full screen background image

“சிறுவர்களை இந்தப் படத்திற்கு அழைத்து வர வேண்டாம்” – படத்தின் தயாரிப்பாளர் வேண்டுகோள்!

“சிறுவர்களை இந்தப் படத்திற்கு அழைத்து வர வேண்டாம்” – படத்தின் தயாரிப்பாளர் வேண்டுகோள்!

லேடீஸ் ஹாஸ்டலை மையமாக வைத்து ‘ரா..ரா.. சரசுக்கு ரா..ரா..’ என்றொரு படம் உருவாகி இருக்கிறது.

இந்தப் படத்தை ஸ்கை வாண்டர்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஏ.ஜெயலட்சுமி தயாரித்துள்ளார்.

இப்படத்தில் கார்த்திக், காயத்ரி பட்டேல், K.P.Y.பாலா, மாரி வினோத், காட்பாடி ராஜன், விஸ்வா, ரவிவர்மா, அபிஷேக், பெஞ்சமின், சிம்ரன், தீபிகா, காயத்ரி, சாரா, ஜெயவாணி, அக்ஷிதா, விஜய் பிரசாத் ஆகியோர் நடித்துள்ளனர்.

இசை – ஜி.கே.வி., ஒளிப்பதிவு – ஆர்.ரமேஷ், எழுத்து, இயக்கம் – கேஷவ் தெபுர்.

இந்தப் படம் பற்றி இயக்குநர் கேஷவ் தெபுர் பேசும்போது, “இது ஒரே இரவில் நடக்கும் கதை. யதேச்சையாக நடந்த ஒரு கொலையில் மூன்று அப்பாவிப் பெண்கள் மாட்டிக் கொண்டு அதிலிருந்து தப்பிக்க அவர்கள் படும் கஷ்டங்கள்தான் இந்தப் படத்தின் கதை. இதன் திரைக்கதை பரபரப்பாகவும், காமெடியாகவும் அமைக்கப்பட்டுள்ளது. இப்போது பரவி வரும் கால் பாய் கலாச்சாரத்தால் ஏற்படும் சிக்கல்களும் நகைச்சுவையுடன் சொல்லப்பட்டுள்ளன.

பரபரப்பான, விறுவிறுப்பான, கிளுகிளுப்பான சம்பவங்கள் நிறைந்து க்ரைம், ஆக்சன், ஹாரர் அனைத்தும் நிரம்பிய ஒரு கதையாக இது இருக்கும்.

படத்தில் லேடீஸ் ஹாஸ்டலில் இக்கால இளைஞர்களும் யுவதிகளும் பேசும் வசனங்களையும், சில கிளாமர் காட்சிகளையும் பார்த்த சென்னை மண்டல அதிகாரி இந்தப் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் தர முடியாது என்று சொல்லிவிட்டார். அதனால் மும்பை ரிவைசிங் கமிட்டிக்கு சென்று 60 கட்களோடு ஏ சர்டிபிகேட் வாங்கினோம்..” என்றார் இயக்குநர்.

படம் பற்றித் தயாரிப்பாளர் ஏ.ஜெயலட்சுமி பேசும்போது, “இந்தப் படம் வயது வந்தவர்களுக்கான ஒரு படம்தான். இதைச் சொல்வதில் எனக்குத் தயக்கம் இல்லை. இது 18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே பார்க்க வேண்டிய படம். இளைஞர்கள் மட்டுமல்ல, பெரியவர்களும் பார்க்கலாம்.

இப்போது வருகிற படங்கள் U/A சான்றிதழ் பெற்றுக் கொண்டு குடி, புகை,கொலை, குத்து வெட்டு, ரத்தம் , ஆபாசம் எல்லாம் கலந்து வெளி வருகின்றன. படத்தின் தரம் தெரியாமல் சிறுவர்களை அழைத்துப் போகின்ற கொடுமையும் நடக்கிறது.

படத்தைப் பார்க்க ஆரம்பித்த பிறகு குழந்தைகளுடன் சென்ற பெற்றோர் தர்மசங்கடத்தில் நெளிகிற நிலைமையை நாம் பார்க்கிறோம். ஆனால் நாங்கள் “இது ஒரு ஏ படம்”தான் என்று சொல்லியே விளம்பரப்படுத்துகிறோம். சிறுவர்களை இந்தப் படத்திற்கு அழைத்து வர வேண்டாம். இது அனைவருக்குமான படம் அல்ல. பொய் சொல்லி ஏமாற்றுவது மிகவும் தவறு. அதில் எங்களுக்கு விருப்பமில்லை.

இந்தப் படத்தின் கதை பிடித்துப் போனதால்தான் நான் இதைத் தயாரிக்க முடிவெடுத்தேன். படத்தில் சமகாலத்தைச் சித்தரிக்கும் காட்சிகள் உள்ளன. இக்காலத்தின் கலாச்சாரத்தையும் இளைஞர்களின் மன உணர்வுகளையும் சொல்லத்தான் வேண்டும். அப்படிப்பட்ட கதையாகத்தான் இது உருவாகியுள்ளது. இயக்குநர் கேட்டபடி நடிகர்கள், தொழில் நுட்ப வசதிகள் என்று அனைத்தையும் செய்து கொடுத்தேன். அதன்படியே இந்தப் படம் உருவாகி உள்ளது..” என்றார் தயாரிப்பாளர்.

9 V ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடும் இப்படம் வரும் நவம்பர் 3-ம் தேதி வெளியாகவுள்ளது.

Our Score