full screen background image

மலையாள நடிகர் ஷேன் நிகம் நாயகனாக நடிக்கும் ‘மெட்ராஸ்காரன்’ தமிழ்த் திரைப்படம்

மலையாள நடிகர் ஷேன் நிகம் நாயகனாக நடிக்கும் ‘மெட்ராஸ்காரன்’ தமிழ்த் திரைப்படம்

SR PRODUCTIONS நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் புதிய திரைப்படம் மெட்ராஸ்காரன்’.  

மலையாளத்தில் புகழ் பெற்ற கும்பளாங்கி நைட்ஸ்’, ‘ஆர் டி எக்ஸ்’, ‘இஷ்க்’ போன்ற படங்களில் நடித்து புகழ் பெற்றிருக்கும் நடிகர் ஷேன் நிகாம், இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். 

இவருக்கு ஜோடியாக தெலுங்குத் திரையுலகின் மிகப் பெரும் நட்சத்திரக் குடும்பமான சிரஞ்சீவி குடும்பத்தைச் சேர்ந்த முன்னணி நடிகையான நிஹாரிகா நடிக்கிறார். இவர்களுடன் நடிகர் கலையரசன், ஐஸ்வர்யா தத்தா, கருணாஸ், பாண்டியராஜன் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளரான சாம் C.S. இசையமைக்கிறார். ‘ரங்கோலி’ படத்தை இயக்கிய இயக்குநரான வாலி மோகன்தாஸ் இந்தப் படத்தை இயக்குகிறார்.

ஒரு சிறு ஈகோ, ஒருவனின் வாழ்வை எந்த எல்லைக்கு கூட்டிச் செல்லும் என்பதுதான் இப்படத்தின் மையக் கரு. ரங்கோலி படம் மூலம், பள்ளிச் சிறுவர்களின் வாழ்வியலை வண்ணங்களாக தீட்டிய, இயக்குநர் வாலி மோகன்தாஸ், இப்படத்தில் ஒரு சிறு சம்பவம் பெரும் பிரச்சனையாக, இருவர் வாழ்க்கையை புரட்டி எடுப்பதை, பரபரப்பான திரைக்கதையாக படைத்துள்ளார்.

இந்தப் படத்தின் பூஜை நிகழ்வு நேற்று காலை சென்னையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் இயக்குநர் வஸந்த் சாய் பேசும்போது, “மிக மிக சந்தோஷமாக உள்ளது. எனது உதவி இயக்குநர் வாலி மோகன்தாஸ் அடுத்தடுத்த உயரத்திற்குச் செல்வது மகிழ்ச்சி. ஷேன் நிகாமின் ரசிகன் நான், அவரது மலையாளப் படங்களை நிறையப் பார்த்துள்ளேன். தமிழில் அவர் கண்டிப்பாக மிகச் சிறப்பாக வருவார். நிகாரிகாவின் அப்பாவுடன் நான் படம் செய்துள்ளேன். அவருக்கும் சிறப்பான எதிர்காலம் இருக்கிறது. வாழ்த்துக்கள். இப்போதெல்லவாம் தியேட்டரில் சாம் சி.எஸ். பெயர் வந்தாலே கை தட்டல் வருகிறது. கலையரசன் நல்ல நடிகர். இந்தக் குழுவே மிகச் சிறப்பானதாக இருக்கிறது. படம் வெற்றிப் படமாக அமைய என் வாழ்த்துக்கள்..” என்றார்.

இயக்குநர் பொன்ராம் பேசும்போது, “இந்தப் படத்தின் இயக்குநரான வாலி என் நெருங்கிய நண்பர். ஒவ்வொரு படத்திலும் திரைக்கதை பணிகளின்போது பேசிக் கொள்வோம்.  மிகத் திறமையானவர். அவரின் வளர்ச்சியைப் பார்க்க  மகிழ்ச்சியாகவுள்ளது. ஷேன் நிகாம் எனக்குப் பிடித்த நடிகர், கலையரசனும் என் நண்பர். இந்தக் குழுவே மிகவும் உற்சாகம் தரக்கூடிய குழுவாக உள்ளது. இவர்கள் சிறப்பான ஒரு படத்தைத் தருவார்கள் என நம்புகிறேன் இப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்..” என்றார்.

நடிகர் ஹமரேஷ் பேசும்போது, “ரங்கோலியில் இயக்குநர் வாலியுடன் நான் வேலை பார்த்துள்ளேன். மிகச் சிறந்த படைப்பாளி. அவரிடம் இருந்து நான் நிறையக் கற்றுக் கொண்டேன். இப்போது அவர் பெரிய படம் செய்வது மகிழ்ச்சி. ஷேன் நிகாமின் ரசிகன் நான். உங்களைத் தமிழில் பார்க்க ஆவலாக உள்ளேன்.  இந்தப் படம் வெற்றியடைய என் வாழ்த்துக்கள்..” என்றார்.

நடிகை ஐஸ்வர்யா தத்தா பேசும்போது, “இயக்குநர் வாலி உடன் நான் ஏற்கனவே  ஒரு படத்தில் நடித்துள்ளேன். அவர் என்னோட ஃபேவரைட் இயக்குநர். ஜெகதீஷ் என் நெருங்கிய நண்பர். அவர் இந்தப் படத்தைத் தயாரிப்பது மகிழ்ச்சி. 2024 எனக்கு இந்த மெட்ராஸ்காரன் திரைப்படம் அமைந்தது மிகப் பெரிய மகிழ்ச்சி. இந்தப் படம் கண்டிப்பாக மிகச் சிறந்த படமாக இருக்கும். அனைவருக்கும் நன்றி..” என்றார். 

இசையமைப்பாளர் சாம் சி.எஸ். பேசும்போது, “இந்தக் கதை மிகச் சிறந்த கதை. இதில் எல்லோருக்குமே மிக நல்ல ரோல் இருக்கிறது. இந்தப் படத்தின் சின்ன கதாப்பாத்திரம் பெரிய கதாப்பாத்திரம் என்று எதுவும் இல்லை. மிகப் பெரிய எமோஷன் இருக்கிறது. இப்படம் பற்றிய தகவல்கள் ஒவ்வொன்றாக வர வர உங்களுக்குத் தெரியும்.

நடிகர் ஷேன் உடன் மலையாளத்தில் வேலை செய்துள்ளேன்.  அவருக்கு இந்தப் படம் தமிழில் சிறப்பான படமாக இருக்கும். கலையரசன் இந்தப் படத்திற்குப் பிறகு, பெரிய இடத்தை அடைவார். ஒரு டீமாக இந்தப் படம் சிறப்பானதாக அமையும் என நம்பிக்கை இருக்கிறது. அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்..” என்றார்.

நடிகர் கலையரசன் பேசும்போது, “இயக்குநர் வாலி இந்தக் கதையைச் சொன்னபோதே சூப்பராக இருந்தது. எனக்கு இதில் நடிக்க மிகப் பெரிய இடம் இருக்கிறது. படத்தில் நடிக்கும் எல்லோருக்கும் நல்ல இடம் கிடைக்கும். ஷேனுக்கு இந்தப் படம் கண்டிப்பாகச் சிறப்பான படமாக இருக்கும். இந்தப் படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடித்த படமாக இருக்கும். அனைவருக்கும் என் நன்றிகள்..” என்றார்.

தயாரிப்பாளர் ஜகதீஷ் பேசும்போது, “2018-ம் ஆண்டில் நடிகை ஐஸ்வர்யா தத்தா, இயக்குநர் வாலியை எனக்கு அறிமுகப்படுத்தினார். அப்போதே படம் செய்ய வேண்டியது சில காரணங்களால் நடக்கவில்லை.

இயக்குநரின் ரங்கோலி படம் பார்த்தவுடனே உங்களுடன் படம் செய்ய வேண்டுமெனக் கேட்டேன்.  இந்தப் படத்தின் கதையை சொன்னார். மிகவும் பிடித்திருந்தது, உடனே ஆரம்பித்து விட்டோம். ஒவ்வொரு பாத்திரத்திற்கும் இவர்கள்தான் வேண்டுமென தேடித் தேடி ஒருங்கிணைத்தோம். மிக அருமையான கதை. இந்தப் படம் கண்டிப்பாகச் சிறந்த படமாக இருக்கும்.  இயக்குநர் வாலியுடன் மீண்டும் இணைந்து படம் செய்வோம். அனைவருக்கும் நன்றி..” என்றார்.

நடிகை நிஹாரிகா பேசும்போது, “இயக்குநர் வாலி சார் இந்தப் படத்தின் கதையை சொன்னபோதே, எனக்கு ரொம்பவும் பிடித்தது. ஷேன் உடன் நடிப்பது மிகச் சந்தோஷம். இந்தப் படம் எனக்கு மிக முக்கியமான படமாக இருக்குமென்று நம்புகிறேன். அனைவருக்கும் என் நன்றிகள்..” என்றார்.

இயக்குநர் வாலி மோகன்தாஸ் பேசும்போது, “தயாரிப்பாளருக்கு என் முதல் நன்றி. என் படத்தைப் பார்த்துவிட்டுத்தான் கூப்பிட்டார். கதை சொன்ன 5 நிமிடங்களில் இந்தப் படத்தை செய்ய ஒத்துக் கொண்டார். ஷேன் பிரதரை சந்தித்ததே மறக்க முடியாத அனுபவம். அவர் தமிழில் நடிக்க ஒத்துக் கொண்டதற்கு நன்றி.

ஐஸ்வர்யா தத்தாவால்தான் இந்தப் படம் ஆரம்பித்தது அவருக்கு என் நன்றி. நிகாரிகாவை இப்போது தான் நேரில் சந்திக்கிறேன். அவருக்கு இப்படத்தில் நல்ல கதாப்பாத்திரம். சாம் சி.எஸ். ரசிகன். அவருடன் சேர்ந்து பணியாற்றுவது மகிழ்ச்சி. படம் பற்றிச் சொல்ல நிறைய இருக்கிறது படம் முடித்த பின் உங்களிடம் சொல்கிறோம். இந்தப் படத்தில் பணியாற்றும் அனைவருக்கும் என் நன்றிகள்..” என்றார்.

நடிகர் ஷேன் நிகாம் பேசும்போது, “சின்ன வயதிலிருந்தே நிறையத் தமிழ் சினிமா பார்த்துதான் வளர்ந்திருக்கிறேன். கேரளாவில் தமிழ் ஹீரோக்களுக்கு நிறைய ஃபேன்ஸ் இருக்கிறார்கள். அதே போல்தான் நானும். தமிழுக்கு நான் நடிக்க வருவது மகிழ்ச்சியாக உள்ளது.

வாலி சொன்ன கதை  எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்தக் கதை எனக்கு மிக நல்ல வாய்ப்பாக இருக்கும் என்று தோன்றியது. உங்கள் அனைவருக்கும் இப்படம்  பிடிக்குமென்று நம்புகிறேன். அனைவருக்கும் என் நன்றிகள்..” என்றார்.

இப்படத்தின் படப்பிடிப்பை சென்னை, மதுரை, கொச்சி ஆகிய இடங்களில் ஒரே கட்டமாக நடத்தி முடிக்க, படக் குழு திட்டமிட்டுள்ளது.

படம் பற்றிய  மற்ற விவரங்கள் பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

Our Score