full screen background image

ஆயிரம் பொற்காசுகள் – சினிமா விமர்சனம்

ஆயிரம் பொற்காசுகள் – சினிமா விமர்சனம்

படத்தின் முழுக்கதையையும் படத்தின் தலைப்பே சொல்லிவிடுவது போன்ற திரைப்படங்கள் வெகு அரிதுதான். அந்த அரிதான திரைப்படங்களில் ‘ஆயிரம் பொற்காசுகள்’ திரைப்படமும் ஒன்று.

இப்படத்தின் அடிநாதமே அந்த ‘ஆயிரம் பொற்காசுகள்’தான். ‘பொற்காசுகள்’ என்றதும் ஏதோ புராண காலத்தை ஒட்டிய ஃப்ரீயட் படமாக இருக்குமோ என்று எண்ணிவிட வேண்டாம். இது இன்றைய காலகட்டத்தில் தஞ்சாவூர் நிலப்பரப்பில் உள்ள கிராமத்தில் நடக்கும் எளிய நகைச்சுவைகள் நிரம்பிய காமெடித் திரைப்படம்.

அரசாங்கம் கொடுக்கும் இலவசங்களை வாங்கிக் கொண்டு, பக்கத்து வீட்டின் ஆடு கோழிகளை திருடித் தின்று, உறங்கி உடல் வளர்க்கும் தாய் மாமன் சரவணனிடம், ஊரில் இருக்கும் பிரச்சனைகளில் இருந்து தப்பிப்பதற்காக சில காலம் வந்து அடைக்கலம் ஆகிறார் மருமகன் விதார்த்.

இவர்களின் இந்த சோம்பேறித்தனமான வாழ்க்கையில் அவர்களே எதிர்பாராத வண்ணம் ஒரு ஆயிரம் பொற்காசுகள் கிடைக்கின்றன. அந்தப் பொற்காசுகளை அடைவதில் இவர்களுக்கு ஏற்படும் சிக்கல்கள், சவால்கள், இறுதியில் அந்தப் பொற்காசுகள் அவர்களுக்கு கிடைத்ததா…? இல்லையா..? என்பதை நகைச்சுவை கலந்து விவரிக்கிறது திரைக்கதை.

விதார்த் என்றாலே வித்தியாசமான கதைக்களம் என்பது படத்திற்குப் படம் நிருபனமாகிக் கொண்டே வருகிறது. அது ஆயிரம் பொற்காசுகள் திரைப்படத்திலும் தொடர்கிறது. தன் கதாபாத்திர முக்கியத்துவம் குறித்துக் கூட அதிகமாக கவலை கொள்ளாமல், கதை அற்புதமாக இருந்தாலே போதும் என்கின்ற கவனத்துடன் கதைகளை தேர்வு செய்யும் ஒரு சில நடிகர்களில் விதார்த் முக்கியமானவர்.

இப்படத்திலும் அவருக்கு இணையான, ஏன் மிகச் சரியாக சொல்வதென்றால் அவர் கதாபாத்திரத்தைவிட முக்கியத்துவம் அதிகமுள்ள பல கதாபாத்திரங்கள் பல இப்படத்தில் இருக்கின்றது. அதைப் பற்றியெல்லாம் கவலைபடாமல் தனக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்து கொடுத்திருக்கிறார் விதார்த். நடிப்பதற்கோ, காமெடி செய்வதற்கோ பெரிதாக ஸ்கோப் இல்லாத கதாபாத்திரமாக இருந்தாலும்கூட, வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் சிறப்பாக நடித்திருக்கிறார்.

சரவணன் ஊருக்குள் வெட்டியாக கெத்துக் காட்டிக் கொண்டு, உண்டோமா.. உறங்கினோமா என்று பொழுதை கழிக்கும் கதாபாத்திரம், கழிவறையே கட்டாமல், கழிவறை கட்டிவிட்டது போல் கணக்குக் காட்டி பணம் வாங்கும் அலப்பறைகளில் அசால்டாக நடித்திருக்கிறார். ஆயிரம் பொற்காசுகளை அபேஸ் செய்வதற்காக மாமனும், மருமகனும் ஒருவரை ஒருவர் ஏமாற்ற முனையும் போட்டிகள் ரசிக்க வைக்கின்றன.

இவர்கள் தவிர்த்து படத்தின் மிகப் பெரிய பலமாகத் திகழ்வது துணை கதாபாத்திரங்கள்தான். அதிலும் குறிப்பாக எதிர் வீட்டு மீன் வியாபாரியாக வரும் ‘ஹலோ’ கந்தசாமியும், குழி வெட்டும் தொழிலாளியாக வரும் ஜார்ஜ் மரியான் மற்றும் அவரின் கூட்டாளியாக வரும் ஆசாமியும் சேர்ந்து அதகளம் செய்கிறார்கள். இவர்கள் மட்டுமின்றி நகை செய்யும் ஆசாரியாக நடித்துள்ள சுப்ரமணியும் கலகலப்பூட்டுகிறார். இவர்களோடு மற்றொரு விசித்திரமான கதாபாத்திரமான வட இந்திய பிச்சைக்காரன் கதாபாத்திரமும் காமெடிக்கு கட்டியம் கூறுகிறது.

முதல் பாதியில் வரும் காதல் காட்சிகள் சலிப்பூட்டுகின்றன. செம்மலர் அன்னம் கதாபாத்திரமும், பார்வதி நாயர் கதாபாத்திரமும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான வண்ணத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அந்த இரண்டு கதாபாத்திரங்களிலும் ஈர்ப்பு குறைவு. காதலித்து வீட்டை விட்டு ஓடிப் போக வேண்டும் என்று முடிவு செய்யும்போது ரிப்பீட் மோடில் வரும் அந்தக் காட்சிகள் ரசனைக்கு விருந்தாகின்றன.

பொற்காசுகளை பங்குப் பிரிக்கும் சண்டையில் ஒவ்வொருத்தராக வந்து ஒட்டிக் கொள்ளும் திரைக்கதை படத்தை மேலும் சுவாரஸ்யப்படுத்துகிறது. தொடர் வண்டியைப் போல் பைக்கில் செல்லும் விதார்த், சரவணன் ஆகியோரைத் தொடர்ந்து ஜார்ஜ் மரியம், சுப்ரமணி, பாம்பு பிடிக்கும் நபர், ஜார்ஜின் கூட்டாளி என ஒவ்வொருவராக ஒருவரை ஒருவர் பிடித்துக் கொண்டு செல்லும் காட்சியில் கற்பனை நயம் லயிக்க வைக்கிறது.

இன்ஸ்பெக்டராக வரும் பாரதி கண்ணன் கதாபாத்திரமும் போலீஸ் ஸ்டேஷன் செட்டப்பும் சட்டயர் போல அமைந்திருக்கிறது. ஓரிரு காட்சியில் வரும் பஞ்சாயத்து தலைவர் கதாபாத்திரமும், ஜார்ஜ்-யின் மனைவியாக வரும் கதாபாத்திரம் என சிறு சிறு கதாபாத்திரங்கள்கூட மையக் கதையான பொற்காசுகளுடன் கனெக்ட் ஆகும் விதம் கலகலப்பானது.

பார்வையாளர்களை சிரிக்க வைக்க வேண்டும் என்கின்ற ஒற்றை நோக்கோடு எடுக்கப்பட்ட படம் என்பதால் ஆரம்பத்தில் இருந்தே, எதையும் சீரியஸாக பார்க்கும் மனநிலை ஏற்படவில்லை, ஏனென்றால் இந்தப் படத்தில் சீரியஸாக எதுவுமே நடந்துவிடாது என்கின்ற முன் முடிவை நமக்குள் இயக்குநர் விதைத்துவிடுகிறார்.

ஆரம்பப் பாதியில் காமெடியை மொத்தமாக குத்தகைக்கு எடுக்கும் ‘ஹலோ’ கந்தசாமி, டி.வி.எஸ். ஓட்டும் லாவகமான உடல்மொழியில் தொடங்கி கிடைக்கும் சின்ன சின்ன இடங்களில்கூட கிச்சுகிச்சு மூட்டுகிறார். பாம்பு பிடிக்க வந்த கதாபாத்திரத்தின் மீது சந்தேகம் திரும்பும்போது அவர் திடீரென்று தன் கைகளை அறுத்துக் கொண்டு ஆசாரி சுப்ரமணியத்தையும் அதுபோல் கையை அறுத்து நிருபிக்கச் சொல்லும் காட்சியில் குபீரென்று சிரிப்பொலி எழும்புகிறது.

என்னதான் சில மொக்கையான காமெடிக் காட்சிகளும், அதரபழசான காதல் எபிசோடுகளும் நம்மை கடுப்பேற்றினாலும், ஆங்காங்கே வரும் க்யூட்டான காமெடிகள் அதை மறக்கடித்து விடுகின்றன.

க்ளைமாக்ஸ் காட்சியினை ஒட்டி வரும் அந்த சேசிங் எபிசோடு நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது. அந்த எபிசோடின் நீளம் சற்று அதிகம், என்றாலும்கூட நகைச்சுவையின் சுவை அதில் அதிகம் என்பதால் அந்த குறைபாடையும் நாம் மறந்துவிட்டு சிரிக்கிறோம்.

ஜோகனின் இசை படத்தின் காட்சிகளுக்கு பெரும் பலமாக இருந்து காட்சிகளுக்கான உணர்வுகளை வெகு எளிதாக நம்மிடம் கடத்துகிறது.

படத்தின் இயக்குநர் ரவி முருகையாவிற்கு இது முதல் படம். ஆயிரம் பொற்காசுகளின் பின்னணியில் ஒரு அற்புதமான ஒன் லைனரைப் பிடித்திருக்கிறார். இந்த ஒன்லைனரை திரில்லராக அணுகாமல் காமெடி ஜானரில் தான் அணுகப் போகிறோம் என்பதை முடிவு செய்துவிட்டு, அதற்கு ஏற்றார் போல் சில காமெடிக் காட்சிகளையும் திரைக்கதையில் கோர்வையாக இணைத்திருக்கிறார்.

காதல் காட்சிகளையும் முதல் பாதியில் நாயகன் விதார்த் மற்றும் சரவணனில் கதாபாத்திர வார்ப்பையும் சற்று பலவீனமாக அமைத்திருந்தாலும்கூட காமெடிக் காட்சிகளில் கஞ்சத்தனம் காட்டவில்லை என்பதே திரைக்கதையின் பலம்.

படம் நெடுக வாய்விட்டு சிரித்து வெகு காலம் ஆகிவிட்டது என்று ஏங்குகின்ற ரசிகர்களின் ஏக்கத்தைப் போக்குவதற்காகவே ‘ஆயிரம் பொற்காசுகள்’ வெளியாகி இருக்கிறது என்று சொன்னால் அது மிகையில்லை.

குடும்பத்துடன் குதூகலமாக ஒரு திரைப்படத்தைப் பார்க்க வேண்டும் என்று நினைக்கும் குடும்பத்தார் கண்டிப்பாக திரையரங்கிற்குச் சென்று ஆனந்தம் என்னும் ஆயிரம் பொற்காசுகளை அள்ளிக் கொண்டு வரலாம்.

ஆயிரம் பொற்காசுகள் – குதூகலம்

RATING : 3 / 5

Our Score