‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தர் இயக்கிய படத்தில் இருக்கும் ஒரு காட்சியின் பாதிப்பில் தான் இயக்கிய ‘பருத்தி வீரன்’ படத்திலும் ஒரு காட்சியை வைத்திருந்ததாக இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியபோது, “என்னுடைய ‘பருத்தி வீரன்’ படத்தைப் பார்த்துட்டு கே.பி. ஸார் ரொம்பவே பாராட்டினார். அந்தப் படத்தில் நாயகி பிரியாமணியை அவங்கப்பா குடையால அடிப்பார். அடி வாங்கிட்டு பிரியாமணி உடனேயே உக்காந்து சாப்பிட ஆரம்பிச்சிருவாங்க.
இந்தக் காட்சியை குறிப்பிட்டு சொன்ன கே.பி. “எப்படிடா இது உனக்குத் தோணுச்சு. எப்படிடா வைச்ச?”ன்னு கேட்டார். “அது உங்ககிட்டேயிருந்து சுட்டதுதான் ஸார்” என்றேன். கே.பி. ஸார் ஷாக்காயிட்டார்.
“நீங்க கமல்-ரதியை வைச்சு எடுத்த ‘ஏக் துஜே கலியே’ படத்துல ஒரு சீன் இருக்கு ஸார். கமல் போட்டோவை ரதியோட அப்பா எரிச்சிருவாரு. அப்போ அந்த சாம்பலான பேப்பரையெல்லாம் காப்பில கலந்து ரதி குடிப்பாங்க.. அதோட இன்ஸ்பிரஷன்தான் இந்தக் காட்சி.,.” என்றேன். இதைக் கேட்டு பாலசந்தர் ஸார் ரொம்பவே பாராட்டினார்..” என்றார் இயக்குநர் அமீர்.









