவில் வலம் வருவார்.

நாயகியாக நடித்திருக்கும் சேலத்துப் பொண்ணு பிரியலயா அழகான, கேமிராவுக்கு ஏற்ற முகத்துடன் பெரிதும் ரசிக்க வைக்கிறார். வழக்கமான கமர்ஷியல் நாயகி வேடம்தான் என்றாலும் அதை நிறைவாக செய்திருக்கிறார். நடனத்திலும் அசத்தியிருக்கிறார். அவ்வப்போது அப்பாவியாய் நடித்து நகைச்சுவைக் காட்சிகளில் சிரிப்பை வரவழைத்திருக்கிறார்.

ரத்தினபுரி ஜமீன்தாரான தம்பி ராமையா படம் முழுவதும் லந்து செய்து கொண்டேயிருக்கிறார். வழக்கமான ஓவர் ஆக்டிங்காக இருந்தாலும் ரசிக்க முடிந்ததாகவும், சிரிப்பை வரவழைப்பதாகவும் உள்ளதால் இவரது நடிப்பினை கை தட்டி ரசிக்கலாம். இவரும், இவரது மகனான பால சரவணனும் செய்யும் காமெடிகள் பல இடங்களில் ரசிகர்களை சிரிக்க வைக்கிறது.

டபுள் ரோலில் அசத்தியிருக்கிறார் விவேக் பிரசன்னா. செத்தப் பொணமாக அதுவும் சிரித்த முகத்துடன் இருக்கும் காட்சிகளில் நகைச்சுவையைத் தனது அமைதியான, முகத்தைக் காட்டியே கொண்டு வந்திருக்கிறார் விவேக் பிரசன்னா.

முனிஷ்காந்த், மாறன், சேசு, சுவாமிநாதன், கூல் சுரேஷ் என்ற சந்தானத்தின் ஆஸ்தான குடும்ப நட்புகள் அனைவரும் ஆளுக்கொரு பக்கம் ஒன்றாகச் சேர்ந்து கூடுதலாக சிரிக்க வைக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ஓம் நாரயணனின் ஒளிப்பதிவு படம் முழுவதையும் கலர்புல்லாக காட்டுகிறது. பாடல் காட்சிகளில் பயன்படுத்தப்பட்டிருக்கும் வண்ணம், படத்தின் தரத்தையும் உயர்த்தியிருப்பதோடு, காமெடி படம் என்பதையும் தாண்டி ஒளிப்பதிவை ரசிக்க வைத்திருக்கிறது.

டி.இமானின் இசையில் பாடல்கள் அனைத்துமே ஹிட்டடித்துவிட்டன. குலுக்கு குலுக்கு’ பாடலும், ஆடலும் இனி வரும் காலங்களில் விழா மேடைகளை கலக்கப் போகிறது. ‘மாலு மாலு’ பாடலும் ஆட வைக்கும். ‘மாயோனே’ பாடல் மெலடியில் கலக்கப் போகிறது.

கதாசிரியர் எழுச்சூர் அரவிந்தனின் கதை புத்தம் புதுசு. அதைவிடவும் ஒவ்வொரு கேரக்டரின் ஸ்கெட்ச்சுமே வித்தியமாசமாகவும், ரசிக்கக் கூடியதாகவும் காமெடிக்குப் பொருத்தமாகவும் அமைந்திருப்பது பாராட்டுக்குரியது. சந்தானத்தின் படத்துக்கே உரித்தான டைமிங்சென்ஸ் காமெடி வசனங்கள் படம் நெடுகிலும் வலம் வருவது எழுத்தாளரின் எழுத்துத் திறமையைக் காட்டுகிறது. எழுத்தாளர் எழுச்சூர் அரவிந்தனுக்கு நமது பாராட்டுக்கள்.

சந்தானத்தின் படங்களில் சினிமா ரசிகர்கள் எதை எதிர்பார்ப்பார்களோ அதன்படியேதான் இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை அமைத்து, இயக்கத்தையும் கச்சிதமாகச் செய்திருக்கிறார் இயக்குநர் ஆனந்த் நாராயணன். அவருக்கும், அவரது குழுவினருக்கும் நமது பாராட்டுக்கள்..!

லாஜிக்கையெல்லாம் பார்க்காமல் குடும்பத்துடன் சென்று படம் பார்த்து சிரித்துவிட்டு வரலாம் என்பதற்கு நாங்கள் கியாரண்டி..!

RATING : 3.5 / 5

Our Score