இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பாக கலாநிதி மாறன் தயாரித்துள்ளார்.
படத்தில் ரஜினிகாந்த், மோகன்லால், ஜாக்கி ஷெராப், சிவ்ராஜ்குமார், சுனில், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, வசந்த் ரவி, நாகபாபு, யோகிபாபு, ஜாபர் சாதீக், கிஷோர், பில்லி முரளி, சுகுந்தன், கராத்தே கார்த்தி, மிதுன், அர்ஷத், மாரிமுத்து, மாஸ்டர் ரித்விக், சரவணன், அறந்தாங்கி நிஷா, மகாநதி சங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தயாரிப்பு நிறுவனம் – சன் பிக்சர்ஸ், தயாரிப்பாளர் – கலாநிதி மாறன், இசை – அனிருத், ஒளிப்பதிவு – விஜய் கார்த்திக் கண்ணன், படத் தொகுப்பு – ஆர்.நிர்மல், கலை இயக்கம் – கிரண், சண்டை இயக்கம் – ஸ்டன் சிவா, உடை வடிவமைப்பு – பல்லவி சிங், முதுல் ஹபீஸ், ஒலிக்கலவை – ஜி.சுரேன், ஒலி வடிவமைப்பு – ஜி.சுரேன், எஸ்.அழகியகூத்தன், பத்திரிக்கை தொடர்பு – ரியாஸ் அஹமத்.
திகார் சிறையில் ஜெயிலராகப் பணியாற்றிய முத்துவேல் பாண்டியன் என்னும் ரஜினி இப்போது ஓய்வு பெற்று மனைவி, மகன், மருமகள், பேரன் என்று குடும்பஸ்தராக வாழ்ந்து வருகிறார்.
வீட்டில் யாருமே தன்னை மதிக்காத நிலையிலும், ‘பாட்ஷா’ படத்தில் வரும் அப்பாவி ஆட்டோக்காரன் போல, உலகமே தெரியாமல் குடும்பமே கதி என்று இருக்கிறார்.
ரஜினியின் மகனான வசந்த் ரவி தற்போது காவல் துறையில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் துணை கமிஷனராகப் பணியாற்றி வருகிறார். சிலை கடத்தல் தொடர்பான ஒரு வழக்கை, வசந்த் ரவி விசாரணை செய்கிறார். குற்றவாளிகள் மிகப் பெரிய நெட்வொர்க்கில் இருக்கிறார்கள் என்று தெரிந்தும் சில பெரிய ஆட்கள் மீது, வசந்த் ரவி கை வைக்கிறார்.
இந்த செய்தி, வில்லன் விநாயகனின் அடுத்த இடத்தில் இருக்கும் ‘பருத்தி வீரன்’ சரவணனின் காதுக்கு போக, அவர் வசந்த் ரவியை பயமுறுத்த அப்பாவான ரஜினியை அடியாட்களை வைத்து கடத்துகிறார். ஆனால் ரஜினி அந்த அடியாட்களை மிதித்துவிட்டு தப்பிக்கிறார்.
இதனால் ஆத்திரப்படும் வசந்த் ரவி, சரவணனை ஸ்டேஷனில் வைத்து சுளுக்கெடுக்கிறார். ஆனாலும் சரவணன் விநாயகனை காட்டிக் கொடுக்க மறுக்கிறார். ரஜினி தன் மகனிடம் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்கச் சொல்கிறார்.
திடீரென்று வசந்த் ரவி காணாமல் போகிறார். அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம்.. அல்லது தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீஸ் டிபார்ட்மெண்ட்டிலேயே ரஜினியிடம் சொல்கிறார்கள். ஆனால் கான்ஸ்டபிளான அறந்தாங்கி நிஷா சிலை கடத்தல் வழக்கினால்தான் இந்த நிலைமை என்பதை சொல்லிவிட மகன் இறந்துவிட்டான் என்றே நினைக்கும் ரஜினி, தன் மகனின் சாவுக்கு காரணமானவர்களைத் தண்டிக்க தானே களத்தில் குதிக்கிறார்.
வில்லன் விநாயகனின் ஆட்கள் ஒவ்வொருவரையும் வரிசையாகப் போட்டுத் தள்ளுகிறார். ஒரு கட்டத்தில் விநாயகனுக்கும் முடிவு கட்ட ரஜினி வரும்போது அவரது மகனை விநாயகன் உயிரோடு பிணையக் கைதியாக வைத்திருப்பது தெரிகிறது.
அப்போது ஆந்திராவில் ஒரு கோவிலில் இருக்கும் விலை மதிப்புமிக்க கிரீடம் ஒன்றை கடத்தும் பெரிய டாஸ்க்கை ரஜினியிடம் ஒப்படைக்கும் விநாயகன், இதை கச்சிதமாக செய்து முடித்தால் அவருடைய மகனை திருப்பித் தருவாகச் சொல்கிறார்.
இதற்கடுத்து ரஜினி என்ன செய்தார்.. அந்த கிரீடத்தை திருடினாரா? தனது மகனை மீட்டாரா? அல்லது விநாயகத்தை போட்டுத் தள்ளினாரா.. என்பதுதான் இந்தப் படத்தின் கிளைமேக்ஸ்.
ரஜினிகாந்த் சிங்கிள் மேன் ஆர்மியாக இந்தப் படத்தை ஒட்டு மொத்தமாக தாங்கி நிற்கிறார். ரஜினியின் ரசிகர்கள் எப்படியெல்லாம் அவரைத் திரையில் பார்க்க வேண்டுமென்று நினைத்தார்களோ அது அப்படியே நடந்துள்ளது.
‘பேட்ட’ படத்திற்குப் பிறகு மீண்டும் ஒரு மாஸ் பில்டப்பை இந்தப் படத்தில் கொடுக்க முயற்சித்துள்ளார் ரஜினி. சில இடங்களில் அது உதவியுள்ளது. மிகச் சில எமோஷ்னல் காட்சிகளிலும் ரஜினி ஸ்கோர் செய்யத் தவறவில்லை. ஆனாலும் ரஜினியின் டயர்ட்னஸ் முகத்திலும், உடலிலும் தெளிவாகத் தெரிகிறது. 72 வயது முதியவரை வைத்து சண்டை காட்சிகளை நீட்டி முழுக்க முடியாது என்பதால் அவர் உடம்புக்கு நோகாத அளவுக்கு சண்டை காட்சிகளை வைத்து சமாளித்திருக்கிறார் இயக்குநர் நெல்சன்.
படத்தில் ரஜினிக்கு அடுத்து… ஏன் ரஜினியை விடவும் நன்றாகவே நடித்துள்ளார் வில்லனாக நடித்திருக்கும் மலையாள நடிகரான வினாயகன். அவர் வசனம் பேசும் மாடுலேசனும், சில இடங்களில் அவர் காட்டும் ரியாக்ஷன்ஸும் அல்டிமேட் ரகம். இவருடைய நடிப்பு படத்திற்கு மிகப் பெரிய பிளஸ் பாயிண்ட்டாக அமைந்துள்ளது. அந்த பத்து ரூபாய் பிச்சை எடுக்கும் சீன் வேற லெவல் என்றே சொல்லலாம்.
மோகன்லால் இரண்டு காட்சிகளில் வந்தாலும் பெரும் நெருப்பாக மின்னியுள்ளார். சிவராஜ்குமாரும் அப்படியே..! ஜாக்கி ஷெராப்பை இன்னும் நன்றாக பயன்படுத்தியிருக்கலாம்.
தமன்னாவை அவர் ஆடை அளவிற்கு மிகவும் குறைவாகவே பயன்படுத்தியிருக்கிறார்கள்.(கண்டனங்கள் நெல்ஸ் ப்ரோ). ரம்யா கிருஷ்ணன் சின்னச் சின்ன இடங்களிலும் ஸ்கோர் செய்கிறார்.
வசந்த் ரவி வரும் நேரம் குறைவாக இருந்தாலும் நல்ல நடிப்பைத் தந்துள்ளார். வசந்த் ரவியின் மனைவியாக வரும் மிர்ணா, அவர்களின் மகனாக வரும் குட்டிப் பையன் இருவரும் ஒகே ரகம். படத்தின் துவக்கத்தில் குட்டிப் பையன் முத்து என்று ரஜினியை பெயர் சொல்லி அழைத்து பேசும் காட்சிகள் நெல்சன் டச்சுதான்.
யோகிபாபு முன் பாதியில் நன்றாக காமெடி செய்து படத்தை எனர்ஜியாக வைத்துள்ளார். காருக்குள் அமர்ந்த நிலையில் மல்லிகாவை பார்க்கப் போகும் தருணத்தில் பேசும் வசனங்களும், நடிப்பும் குபீர் சிரிப்பை வரவழைக்கிறது.
ஜாபராக நடித்திருக்கும் கிஷோர் ரஜினிக்கு மட்டும் உதவி செய்யாமல், படத்தின் திரைக்கதைக்கும் தனது நடிப்பால் உதவியுள்ளார்.
மற்றபடி சரவணன், வி.டி.வி.கணேஷ், ரெடின் கிங்ஸ்லி, சுனில் என்ற மற்றவர்களும் கேரக்டர் ஸ்கெட்ச்சுக்கேற்ப நடித்துள்ளனர். தமன்னா, சுனில் சம்பந்தமான காட்சிகள் ரகளையானவை. விநாயகன் கேங், மற்றும் ரஜினியின் கேங்கில் நடித்தவர்கள் வித்தியாசத்தை மேக்கப்பிலும் காட்டி ஆக்சனிலும் காட்டி ரசிக்க வைக்கின்றனர்.
அனிருத்தின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் இக்காலத்திய இளைஞர்களைப் பெரிதும் கவர்ந்திருக்கிறது. குறிப்பாக “அலப்பறை கிளப்புறோம் தலைவரு நிரந்தரம்” என்ற பாடல், படம் முடிந்த பின்னும் நம் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. அதேபோல் தமன்னாவின் ‘காவலா’ பாடலும், ஆடலும் இன்றைய இளசுகளைக் கவர்ந்திழுக்கிறது.
விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவு படத்தின் காட்சிகளை வேறோர் தளத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. சின்னச் சின்ன ஷாட்களிலும் தனிக் கவனம் செலுத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர். கலை இயக்குநரும் நல்ல உழைப்பைக் கொடுத்துள்ளார். விநாயகனின் அண்டர்கிரவுண்ட் இடத்தின் வடிவமைப்பு சூப்பர்ப்..!
இடைவேளைக்குப் பிறகு வரும் காட்சியில் திகார் சிறையில் 15 ஆண்டுகள் இளமையான ரஜினியை சூப்பராக காட்டியுள்ளார் நெல்சன்.
‘விக்ரம்’ படத்தில் மகனுக்காக கமல் எதிரிகளை அழிப்பார். இந்தப் படத்திலும் அதே கதைதான். அதே போல சிவாஜி நடித்த ‘தங்கப்பதக்க’த்தின் ‘டச்’ சில காட்சிகளில் அப்பட்டமாக தெரிகிறது. அந்த வரிசையில் இது ரஜினியின் விக்ரம் வெர்ஷன் என்றே சொல்லலாம்.
தமன்னா ஆடிப் பாடும் பாடல்தான் இந்தப் படத்திற்கு கிடைத்த முதல் முகவரி என்றே சொல்லலாம். தமன்னாவின் ஸ்டோரியை கச்சிதமாக திரைக்கதையில் பொருத்தமாக வைத்திருப்பது நெல்சனின் எழுத்துத் திறமையைக் காட்டுகிறது.
ரஜினி தன் மகன் இறந்து விட்டான் என்று நினைத்து கோபத்தில் புலியாக மாறும் காட்சியும்.. அதற்கு முன்பாக சிவராஜ்குமாரின் உதவியை நாடி செல்வது, அவர் எப்படி இடைவேளை காட்சியில் ரஜினிக்கு உதவுகிறார் என்பதெல்லாம் வேகமான திரைக்கதை காட்சிகள். இன்டர்வெல் பிளாக்கில் மிரட்டியிருக்கிறார் நெல்சன்.
“ஆளை பீஸ் பீஸா வெட்டி கலைச்சுப் போட்ருவேன். ஒன்னா சேத்து ஆளை அடையாளம் பாக்கவே முப்பது நாளாவும்” என்ற டயலாக்கை தன் ஸ்டைலில் ரஜினி சொல்வது சிறப்பு.
பார்த்துப் பழகிப் போன ஒரு கதையை தன்னுடைய திரைக்கதை ஸ்டைல் மூலமும் ரஜினி, மோகன்லால், சிவராஜ்குமார் உள்ளிட்டவர்களுக்கான மாஸ் காட்சிகளை வைத்து பூஸ்ட் கொடுத்து ரஜினியின் ரசிகர்களை ஓரளவு திருப்திப்படுத்தியிருக்கிறார் நெல்சன்.
இயக்குநர் நெல்சன் திலீப்குமார் எடுத்துக் கொண்ட கதைக் கரு ரொம்ப பழசு என்றாலும், சொன்னவிதம் மிகவும் புதிது. சில ப்ளஸ்கள் இருந்தும், படம் நமக்கு முழு நிறைவைத் தரவில்லை..!
முதல் காரணம் அளவுக்கு அதிகமான வயலன்ஸ். ரஜினியின் படங்களிலேயே இதுவரையிலும் இல்லாத அளவுக்கு அதிக்கப்படியான வன்முறை காட்சிகள் இந்தப் படத்தில் உள்ளன.
தலையை வெட்டித் துண்டாக்கி பாடி ஒரு பக்கம்.. தலை ஒரு பக்கம் என்று வீசுவது.. ரஜினியே கைதியின் காதை அறுத்தெடுப்பது.. வில்லன் விநாயகன் தன் ஆட்களை சம்பட்டியால் அடித்து ஆசிட் ட்ரம்மிற்குள் மூழ்கடித்து கொல்வது, தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டு சுத்தியலால் தலையில் அடித்துக் கொல்வது.. ரஜினி தன் வீட்டு டைனிங் டேபிளில் மனைவியையும், மருமகளையைும் உட்கார வைத்து வில்லன் ஆட்களை கொலை செய்து ரத்த அபிஷேகம் செய்வது.. இது போதாதென்று சிவராஜ்குமாரும், மோகன்லாலும்கூட தங்களது அறிமுகக் காட்சியிலேயே கொடூரமாகக் கொலை செய்வது என்று நம் மனதைக் கலங்கடிக்கும் வன்முறைக் காட்சிகள் இந்தப் படத்தில் நிறையவே இருக்கின்றன.
சிறு குழந்தைகள் பார்க்க முடியாதபடி முதல்முறையாக ஒரு ரஜினி படம் இப்படி வந்திருக்கிறது. “இஸ் இட் ரஜினி மூவி..?” என்று சின்னப் பிள்ளைகளே கேட்கிறார்கள்.. “நீங்களுமா ரஜினி..?” என்று நாமும் கேட்க வேண்டியுள்ளது.
மேலும், ஒரு நேர்மையான அதிகாரிக்கு ரவுடியிசம் பண்ற ஆட்களோட எப்படி நட்பு இருக்கும்..? இதுக்கு இயக்குநர் படத்துல பதில் சொல்லலை..! மொதல்ல ரஜினியின் கேரக்டர் ஸ்கெட்ச்படி அவர் நேர்மையானவரா என்றே சந்தேகம் வருது.
சிறைல கேள்வி கேக்குற ஒரு கைதியோட காதை அறுக்குறாரு.. தன் வீட்டுக்குக் கொலை பண்ணப் போறவங்களை இவரே ஆள் வைச்சு போட்டுத் தள்ளுறாரு.. அத்தனை அயோக்கியத்தனம் செய்றவனுங்க கூடவும் சகவாசம் வைச்சுக்கிட்டு கடைசில அவங்களோட உதவியாலதான் விநாயகன் குரூப்பா பொலி போடுறாரு..
ஆக, இரண்டு ரவுடிகள் குரூப்புக்குள் நடக்குற சண்டைதான் இந்தப் படம்ன்னு நாம நினைச்சுக்க வேண்டியதுதான். அப்புறம் எப்படி ரஜினி மேல ‘ஹீரோ’, ரொம்ப நல்லவர், நேர்மையானவர் என்ற நெருக்கம் பார்வையாளர்களுக்கு ஏற்படும்..?
கிளைமாக்ஸ்ல இறந்து போனதாகச் சொல்லப்பட்ட மகனே நேர்மையாளன் இல்லை என்ற டிவிஸ்ட் வரும்போது “ஐயோ பாவம்.. நேர்மையான அதிகாரியை கொன்னுட்டாங்களே..” என்ற பீலிங்கில் இருந்த நம் மனதையும், சுத்தியலால் அடித்து சுக்கு நூறாக்கிவிட்டார் இயக்குநர்.
படம் ஆரம்பிக்கும்போது ரொம்பவே ஸ்லோவாக செல்கிறது. முன் பாதியில் நம்மை ரொம்பவே என்கரேஜ் செய்யும் படம், பின் பாதியில் அப்படியே நம் கண்களைச் சொருக வைத்து விடுகிறது. நெல்சனின் வழக்கமான டார்க் காமெடி ஆரம்பத்தில் அதிகமான ஸ்கோப் இருந்தும் பின்பாதியில் எடுபடாமல் போய்விட்டது.
சுனில் போர்ஷன் ஸ்டார்ட் ஆகும்போதே ஆடியன்ஸ் டயர்டாக ஆரம்பித்துவிடுகிறார்கள். மேலும் சிலை கடத்தல் சம்பந்தமாக ஆரம்பிக்கும் படம் எங்கங்கோ போய், நம்மை சற்று நேரம் தலை சுற்ற வைத்து விடுகிறது. நல்லவேளையாக க்ளைமாக்ஸில் சில ஆக்ஷன் சீக்வென்ஸ்கள் மூலமாக படம் எண்டெர்டெயின்மெண்ட் மோட்-க்கு மாறிவிடுகிறது.
‘விக்ரம்’ படத்தில் கமல் கிளைமாக்ஸில் மிஷின் கன்னைத் தூக்கியதால்தான் படம் வெற்றி பெற்றது என்ற மூடத்தனமான பேச்சு அப்போதே எழுந்தது.
அதையே பாலோ செய்து இந்த ரஜினியின் ‘விக்ரம்’ படத்திலும் ரஜினியை ரொம்ப நாட்கள் கழித்து மெஷின் கன்னைத் தூக்க வைத்து வதம் செய்ய வைத்திருக்கிறார் இயக்குநர் நெல்சன்.
இந்த ஒரு இடம் பின் பாதியை வாரி விடாமல் காப்பாற்றுவதால் இந்த ‘ஜெயிலர்’ பார்டரில் தப்பிவிட்டார் என்றே சொல்லலாம்..!
RATING : 3.5 / 5









