இந்தப் படத்தை பீப்புள் மீடியா ஃபேக்டரி நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் விஷ்வ பிரசாத் தயாரித்துள்ளார்.
இந்தப் படத்தில் சந்தானம், மேகா ஆகாஷ், எம்.எஸ்.பாஸ்கர், மொட்டை ராஜேந்திரன், நிழல்கள் ரவி, ரவி மரியா, ஜான் விஜய், கூல் சுரேஷ், சேஷூ, தமிழ், இட் இஸ் பிரசாந்த், ஜாக்குலின், மாறன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
எழுத்து, இயக்கம் – கார்த்திக் யோகி, தயாரிப்பாளர் – டி.ஜி.விஸ்வபிரசாத், தயாரிப்பு நிறுவனம் – பீப்புள் மீடியா பேக்டரி, இணை தயாரிப்பு – விவேக் குச்சிபோட்லா, இசை – சீன் ரோல்டன், ஒளிப்பதிவு – தீபக், படத்தொகுப்பு – டி.சிவநந்தீஸ்வரன், கலை இயக்கம் – ஏ.ராஜேஷ், சண்டை இயக்கம் – மகேஷ் மாத்யூ, நடன இயக்கம் – எம்.ஷெரீப், பாடல்கள் – அறிவு, பாக்கியம் சங்கர், கவிஞர் சாரதி, கூடுதல் திரைக்கதை – விக்னேஷ் பாபு, விக்னேஷ் வேணுகோபால், உடைகள் வடிவமைப்பு – தினேஷ் மனோகரன், உடைகள் – எம்.சின்னச்சாமி, ஒலிப்பதிவு வடிவமைப்பு – எம்.சரத்குமார், ஒலி கலப்பு – ஹரீஷ், பத்திரிக்கை தொடர்பு – சுரேஷ் சந்திரா, அப்துல் ஏ.நாசர்,
இது 1970-ம் ஆண்டு காலக்கட்டத்தில் நடக்கும் கதை இது. ‘மெட்ராஸ் ஐ’ என்ற கண் நோய் சென்னையில் முதன்முதலாகப் பரவிய காலக்கட்டம். அந்தக் கண் நோய் அப்போதைய காலக்கட்டத்தில் ஒரு கிராமத்தில் பரவினால் என்ன நடக்கும் என்கிற கற்பனை கதையில் உருவாக்கப்பட்டுள்ள படம் இது.
வடக்குப்பட்டி என்னும் கிராமத்தில் வசித்து வரும் சந்தானம் சிறு வயதில் தனக்கேற்பட்ட மோசமான அனுபவத்தினால் கடவுள்கள் மீதும், பக்தி மீதும் ஏளனமாக இருக்கிறார்.
ஊர் மக்களை சாமி பெயரை சொல்லி எளிதாக ஏமாற்றிவிடலாம் என்பதை அறியும் சந்தானம், தனது சொந்த நிலத்தில் ‘கண்ணாத்தா’ என்ற பெண் தெய்வத்தின் பெயரில் ஒரு கோவிலைக் கட்டி வைத்து, அதில் பல்வேறு வகைகளில் மக்களை ஏமாற்றி காசு பார்த்து பிழைத்து வருகிறார். சேஷூவும், மாறனும் இந்த விஷயத்தில் சந்தானத்திற்கு உதவி செய்து வருகிறார்கள்.
அதே ஊரில் வசிக்கும் பெருந்தனக்காரர்களான ஜான் விஜய்யும், ரவி மரியாவும் மாமன், மச்சான்கள். ஆனால் சண்டைக் கோழிகள். அரை முட்டாள்கள். ஜான் விஜய்யின் மகளும், ரவி மரியாவின் மகனும் காதலித்து வருகிறார்கள்.
இந்த நேரத்தில் அந்தப் பகுதிக்கு தாசில்தாராக டிரான்ஸ்பரில் வரும் தமிழ், அந்தக் கோவிலை வைத்து நிறைய பணம் சம்பாதிக்க சந்தானத்திற்கு ஐடியா கொடுக்கிறார். மேலும் அந்த ஐடியா வொர்க் அவுட்டானால் அதில் பங்கு கேட்கிறார். சந்தானம் மிகக் குறைந்த அளவு பங்கு கொடுப்பதாகச் சொல்ல அந்த டீலிங் முறிகிறது.
இதையடுத்து தாசில்தார் தமிழ் செய்யும் ஒரு சதியினால் அந்தக் கோவிலை பூட்டி சீல் வைக்கிறார் மாவட்ட கலெக்டர். இப்போது கோவிலை திறக்க என்ன வழி என்று யோசிக்கிறார் சந்தானம்.
அப்போதுதான் சென்னையில் ‘மெட்ராஸ் ஐ’ என்ற கண் நோய் பரவி வருவதை அறிந்து அந்த நோயை கொண்டு வந்து உள்ளூரில் பரப்பிவிட்டு, கோவில் பூட்டியிருப்பதால் கண்ணாத்தாள்தான் அனைவரையும் தண்டித்துவிட்டதாகச் சொல்லி மக்களை ஏமாற்றி போராட்டம் நடத்த வைத்து, அதன் மூலமாக கோவிலை திறக்க கலெக்டருக்கு அழுத்தம் கொடுக்க நினைக்கிறார் சந்தானம்.
அதே ஊரில் பிறந்து வளர்ந்து இப்போது சென்னையில் அரசு மருத்துவமனையில் மருத்துவராக இருக்கிறார் ஹீரோயின் மேகா ஆகாஷ். அதே அரசு மருத்துவமனைக்கு மெட்ராஸ் ஐ நோயைத் தேடி வரும் சந்தானத்திடம் கடைசி நோயாளியாக ‘மேஜர் சந்திரகாந்த்’ என்னும் நிழல்கள் ரவி சிக்குகிறார்.
அவரிடமிருந்து சேஷூ மூலமாக ‘மெட்ராஸ் ஐ’ நோயை வாங்கி வந்து ஊருக்குள் பரப்பிவிட்டு ஊர் முழுவதையும் ‘மெட்ராஸ் ஐ’ நோயாளிகளின் கூடாரமாக்குகிறார் சந்தானம்.
இப்போது பொதுமக்களின் விருப்பத்திற்கேற்ப கோவிலைத் திறக்க சம்மதம் தெரிவிக்கும் கலெக்டர், “3 நாட்கள் ஊரில் எந்த அடிதடி, பஞ்சாயத்தும் நடக்கக் கூடாது. அப்படி நடந்தால் கோவிலை திறக்க மாட்டேன்” என்று எச்சரிக்கையும் செய்கிறார்.
இனிமேல் அந்த ஊரில் என்ன நடந்தது..? திட்டமிட்டபடி கோவில் திறக்கப்பட்டதா..? அல்லது ஏதாவது அசம்பாவிதம் நடந்ததா..? என்பதுதான் இந்த ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தின் சுவையான, நகைச்சுவையான திரைக்கதை.
முழுக்க, முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட படம் இது. கவுண்டமணியும், செந்திலும் நடித்த ‘உத்தமராசா’ படத்தில் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ என்ற காமெடி ரொம்பவே பிரபலம். அதனால், அதையே இந்தப் படத்துக்குப் பெயராக வைத்திருக்கிறார்கள்.
மக்களின் அறியாமையையும், மூட நம்பிக்கையையும் பயன்படுத்தி எப்படியெல்லாம் ஏமாற்றலாம்.. திருடலாம்.. கொள்ளையடிக்கலாம் என்பதை படம் முழுவதும் செய்து காட்டுகிறார் சந்தானம்.
தனது டிரேட் மார்க் வசன காமெடியையே இதில் ஆத்தாளுக்கு அபிஷேகம் செய்வதைப் போல வாரி வழங்கியிருக்கிறார். கூடவே சிறப்பான இயக்கமும் சேர்ந்து கொள்ள படம் சூப்பர் பாஸ்ட் வந்தே பாரத் ரயில் போல ஓடுகிறது.
சந்தானத்திற்குப் பக்க பலமாக ரவி மரியா-ஜான் விஜய் ஜோடியும், மொட்டை ராஜேந்திரன் அண்ட் கோ-வும், ‘நிழல்கள்’ ரவி தனியாளாகவும், சேஷூவும், மாறனும் இன்னொரு பக்கமும் கலக்கியிருக்கிறார்கள்.
“கேணப் பய ஊருல கிறுக்குப் பய நாட்டாமை..” என்று சொல்வதுபோல ரவி மரியாவும், ஜான் விஜய்யும் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டும், கலாய்த்துக் கொண்டும், படம் நெடுகிலும் டார்க் காமெடியை கொண்டு வந்திருக்கிறார்கள்.
இன்னொரு பக்கம் ‘நிழல்கள்’ ரவி இடையிடையே பொங்கி வரும் ஆங்கிலத்திற்கு இடையில் தனது ஸ்பெஷல் குரலை வைத்தும், மிலிட்டரி ரூல்ஸை சொல்லியும், கண்ணி வெடிகள், எறிகுண்டுகளை வைத்தும் அடக்க மாட்டாத சிரிப்பை அள்ளி தெளித்திருக்கிறார்.
இந்தக் கண்ணி வெடியில் கால் வைத்து மாட்டிக் கொள்ளும் ராஜேந்திரன் அண்ட் கோ-வின் நகைச்சுவை, இந்த ஆண்டு அனைத்து தொலைக்காட்சிகளிலும் காமெடி சீன்களில் வருவதற்கு வாய்ப்புண்டு.
ஒரு சீன் என்றாலும் விழுந்து, விழுந்து சிரிக்க வைத்திருக்கிறார் சேஷூ. “அழகு மலராட” பாடலுக்கு அவர் ஆடும் பரத நாட்டியம் சிடுமூஞ்சிகளைக்கூட சிரிக்க வைத்துவிடும். ஹாட்ஸ் அப் ஸார்..!
ஹீரோயின் மேகா ஆகாஷூக்கு பெரிய அளவுக்கு நடிப்புக்கான காட்சிகள் இல்லையென்றாலும் கிடைத்த இடங்களில் தனது அழகான முகத்தினாலும், தோற்றத்தினாலும் ரசிக்க வைத்திருக்கிறார்.
இயக்குநர் தமிழ், மாறன் இருவரும் அவரவர் கதாப்பாத்திரத்திற்கேற்ற நடிப்பைக் காண்பித்து தப்பித்திருக்கிறார்கள். ஜான் விஜய்யின் மகளாக நடித்திருக்கும் ஜாக்குலினும், ரவி மரியாவின் பேக்கு பையனாக நடித்திருக்கும் இட்ஸ் பிரசாந்தும்கூட தங்களது காதல் நடிப்பிலேயே நகைச்சுவையை வரவழைத்திருக்கிறார்கள். பாராட்டுக்கள்.
1970-கள் காலத்துக் கதை என்பதால் நவீனம் எந்த வடிவத்திலும் தென்பட்டுவிடக் கூடாது என்பதில் கன கச்சிதமாக இருந்து செயலாற்றியிருக்கும் கலை இயக்குநருக்கு நமது பாராட்டுக்கள். அவர் வடிவமைத்த கோவில் சிறப்பு.
ஒளிப்பதிவில் குறைவில்லை. அடிக்கடி காண்பிக்கப்படும் அந்த ஊரின் ஏரி, குளம், வாய்க்கால்களையெல்லாம் பார்க்கும்போது கிராமத்தின் அழகினை நவீனம் எதுவும் செய்துவிட முடியாது என்றே தோன்றுகிறது.
“சாமியே இல்லன்னு சொல்லி ஊருக்குள்ள சுத்திகிட்டு திரிஞ்சியே அந்த ராமசாமிதானே நீ..?” என்ற வசனத்துக்கு சந்தானம், ”நான் அந்த ராமசாமி இல்ல” என்று பதில் சொல்லும் காட்சியும் படத்தில் இடம் பெற்றுள்ளது. இறுதிக் காட்சியில் மீண்டும் ஒரு முறை இந்தக் கேள்வி எழும்போது சந்தானம் பதில் சொல்லாமல் சிரிப்பதுபோல நடிக்க வைத்து படத்துக்கு பங்கம் வராமல் பார்த்து காப்பாற்றியிருக்கிறார் இயக்குநர்.
சந்தானம் மூட நம்பிக்கையை எதிர்க்கிறேன் என்று சொன்னாலும் அவரவர் நம்பிக்கை அவரவர்க்கு. அந்த நம்பிக்கையை வைத்து ஏமாற்றி, காசு பணம் பார்த்திருக்கும் அவரது செயலுக்கு அவர் படத்திலேயே வருத்தம் தெரிவித்திருக்க வேண்டும். அதைச் செய்யாமலேயே அடுத்த ஊரான தெற்குப்பட்டியில் கால் வைத்து அங்கே நடக்கும் ஒரு கிறுக்குத்தனமான பக்தியை தடுக்க முயல்வதாகப் படத்தை முடித்திருக்கிறார்கள்.
மனிதனுக்குப் பக்தியும், வேண்டும்.. உழைப்பும் வேண்டும். இரண்டும் இருந்தால்தான் மனித வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும். இதைச் செய்யாமல் வெறுமனே நகைச்சுவைக்காக மட்டுமே படம் நெடுகிலும் பக்தியை வைத்து கிண்டல் செய்திருப்பதால் ச்சும்மா ஒரு காமெடி படம் என்னும் லேபிளோடு இந்தப் படம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில் சந்தானத்திற்கு இது வெற்றிப் படமாக இருந்தாலும், கருத்தியல் ரீதியாக இதுவொரு மோசமான படம் என்னும் பெயரையும் பெற்றுள்ளது..!
RATING : 4 / 5









