கவி கிரியேஷன்ஸ் மனோஜ் & கிரிஷ் தயாரிப்பில் சி.அரவிந்த் ராஜ் இயக்கத்தில் சரத்குமார்-அமிதாஷ் நடித்திருக்கும் புதிய படம் ‘பரம்பொருள்.’
கதாநாயகியாக காஷ்மீரா பர்தேசி நடிக்க, முக்கிய கதாப்பாத்திரங்களில் திரைப்பட இயக்குநர் பாலாஜி சக்திவேல், சார்லஸ் வினோத், டி.சிவா, வின்சென்ட் அசோகன், கஜராஜ், பாலகிருஷ்ணன், பவா செல்லதுரை மற்றும் பலர் நடித்துள்ளன்னர்.
யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்க, ‘ரிச்சி’ படத்தின் மூலம் பாராட்டுகளை பெற்ற ஒளிப்பதிவாளர் பாண்டி குமார் ஒளிப்பதிவை மேற்கொள்ள, ‘டான்’, ‘சாணிக் காயிதம்’, ‘ராக்கி’, ‘எட்டு தோட்டாக்கள்’ படங்கள் மூலம் கவனத்தை ஈர்த்துள்ள நாகூரான் படத்தொகுப்பை கையாண்டுள்ளார்.
கலை இயக்குநராக குமார் கங்கப்பன், சண்டைக்காட்சி பயிற்சியாளராக தினேஷ் சுப்பராயன், நடன இயக்குநராக சதீஷ் கிருஷ்ணன், ஆடை வடிவமைப்பாளராக பூர்ணிமா ராமசாமி இப்படத்தில் பணியாற்றியுள்ளனர்.
‘பரம்பொருள்’ படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் திங்கட்கிழமை மாலை நடைபெற்றது.
இதன் முன்னோட்டத்தை நட்சத்திரத் தம்பதிகளான இயக்குநர் மணிரத்னம் மற்றும் சுஹாசினி மணிரத்னம் இருவரும் இணைந்து வெளியிட்டனர்.
இந்த நிகழ்வில் தயாரிப்பாளர்கள் மனோஜ் & கிரிஷ் பேசும்போது, “இந்த ‘பரம்பொருள்’ படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறோம். இந்த விழாவுக்கு வந்து சிறப்பித்துள்ள அனைவருக்கும் நன்றி. இப்படம் நிச்சயம் வெற்றி பெறும் என நம்புகிறோம்…” என்றார்கள்.
இயக்குநர் மணிரத்னம் பேசும்போது, “இந்நிகழ்ச்சிக்கு அழைத்ததற்காக மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ‘பரம் பொருள்’ திரைப்படம் வெற்றி பெற அனைவரும் வாழ்த்துவோம்…” என்றார்.
நடிகை மற்றும் இயக்குநரான சுஹாசினி மணிரத்னம் பேசும்போது, “நான் இங்கு வந்ததில் மகிழ்ச்சி. ‘பரம் பொருள்’ குழுவிற்கு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டு, படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்…” என்றார்.
சக்தி ஃபிலிம் பேக்டரி சக்திவேலன் பேசும்போது, “இத்திரைப்படத்தை பார்த்து மிகவும் ரசித்து இதை வெளியிட விரும்பினேன். சரத்குமார் சார் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘போர்த் தொழில்’ படம் வெளியாவதற்கு முன்பேயே இந்த ‘பரம் பொருள்’ படத்தை பார்த்துவிட்டேன். படம் மிகவும் சிறப்பாக உருவாகியுள்ளது. அனைவரும் பெரும் பங்களிப்பை அளித்துள்ளனர். கதையை அடிப்படையாகக் கொண்டது இப்படம். அமிதாஷ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜாவின் இசை படத்திற்கு பெரும் பலம். ‘பரம் பொருள்’ நிச்சயம் வெற்றியடையும்…” என்றார்.
நடிகர் வின்சன்ட் அசோகன் பேசும்போது, “இப்படத்தில் நான் ஒரு சுவாரஸ்யமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். படத்தின் சிறப்பு அதன் திரைக்கதை. சரத்குமார் சார் மற்றும் அமிதாஷ் நன்றாக நடித்துள்ளனர். இந்த திரைப்படம் மிகப் பெரிய வெற்றியடைய வேண்டுகிறேன்..” என்றார்.
நடிகரும், இயக்குநருமான பாலாஜி சக்திவேல் பேசும்போது, “இந்த ‘பரம்பொருள்’ படத்தின் கதையை கேட்டு மிகவும் ரசித்தேன். அமிதாஷ் மற்றும் சரத் சார் சிறப்பாக நடித்துள்ளனர். அனைவரின் சிறப்பான ஒத்துழைப்புடன் படம் உருவாகியுள்ளது.” என்றார்.
நடன இயக்குநர் சதீஷ் பேசும்போது, “இந்தப் படம் யுவன் ஷங்கர் ராஜா சாருக்கு மிக முக்கியமான படமாக அமையும். சரத்குமார் சாரை எனக்கு மிகவும் பிடிக்கும். அமிதாஷ் மற்றும் கிரிஷ் சாருக்கு நன்றி. படம் வெற்றி பெற, அனைவரும் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகிறேன்..” என்றார்.
இயக்குநர் சி.அரவிந்த் ராஜ் பேசும்போது, “இக்கதையை சொன்னவுடன் சரத்குமார் சாருக்கும், அமிதாஷுக்கும் மிகவும் பிடித்தது. சின்ன பட்ஜெட்டில் ஆரம்பிக்கப்பட்ட இப்படம் தயாரிப்பாளர்களின் ஆதரவால் பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. படம் மிகவும் நன்றாக வந்திருக்கிறது. அனைவரும் திரையரங்குகளில் ‘பரம்பொருள்’ திரைப்படத்தை பார்த்து தங்கள் கருத்துகளை பகிர்ந்து ஆதரவை தர வேண்டும். தயாரிப்பாளர்களுக்கும், படத்தில் பங்கேற்ற அனைவருக்கும் மனமார்ந்த நன்றி…” என்றார்.
நடிகர் அமிதாஷ் பேசும்போது, “பத்திரிகை மற்றும் ஊடகங்களின் ஆதரவு ஒரு படத்தின் வெற்றிக்கு மிகவும் முக்கியம். ‘பரம் பொருள்’ படத்திற்கு மேலான ஆதரவை வழங்குமாறு பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகத்தினரை கேட்டுக் கொள்கிறேன். சரத்குமார் சார் இந்த கதைக்கு தனது முழு ஒத்துழைப்பை கொடுத்திருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா சார் மற்றும் தயாரிப்பாளர் மனோஜ் கிரிஷ் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. இந்த திரைப்படத்திற்கு ஒத்துழைத்த ஒவ்வொருவருக்கும் மிகவும் நன்றி. அனைவரும் படத்தை திரையரங்குகளில் பார்க்க வேண்டும். குறிப்பாக எனது பெற்றோருக்கு நன்றி..” என்றார்.
நடிகர் சரத்குமார் பேசும்போது, “இதுவொரு குழுவின் முயற்சி. திரையரங்குகளில் பார்க்க வேண்டிய சிறந்த திரைப்படம் ‘பரம்பொருள்’. அனைவருக்கும் நன்றி…” என்றார்.
இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பேசும்போது, “எனக்கு இந்தப் படம் மிகவும் பிடித்துள்ளது, அனைவரும் ரசிப்பார்கள் என்றும் நம்புகிறேன். அனைவரும் திரையரங்குகளில் பார்க்க வேண்டும். அனைவருக்கும் நன்றி. ‘பரம்பொருள்’ குழு வெற்றி பெற வாழ்த்துகள்…” என்றார்.
சிலைக் கடத்தல் குற்றங்களின் பின்னணியில் உருவாகியிருக்கும் இத்திரைப்படம் வரும் செப்டம்பர் 1-ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
சக்தி பிலிம் பேக்டரி சார்பில் சக்திவேலன் இப்படத்தை வெளியிடுகிறார்.











