full screen background image

ஜோ- சினிமா விமர்சனம்

ஜோ- சினிமா விமர்சனம்

விஜய் டிவி புகழ் ரியோராஜ் நடிப்பில் அறிமுக இயக்குநர் ஹரிஹரன் ராம் எழுதி இயக்கியுள்ள படம் ‘ஜோ’.

2010-ஆம் ஆண்டு கல்லூரி வாழ்வில் ஹீரோ ரியோராஜ் ஜாலியான பையனாக இருக்கிறார். அவரது கல்லூரிக்கு கேரளத்து அழகியான மாளவிகா மனோஜ் படிக்க வருகிறார்.

அவரைக் கண்டதும் தமிழ் சினிமாவின் ஆதிகாலத்து வழக்கப்படி காதல் கொள்கிறார் ஹீரோ ரியோராஜ். அந்தக் காதலுக்கு ஓகே சொல்கிறார் மாளவிகா மனோஜ்.

இருவரும் கல்லூரியில் காதல் வளர்த்து வருகிறார்கள். காதலர்களுக்கே உரித்தான சண்டைகளும் கொஞ்சல்களுமாய் இவர்கள் காதல் வளர்கிறது.

படிப்பு முடிந்ததும் ரியோராஜ் மாளவிகா வீட்டில் வந்து பெண் கேட்கிறார். அங்கு சில அசம்பாவிதங்கள் நடந்துவிடுகின்றன. அதனால் பல சோகங்களும் நிகழ, ரியோராஜ் விரக்தியின் விளிம்புக்குச் செல்கிறார்.

அதன் பின்னர் அவர் வாழ்வில் இன்னொரு பெண் (பாவ்யா) நுழைகிறார். அந்தப் பெண் இஷ்டப்பட்டு நுழையவில்லை. நுழைக்க வைக்கப்படுகிறாள்.

அந்தப் பெண்ணுக்கும் ரியோ ராஜுக்குமான life எப்படி போகிறது? அதில் எழும் எமோஷ்னல் பிரச்சனை எப்படி தீர்வை அடைகிறது? என்பதாக படத்தின் மீதிக் கதை விரிகிறது.

நாயகனாக ரியோராஜுக்கு இதுதான் முதல் படம் என கொள்ள வேண்டும். காதல் காட்சிகளில் நல்ல இளைஞனாக எமோஷ்னல் காட்சிகளில் நல்ல காதலனாக கணவனாக நடித்துள்ளார். வெகு சில இடங்களில் மட்டும் இன்னும் பெட்டரான நடிப்பை கொடுத்திருக்கலாம்.

படத்தின் இரு பெரும் தூண்கள் நாயகிகள் மாளவிகா மனோஜும், பாவ்யாவும். இருவரும் ஆளுக்கொரு பாதி என படத்தை பங்கு போட்டு நடிப்பில் வெளுத்திருக்கிறார்கள்.

கண்களாலே பல உணர்வுகளை இருவரும் கடத்துகிறார்கள். மாளவிகா மனோஜ் கண்களை குளமாக்கினால், பாவ்யா மனதை ரணமாக்குகிறார். இருவருக்கும் வாழ்த்துகள்!

ஹீரோவின் நண்பர்களாக வருபவர்களில் அன்புதாசனை விட அதிகமாக கவனிக்க வைக்கிறார் ஒரு கருத்த இளைஞர். நண்பர்கள் பட்டாளத்தின் தேர்வு சிறப்பாக அமைந்துள்ளது.

சித்துகுமாரின் பின்னணி இசை படத்தின் முக்கியமான உணர்வுகளை நமக்கு அழகாக கடத்த உதவுகிறது. இரண்டு மாண்டேஜ் பாடல்களும், கல்லூரி விழாவிற்காக போடப்பட்ட ஒரு ஹைபீட் இசையும் சூப்பர்.

ஒளிப்பதிவாளர் தன் பணியைச் செவ்வனே செய்துள்ளார். எடிட்டர் இயக்குநரிடம் கலந்தாலோசித்து 10 நிமிடத்தை வெட்டியிருக்கலாம்.

மனித வாழ்வில் காதல் மிக முக்கியமானதுதான். ஆனால் அதற்காக அவசரப்பட்டு தவறான முடிவை எடுத்துவிடக் கூடாது என்பதை படம் ஆங்காங்கே பேசுகிறது.

எல்லோர் வாழ்விலும் ஒரு மறக்க முடியாத கடந்த காலம் இருக்கும். அதை நிகழ் காலத்தோடு தொடர்புபடுத்தி வாழ்ந்தால் வாழ்தல் கடினமாகிவிடும் என்பதையும் படம் பேசுகிறது.

சின்னச் சின்ன லாஜிக் கேள்விகள் படம் பார்க்கும் நம்மை டிஸ்டர்ப் செய்தாலும் over all fullfil பண்ணிவிடுகிறது இந்த ‘ஜோ’ திரைப்படம்.!

Our Score