369 சினிமா தயாரிப்பில் இசைஞானி இளையராஜாவின் இசையமைப்பில் இயக்குநர் மாதவன் லஷ்மன் இயக்கத்தில் இந்திரஜித், ஐஸ்வர்யா தத்தா, அந்தோணிதாசன், ஜான்விஜய் மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ‘நாதமுனி’.
இசை – இசைஞானி இளையராஜா, ஒளிப்பதிவு – சுகுமாரன், படத் தொகுப்பு – சுரேஷ் அர்ஸ், பாடல்கள் – இசைஞானி இளையராஜா, கங்கை அமரன், கலை இயக்கம் – K.A.ராகவா குமார், சண்டைப் பயிற்சி இயக்கம் – டேஞ்சர் மணி, நடனப் பயிற்சி இயக்கம் – சங்கர், பத்திரிக்கை தொடர்பு – குணா.
இந்தப் படத்தில் ஒரு சாமானிய தகப்பனாக இந்திரஜித் உணர்வுப்பூர்வமாக நடித்திருக்கிறார். ஏழைத் தாயாக ஐஸ்வர்யா தத்தா வாழ்ந்திருக்கிறார். பாடகர் அந்தோணி தாசன், ஜான் விஜய் மற்றும் படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் அனைவரும் இந்த படத்தில் வாழ்ந்திருக்கிறார்கள்.
‘நாதமுனி’ படம் பற்றி இயக்குநர் மாதவன் லஷ்மன் பேசும்போது, “சாமானிய மனிதர்களின் அறமும், சீற்றமும் சக மனிதர்களின் செயல்களால் எவ்வாறு வாழ்வில் வினை புரிகிறது என்பதை கருத்தாளமிக்க கதையாக உருவாகியிருக்கும் படம்தான் இது..” என்றார்.
இந்தப் படத்திற்கு இசையமைக்க இசைஞானி இளையராஜாவிடம் சென்று இயக்குநர் மாதவன் கதை சொன்ன உடனேயே கதை மிகவும் பிடித்துவிட்டதாம் இளையராஜாவுக்கு. படத்தின் கருவும், அதன் நோக்கமும் அவரை வெகுவாக கவர்ந்திருக்கிறது.
படத்திற்கு முத்தான பாடல்களை உருவாக்கிக் கொடுத்துள்ளார் இசைஞானி இளையராஜா. கங்கை அமரன் இந்த படத்தில் ஒரு பாடலை எழுதியிருக்கிறார். மிக நீண்ட வருடங்கள் கழித்து கங்கை அமரன் இளையராஜாவின் இசையில் பாடல் எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
“இந்த ‘நாதமுனி’ திரைப்படம் தமிழ்த் திரையுலகில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்” என்றும் இசைஞானி பாராட்டியுள்ளார்.
தற்போது படத்தின் இறுதிக் கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.