full screen background image

மார்க் ஆண்டனி – சினிமா விமர்சனம்

மார்க் ஆண்டனி – சினிமா விமர்சனம்

விஷாலின் ‘எனிமி’ படத்தைத் தயாரித்த தயாரிப்பாளரான S.வினோத்குமார் தனது மினி ஸ்டுடியோ நிறுவனத்தின் சார்பில் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில் விஷால்,  எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், ரித்து வர்மா, சுனில் ரெட்டி, நிழல்கள் ரவி, அபிநயா, மீரா கிருஷ்ணன்,Y.G.மகேந்திரா, ரெடின் கிங்ஸ்லி, சென்ட்ராயன், விஷ்ணு பிரியா காந்தி, டத்தோ ஸ்ரீஜி ஞானராஜா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்திருக்கிறார். அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்ய, விஜய் வேலுக்குட்டி படத் தொகுப்பு பணிகளை செய்திருக்கிறார். கனல் கண்ணன், பீட்டர் ஹெயின், திலீப் சுப்பராயன், தினேஷ் சுப்பராயன் ஆகிய நால்வரும் சண்டைப் பயிற்சிகளை இயக்கியுள்ளார்கள்.

கலை இயக்கம் – உமேஷ் ராஜ்குமார், உடைகள் – சத்யா N.J., நடன இயக்கம் – தினேஷ், அஸார், பாடல்கள் – மதுர  கவி ,அஸல்  கோலாறு, நிர்வாக தயாரிப்பு – சொக்கலிங்கம், பத்திரிக்கை தொடர்பு – ரியாஸ் கே.அஹ்மத், புகைப்படங்கள் – R.S.ராஜா, விளம்பர வடிவமைப்பு – கபிலன்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக இப்படம் இன்றைக்கு வெளியாகியுள்ளது.

டைம் டிராவலை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது.

இதன் கதை 1977 மற்றும் 1995 ஆகிய இரண்டு வெவ்வேறு காலகட்டங்களில் நடப்பதாக அமைத்துள்ளார்கள்.

படத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா இருவருமே இரட்டை கதாப்பாத்திரங்களில் அதுவும், அப்பா, மகனாகவே நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் கதையைத் தெரிந்து கொள்வதற்கு முன்பாக கதையின் மாந்தர்களைப் பற்றித் தெளிவாகத் தெரிந்து கொள்வோம். இது புரியாவிட்டால் மொத்தக் கதையுமே சத்தியமாகப் புரியாது.

அப்பா விஷால் என்ற ஆண்டனி’, 1975-ம் ஆண்டில் வாழும் ஒரு கேங்ஸ்டர். இவரது மனைவி அபிநயா.

‘மார்க்’ என்ற மகன் விஷால் 1995-ல் வாழும் ஒரு கார் மெக்கானிக். இவர் ‘ரம்யா’ என்ற ரீத்து வர்மாவை தான் யாருடைய மகன் என்பதை சொல்லாமலேயே காதலித்து வருகிறார். ரீத்து வர்மாவின் அம்மா மீரா கிருஷ்ணன்.

‘ஜாக்கி பாண்டியன்’ என்ற அப்பா எஸ்.ஜே.சூர்யா 1975-ல் வாழும் ஒரு கேங்ஸ்டர்.

இவரது மகனான ‘மதன் பாண்டியன்’ என்ற மகன் எஸ்.ஜே.சூர்யா 1995-ல் கேங்ஸ்டர் குழுவில் அப்பாவுடனேயே இருக்கிறார். இவர்களது எடுபிடியாக இருப்பவர் திருநங்கையான ஒய்.ஜி.மகேந்திரா. இவர் 1975-ம் ஆண்டிய காலக்கட்டத்திலும் அப்பா எஸ்.ஜே.சூர்யாவுடன் இருப்பார்.

1975-ல் அப்பா விஷால், அப்பா எஸ்.ஜே.சூர்யாவின் வழக்கறிஞராக இருப்பவர் நிழல்கள் ரவி.

1975-ல் அப்பாக்கள் விஷால்-எஸ்.ஜே.சூர்யாவின் பரம எதிரியாக இருந்தவர்.. இருப்பவர்.. ‘ஏகாம்பரம்’ என்ற சுனில் ரெட்டி.

கதை 1995-ல் துவங்குகிறது. சிரஞ்சீவி’ என்ற செல்வராகவன் ஒரு விஞ்ஞானி. முந்தைய காலத்திற்குள் டிராவல் செய்யும் டைம் டிராவல் மிஷினை கண்டு பிடிக்கிறார். இந்த மிஷினில் இருக்கும் போன் மூலம் கடந்த காலத்திற்குள் சென்று நாம் விரும்பிய நபர்களிடம் பேச முடியும். இந்த மிஷினை வைத்து பெரும் கோடீஸ்வரனாகும் ஐடியாவில் இருக்கிறார் செல்வராகவன்.

இதனை டெஸ்ட் செய்து பார்க்கிறார் செல்வராகவன். அவருடைய மனைவி கல்லூரிக்கு தேர்வெழுத சென்றபோது நடந்த விபத்தொன்றில் காலை இழந்துவிட்டார். டைம் மிஷின் மூலமாக அந்த நாளுக்குல் செல்லும் செல்வராகவன் தனது மனைவியை கல்லூரிக்கு செல்லவிடாமல் தடுத்து மனைவியை விபத்தில் இருந்து காப்பாற்றுகிறார்.

படம் இப்போது அதே 1975-ல் தொடர்கிறது. அன்றைய இரவில் செல்வராகவன் ஒரு கிளப்புக்குச் செல்கிறார். அங்கே அந்த டைம் டிராவல் மிஷினை வாங்குவதற்காக வந்திருக்கும் சீன கும்பலிடம் பேச்சுவார்த்தை நடத்துகிறார் செல்வா. பேரம் படியாமல்போக செல்வாவை கொலை செய்ய முயல்கிறது அந்த சீனக் கும்பல்.

அந்த நேரத்தில் திடீரென்று கிளப்புக்குள் ஆண்டனி மற்றும் ஏகாம்பரம் என்ற இரண்டு ரவுடிக் கும்பல்களிடையே துப்பாக்கி சண்டை நடக்கிறது. இந்தக் களேபரத்தில் செல்வராகவனும் மாட்டிக் கொள்ள, அவரது உடலிலும் குண்டு பாய்கிறது.

அந்த நிலைமையிலும் வீட்டுக்குத் தப்பியோடுகிறார் செல்வராகவன். அவர் ஓட்டிச் செல்லும் காரின் டிக்கியில்தான் அந்த டைம் மெஷின் இருக்கிறது. எதிர்பாராதவிதமாக செல்வராகவன் செல்லும் வழியில் விபத்தில் சிக்கி உயிரிழக்கிறார். அவருடைய கார் சேதமடைகிறது. இப்போது படம் 1995-ல் விரிகிறது.

மகன் விஷாலை வளர்த்திருப்பது அப்பா எஸ்.ஜே.சூர்யா என்பதால், அவர் மீது அளவு கடந்த பாசத்தில் இருக்கிறார் மகன் விஷால். அப்பா விஷாலை, ஏகாம்பரமான சுனில் ரெட்டிதான் கொலை செய்தார் என்றும், மகன் விஷாலின் அம்மாவான அபிநயாவை அப்பா விஷால்தான் கொலை செய்தார் என்றும், அப்பா எஸ்.ஜே.சூர்யா, மகன் விஷாலிடம் சொல்லி வளர்த்திருக்கிறார். இதனால் மகன் விஷாலும், அப்பா விஷால் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்.

இந்த நேரத்தில் மிகப் பெரிய ரவுடிக் கும்பல் தலைவனான ஆண்டனியின் மகன்தான் இந்த மெக்கானிக் மார்க்’ என்பது, ரீத்து வர்மாவின் குடும்பத்திற்குத் தெரிய வர, அவர்கள் மகன் விஷாலுக்குப் பெண் தர மறுக்கிறார்கள்.

தன் அம்மாவையும் கொலை செய்துவிட்டு, தன்னையும் அனாதையாக்கிவிட்டு, இப்போது தனது காதலும் கை கூடாமல், காதலியும் கிடைக்காமல் போய் நடுத்தெருவில் நிற்பதை உணரும் மகன் விஷால், இந்தக் காரணங்களுக்காகவே அப்பா விஷால் மீது எக்கச்சக்க கோபத்தில் இருக்கிறார்.

இந்த நேரத்தில் மகன் விஷாலின் காதலியான ரித்து வர்மா மெக்கனிக் ஷாப்பிற்கு தங்களது காருடன் வந்து அதை சர்வீஸ் செய்து தரும்படி கேட்கிறார். இந்தப் பழைய காரில் இருந்துதான் அந்த டைம் மிஷின், மகன் விஷாலின் கைக்குக் கிடைக்கிறது. அந்த மிஷினுடன் அதை எப்படி பயன்படுத்துவது என்று செல்வராகவன்  எழுதி வைத்திருந்த டைரியும் மகன் விஷாலின் கைக்குக் கிடைக்கிறது.

இதைப் படித்த மகன் விஷாலுக்கு கணநேரத்தில் இந்த மிஷினை வைத்து தன் அப்பாவை போனில் அழைத்து திட்டித் தீர்க்க தோணுகிறது. அதையே செய்கிறார். ஆனால் அப்பா விஷால் இதை நம்ப மறுக்கிறார். தன் மகன் இப்போதுதான் பள்ளிக்குச் சென்று வருகிறான் என்று மகன் விஷாலின் பேச்சை உதாசீனப்படுத்துகிறார்.

தொடர்ந்து அந்த போனின் மூலமாகப் பல்வேறு இடங்களில் பேசி இப்போது உயிரோடு இருக்கும் அப்பாவின் வழக்கறிஞரான நிழல்கள் ரவியை நேரில் வரவழைக்கிறார் மகன் விஷால். நிழல்கள் ரவி மூலமாக தன் அப்பாவை கொலை செய்தது யார் என்னும் உண்மையான தகவல் மகன் விஷாலுக்குத் தெரிய வருகிறது.

இந்த நேரத்தில் அப்பா எஸ்.ஜே.சூர்யாவும் அங்கே வந்து மகன் விஷாலின் அம்மாவை கொலை செய்தது யார் என்கிற உண்மையையும் வெளிப்படையாகச் சொல்ல மகன் விஷாலுக்கும், அப்பா எஸ்.ஜே.சூர்யாவுக்கும் இடையில் கடும் மோதல் ஏற்படுகிறது.

இதற்கிடையில் அந்த டைம் மிஷின் மூலமாக 1975-ம் ஆண்டுக்குப் போய் தனது அப்பாவான ஆண்டனியைத் தொடர்பு கொள்ளும் மகன் விஷால், “ன்னைக்குக் கிளப்புக்கு போக வேண்டாம்..” என்கிறார். ஆனால் இதைக் கேட்காத அப்பா விஷால், திட்டமிட்ட நேரத்துக்கு முன்னதாகவே கிளப்புக்கு செல்கிறார்.

இப்போது நேர மாறுபாட்டால் நடக்கும் குழப்பத்தில் அப்பா விஷால் துப்பாக்கி சூட்டில் இருந்து தப்பித்துக் கொள்கிறார். இதனால் இப்போது அப்பா விஷால், உயிரோடு, நிழலுலக தாதாவாக ஏகாம்பரத்தின் துணையோடு வலம் வருகிறார்.

மகன் சூர்யா, இப்போது அப்பா விஷாலிடம் வேலை செய்யும் மெக்கானிக்காக இருக்கிறான். ஆனால், மார்க்கின் காதலியான ரித்து வர்மாவை மகன் சூர்யா காதலிக்கிறான். இப்போது மகன் விஷாலுக்கு இதனால் குழப்பம் கூடுகிறது.

இந்த நேரத்தில் மகன் சூர்யாவுக்கு அந்த டைம் மிஷின் பற்றித் தெரிய வருகிறது. அவன் அதைக் கைப்பற்றி கடந்த காலத்திற்குள் சென்று அப்பா சூர்யாவிடம் போனில் பேசி, அப்பா விஷாலை கொலை செய்ய வைக்கிறான்.

இப்போது மீண்டும் நிலைமை தலைகீழ் மாற்றமாகிறது. மகன் விஷால் மீண்டும் மெக்கானிக்காகுகிறார். அப்பா சூர்யா பணக்கார தாதாவாகவும், மகன் சூர்யா அவருடைய மகனாகவும் ஆகிவிடுகின்றனர்.

இப்போது அப்பா, மகன் சூர்யாக்கள் இருவருமே மகன் விஷாலை கொலை செய்ய முயல்கிறார்கள். இவர்கள் இருவரில் யார் ஜெயித்தது என்பதுதான் இந்த மார்க் ஆண்டனி’ என்ற வித்தியாசமான படத்தின் திரைக்கதை.

ஆண்டனி என்ற அப்பா கதாப்பாத்திரத்திலும், மார்க் என்ற மகன் கதாப்பாத்திரத்திலும் பல்வேறு வித்தியாசமான தோற்றங்களில் நடித்திருக்கிறார் விஷால்.

அப்பா ஆண்டனி மிகப் பெரிய தாதா என்பதால் அந்த கதாபாத்திரத்தில் வரும் விஷால் முரட்டு சுபாவத்துடன், மிரட்டலாக நடித்திருக்கிறார். சண்டைக் காட்சிகளில் பரத நாட்டியமே ஆடியிருக்கிறார். முதல் பாதியில் வரும் அப்பா விஷால் அடையாளம் தெரியாத அளவுக்கு தனது மேக்கப் மற்றும் உடையலரங்காரத்தில் வித்தியாசம் காட்டியிருக்கிறார்.

கிளைமாக்ஸ் ஆக்சன் காட்சியில் சிவாஜி’ ரஜினியின் மேக்கப்பில் மொட்டைத் தலையை ஆட்டியபடியே வந்து வதம் செய்வதெல்லாம் அவரது ரசிகர்களே எதிர்பார்த்திருக்காத ஒரு சுவாரஸ்யம். ஒரு மாஸ் ஹீரோவுக்குரிய அத்தனை நடிப்பு அம்சங்களையும் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார் அப்பா ஆண்டனி.

இவருக்கு முற்றிலும் மாறுபட்டவராக மகன் மார்க் கதாபாத்திரத்தில் வரும் விஷால் ரொம்பவே சாதுவாக நடித்திருக்கிறார். அப்பா சூர்யா மீது காட்டும் பாசமாகட்டும்.. காதலி மீது காட்டும் அன்பாகட்டும்.. அப்பிராணி கதாப்பாத்திரத்தைக் கச்சிதமாகச் செய்திருக்கிறார் மகன் விஷால்.

அதிலும் தன் அப்பாவைக் காப்பாற்றத் துடிக்கும் வேகத்திலும், அப்பா விஷாலாக தன் இளமைத் தோற்றத்தில் மாட்டிக் கொண்டு தத்தளிக்கும் காட்சிகளிலும் இதுவரையிலும் காட்டாத ஒரு வித்தியாசத்தைக் காட்டியிருக்கிறார். இதில் விஷாலின் டயலாக் டெலிவரியும், உடல் மொழியும்கூட இந்தப் படத்தில் வித்தியாசம்தான்!

இந்தப் படத்திற்கு மிகப் பெரிய பிளஸ் பாயிண்ட்டே எஸ்.ஜே.சூர்யாதான். இந்தப் படத்தின் டைட்டிலில் நடிப்பு அரக்கன்’ என்றுதான் எஸ்.ஜே.சூர்யாவின் பெயரைப் போட்டிருந்தார்கள். அது உண்மைதான்.

கொஞ்சம் ஓவர் ஆக்ட்டிங்காகவே இருந்தாலும் மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் திருப்பிக் கொண்டு படத்தின் ‘நாயகன்’ என்ற பட்டத்தை நைசாக விஷாலிடமிருந்து தட்டிச் சென்றுள்ளார் எஸ்.ஜே.சூர்யா.

அப்பா ‘ஜாக்கி பாண்டியன்’, மகன் ‘மதன் பாண்டியன்’ என்ற இரண்டு வேடங்களில் பன்முகத் தன்மை கொண்ட நடிப்பைக் காண்பித்து அசுரத்தனம் காட்டியிருக்கிறார் சூர்யா.

எஸ்.ஜே.சூர்யா காட்சிக்குக் காட்சி காட்டும் பாடி லாங்குவேஜூம், டயலாக் டெலிவரியும்தான் அவருடைய மிகப் பெரிய பலமே. மகன் சூர்யாவும், அப்பா சூர்யாவும் போனில் காட்டமாகப் பேசிக் கொள்ளும் வசனங்களெல்லாம் ஓவரானவை என்றாலும் இன்றைய இளைஞர்களுக்கு இதுதானே பிடித்திருக்கிறது. தியேட்டரில் கை தட்டல்கள் தூள் பறக்கின்றன.

சில்க் ஸ்மிதா அறிமுகமாகும் காட்சியில் சூர்யா காட்டும் படபடப்பும், நடிப்பும் சும்மா இருந்தவர்களைக்கூட கை தட்டி ரசிக்க வைத்திருக்கிறது. சண்டை காட்சிகளில்கூட ஒரு ஹீரோவுக்கான கெத்தை விட்டுக் கொடுக்காமல் நடித்திருக்கிறார் சூர்யா. வாழ்த்துகள். பாராட்டுக்கள்.

கதாநாயகி ரிது வர்மாவுக்கு அதிகமான காட்சிகளும், படத்தில் முக்கியத்துவமான கேரக்டராகவும் இல்லாததால் நாயகி’ என்ற டைட்டிலுக்காக அவரை நடிக்க வைத்திருக்கிறார்கள் என்றே சொல்லலாம்.

ஏகாம்பரமாக வில்லத்தனம் காட்டியிருக்கும் சுனில் ரெட்டிதான், விஷாலைவிடவும் சூர்யாவுக்கு டப் காண்பித்திருக்கிறார். ‘சிரஞ்சீவி’யாக நடித்திருக்கும் செல்வராகவன், கடைசிவரையிலும் வரவழைக்கப்பட்டிருக்கிறார்.

மேலும் வக்கீல் நிழல்கள் ரவி, அம்மா அபிநயா இருவரும் அவரவர் கேரக்டர்களுக்கு ஏற்ப நடித்துள்ளனர். திருநங்கை போன்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் ஒய்.ஜி.மகேந்திராவின் கேரக்டர் படத்துக்குத் தேவையே இல்லாதது. பெரிதாக எதையும் செய்யவில்லை.

சில்க் ஸ்மிதாவாக நடித்த விஷ்ணு பிரியா சில நிமிடங்களே ஆனாலும் திரையில் நம்மை மெய் மறக்கச் செய்திருக்கிறார். மேலும் நவீன தொழில் நுட்பத்தின் உதவியோடு சில்க்கை உயிர் பெறச் செய்த படத்தின் தொழில் நுட்பக் கலைஞர்களுக்கு நமது பாராட்டுக்கள்.

ஆனால் லாஜிக்படி பார்த்தால் சில்க்கின் இந்த வருகை ஏற்க முடியாதது. ஏனெனில் படத்தின் கதை 1975-ல் நடக்கிறது. சில்க் ஸ்மிதாவின் முதல் திரையுலக பிரவேசமே 1979-ம் ஆண்டு வெளியான ‘வண்டிச்சக்கரம்’ படத்தின் மூலம்தான் என்பதால் லாஜிக் இடிக்கிறது இயக்குநரே..!

கலை இயக்குநர் ஆர்.கே.விஜய முருகனின் கலை இயக்கப் பணி பாராட்டுக்குரியது.  டைம் மிஷினும், கிளப் செட்டப்பும், கிளப்பில் நடக்கும் துப்பாக்கி சண்டைக்காக வடிவமைக்கப்பட்டிருக்கும் டேபிள் மிஷின் கன்களும், கார்களின் அணிவகுப்பும், டபுள் டக்கர் பஸ்ஸூம், கிளைமாக்ஸ் காட்சியில் சுவரை உடைத்துக் கொண்டு வரும் மெஷின் கன், துப்பாக்கிகள் தாங்கிய புல்டோசரும் என்று அத்தனையிலும் தனது முத்திரையைப் பதித்திருக்கிறார் விஜய முருகன்.

ஆனாலும், 1975-ம் வருடத்திய சென்னை மாநகர பேருந்துகளுக்கு பல்லவன் பேருந்து’ என்றுதான் பெயர் இருந்தது என்பதை சொல்லாமல்விட்டதற்காக நமது கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

படம் நெடுகிலும் ஸ்கிரீன் முழுவதும் ரெட் கலர் டோனாக்கி கேங்ஸ்டர்களின் துப்பாக்கி சண்டையால் ஏற்படும் குருதியால் சிவந்ததுபோல திரையைக் காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் அபிநந்தன் ராமானுஜம். அனைத்து சண்டை காட்சிகளையும் படமாக்கியிருக்கும்விதம் அபாரம்..!

3 பாடல்களையும் எளிமையான தமிழ் வார்த்தைகளால் போட்டு பொளந்திருக்கும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார், தியேட்டரில் யாரையும் தூங்கவே விடமாட்டோம் என்பதுபோலவே பின்னணி இசையில் போட்டு சாத்தியிருக்கிறார்.

மேலும் இதிலும் ஒரு வித்தியாசமாக ‘கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்’, ‘வருது வருது விலகு விலகு’, ‘பஞ்சு மிட்டாய் சேலை கட்டி’, ‘அடியே மனம் நில்லுனா நிக்காதடி’ ஆகிய மறக்கவியலாத பாடல்களையும் கச்சிதமாக, நைச்சியமாகப் படத்தில் புகுத்தி தானும் தப்பித்துக் கொண்டிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்குமார்.

பிந்தைய காலத்தை நோக்கிய பயணம் என்ற அறிவியல் புனை கதையின் அடிப்படையில் சுவாரஸ்யமாக திரைக்கதை அமைத்து படத்தைப் பெரிதும் ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குநர்.

அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்ப நடிகர்களுக்கான மேக்கப், உடையலங்காரம், ஒளிப்பதிவு வண்ணம் என்று பலவற்றையும் கச்சிதமாக தேர்வு செய்து அழகுபடுத்தியிருக்கிறார் இயக்குநர். உடையலங்காரம் செய்தவர்களையும், ஒப்பனை கலைஞர்களையும்கூட இதற்காக நாம் பாராட்டியே ஆக வேண்டும்.

இது டைம் டிரைவல் கதை என்பதால் ஒரு காட்சி, ஒரு வசனம், ஒரு ஷாட் தவறாகப் போனால்கூட மொத்தப் படமும் புரிந்து கொள்ள முடியாத நிலைமைக்குப் போகும் அபாயம் இருப்பதை உணர்ந்து கச்சிதமாக நறுக்கி தவறுகள் இல்லாமல் நீட்டாக படத்தை தொகுத்தளித்திருக்கிறார் படத் தொகுப்பாளர் விஜய் வேலுக்குட்டி.

ஒவ்வொரு சண்டை காட்சிக்கும் ஒவ்வொரு பயிற்சியாளர் என்று சொல்லி பீட்டர் ஹெய்ன், திலீப் சுப்பராயன், கனல் கண்ணன், தினேஷ் சுப்பராயன் ஆகிய நால்வரின் துணையோடு படத்தில் இருக்கும் அனைத்து சண்டை காட்சிகளையும் பிரம்மாண்டமாக்கியிருக்கிறார்கள். அதிலும் பஸ்ஸூக்குள் நடக்கும் சண்டையும், கிளைமாக்ஸில் நடக்கும் சண்டைக் காட்சியும் நம்மை திகைப்பூட்டுகின்றன.

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், தனது முந்தைய படங்களான அன்பானவன், அடங்காதவன், அசராதவன்’, ‘த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா’, ‘பஹிரா’ போன்ற படங்கள் மூலமாகத் தனக்கிருந்த பெயரை, இந்தப் படத்தின் மூலமாக முற்றிலும் மாற்றியமைத்துவிட்டார் என்றே சொல்ல வேண்டும்.

இப்போதைய ரசிகர்களுக்கேற்ற வகையில், திரையுலக வணிகத்தை அடிப்படையாக வைத்து மிகுந்த பொருட் செலவில் இப்படியொரு படத்தை எடுத்துக் கொடுத்திருக்கும் ஆதிக்கின் தைரியம் பாராட்டுக்குரியது.

முதல் 30 நிமிடங்கள்தான் படம் மெதுவாக நகர்வது போல தோன்றுகிறது. இடைவேளைக்குப் பின்புதான் படமே என்று சொல்லும் அளவுக்கு படத்தின் அனைத்துப் பிரிவு கலைஞர்களும் ஒன்று சேர்ந்து, ஒரே நேரத்தில் ரசிகர்கள் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள்.

இரண்டு தாதாக்களுக்கு இடையிலான நட்பு, அவர்களுக்குள் விழையும் துரோகம் என்ற வழக்கமான சினிமாவின் கதைக் கருவை முன் வைத்து இதற்குள்ளாக டைம் டிராவல்’ என்ற அனைத்துப் பிரிவு ரசிகர்களையும் ஈர்க்கும் விஷயத்தைப் புகுத்தி இதன் மூலம் ஒரு இரண்டரை மணி நேர பொழுதுபோக்கலை கச்சிதமாகச் செய்திருக்கிறார் இயக்குநர்.

ஆதிக் இந்தப் படத்தில் செய்திருக்கும் சிறப்பம்சமே கேரக்டர் செலக்சன்தான். விஷாலைத் தவிர எஸ்.ஜே.சூர்யா, சுனில் ரெட்டி, செல்வராகவன் மூவருமே இப்போதைய ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமானவர்கள். தங்களுடைய இருப்பைச் சிறப்பாக காண்பித்திருக்கிறார்கள்.

இவர்களை வைத்து புதுமையான முறையில் திரைக்கதை அமைத்து, இப்போதைய பார்வையாளர்களுக்கேற்ற வகையில் பிளாக் காமெடியையும் சேர்த்து, அசர வைக்கும் ஆக்சன் காட்சிகளையும் கலந்து படத்தை தொய்வின்றி கொண்டு சென்றிருப்பதால் இந்தப் படத்தில் ரசிகர்களை பொழுதுபோக்கில் திருப்தி செய்திருக்கிறார்.

மார்க் ஆண்டனி – 75 சதவிகித மார்க்குகளைப் பெறுகிறார்.

RATING : 3.5 / 5

Our Score