full screen background image

கனெக்ட் – சினிமா விமர்சனம்

கனெக்ட் – சினிமா விமர்சனம்

படத்தின் நாயகியான நயன்தாரா தனது கணவரான விக்னேஷ் சிவனுடன் இணைந்து தனது சொந்தப் படத் தயாரிப்பு நிறுவனமான ‘ரவுடி பிக்சர்ஸ்’ சார்பில் இந்தப் படத்தைத் தானே தயாரித்திருக்கிறார்.

பாலிவுட் நடிகரான அனுபம் கெர், நடிகர் சத்யராஜ், வினய், மேகா ராஜ், மாலா பார்வதி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை ‘மாயா’ படத்தினை இயக்கிய இயக்குநர் அஷ்வின் சரவணன் இயக்கியிருக்கிறார்.

இயக்குநர் அஷ்வின் சரவணன், காவ்யா ராம்குமாருடன் இணைந்து இந்தப் படத்திற்கான கதையை எழுதியுள்ளார். மணிகண்டன் கிருஷ்ணமாச்சாரி இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பிருத்வி சந்திரசேகர் இசையமைக்கிறார். ரிச்சர்ட் கெவின் படத் தொகுப்பினை செய்துள்ளார். கலை இயக்கத்தை ஸ்ரீராமன் & சிவசங்கர் செய்துள்ளார்.

சச்சின் சுதாகரன் மற்றும் ஹரிஹரன் M (Sync Cinema) ஆகியோர் ஒலி வடிவமைப்பு செய்துள்ளனர். ராஜகிருஷ்ணன் M.R.(சவுண்ட் மிக்ஸ்), ரியல்’ சதீஷ்(ஸ்டண்ட்ஸ்), அனு வர்தன் & கவிதா.J (ஆடைகள்), சிதம்பரம் (மேக்கப்), சினேகா மனோஜ், அஸ்தா பிசானி (புரோஸ்தெடிக் கலைஞர்கள்), Realworks Studios (VFX), வர்ஷா வரதராஜன் (நடிகர் தேர்வு), கோமளம் ரஞ்சித் (ஸ்டில்ஸ்), கபிலன் (பப்ளிசிட்டி டிசைனர்) ஆகியோர் தொழில் நுட்ப வல்லுநர்களாக இந்தப் படத்தில் பணியாற்றியுள்ளனர்.

சுரேஷ் சந்திரா – ரேகா  D one(பத்திரிகை தொடர்பு), Ra.சிபி மாரப்பன் (நிர்வாகத் தயாரிப்பாளர்), குபேந்திரன் V.K (அசோஸியேட் புரடியூசர்), மயில்வாகனன் K.S. (இணைத் தயாரிப்பாளர்) ஆக பணியாற்றியுள்ளனர்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் ஒரு வீட்டுக்குள் நடக்கும் திகில் சம்பவம்தான் இந்தப் படம்..!

கோவையில் வசிக்கும் கிறிஸ்தவரான சத்யராஜின் ஒரே மகள் நயன்தாரா. இவரது கணவரான வினய் பிரபலமான மருத்துவர். இவர்களுடைய ஒரே மகள் ஹனியா நஃபீசா. இசையில் அதிக நாட்டமுள்ளவர். இந்தக் குடும்பம் சென்னையில் ஈ.சி.ஆரில். வசதியான மிகப் பெரிய பங்களாவில் வசித்து வருகின்றனர்.

இவர்களது வாழ்க்கை மகிழ்ச்சியாக போய்க் கொண்டிருக்கும் நேரத்தில் கொரோனா தொற்று ஏற்பட நாடு முழுவதும் லாக் டவுன் போடப்பட்டுவிட்டது. வினய் மருத்துவர் என்பதால் அதிக நேரங்கள் மருத்துவமனையிலேயே இருக்கிறார்.

கொரோனா தொற்று நோய் பாதித்த பல நோயாளிகளுக்கு வினய் சிகிச்சை அளித்ததில், அவருக்கே கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி மரணம் அடைகிறார்.

தன் தந்தையின் இறப்பு மகள் ஹனிபாவுக்கு பெரும் சோகத்தைத் தருகிறது. இதனால் வீட்டிலேயே தனிமையில் கிடக்கிறாள். சரியாக சாப்பிடாமல் அம்மாவிடம்கூட பேசாமல் இருக்கிறாள்.

அப்பா மீது அளவு கடந்த பாசம் வைத்திருப்பதால் தன் அப்பாவுடன் பேச நினைத்து ஆவியுடன் பேசுபவர்கள் உதவியை நாடுகிறாள் ஹனிபா. அப்படி அவளது அப்பாவுடன் ஹனிபா பேசிக் கொண்டிருக்கும்போது அம்மாவால் ஏற்பட்ட இடையூறுவால் அந்த நிகழ்ச்சி தடைபடுகிறது. ஆனால், அப்போது ஆன்லைனில் இருந்த ஆவி ஹனிபாவின் உடலுக்குள் நுழைகிறது.

இதன் பின்பு மகளது நடவடிக்கைகள் மர்மமாக இருக்க அம்மா நயன்தாரா பயப்படுகிறார். ஒரு மன நல மருத்துவரிடம் ஆன்லைனிலேயே மகளை பேச வைக்கிறார். ஆனால் அது தோல்வியடைகிறது.

இந்த நேரத்தில் கோவையில் இருந்து மகள், பேத்தியுடன் பேசும் சத்யராஜூக்கு அந்த வீட்டில் ஒரு அமானுஷ்ய சக்தி இருப்பது தெரிய வருகிறது. இது நயன்தாராவுக்கும் தெரிய வர அவரும் அதிர்ச்சியாகிறார்.

ஆனால் இது ஊரடங்கு நேரம் என்பதால், வெளியே வர முடியாத சூழலில் மகளை மீட்க முடியாமல் திண்டாடுகிறார் நயன்தாரா. இதற்காக அப்பா சத்யராஜின் ஏற்பாட்டின்படி மும்பையில் இருக்கும் கிறிஸ்துவ பாதிரியாரான அனுபம் கெர்ரின் உதவியை நாடுகிறார் நயன்தாரா.

இவர்களது வேண்டுகோளின்படி ஹனிபாவின் மகளின் உடலில் நுழைந்துள்ள பேயை விரட்ட முனைகிறார் அனுபம் கெர். அது அவரால் முடிந்ததா…? இல்லையா..? என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.

1976-ம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான ‘தி எக்ஸார்ஸிஸ்ட்’ படத்தின் தமிழ் ரீமேக் போலவேதான் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ‘தி எக்ஸார்ஸிட்’ படத்திலும் ஒரு இளம் சிறுமியின் உடலுக்குள் புகுந்து கொண்ட கெட்ட ஆவிக்கும், ஒரு கிறிஸ்துவ பாதிரியாருக்கும் இடையில் நடக்கும் போராட்டத்தைத்தான் படமாக்கியிருந்தார்கள். இந்தப் படமும் அது போலவேதான் உள்ளது. உலகம் முழுவதும் சக்கைப் போடு போட்ட இத்திரைப்படம் இன்றுவரையிலும் உலகம் தழுவிய பேய்ப் படங்களின் லிஸ்ட்டில் முதலிடத்தில் உள்ளது.

நாயகியான நயன்தாரா, 14 வயது பெண்ணின் அம்மாவாக நடித்துள்ளார். கொஞ்சம் உடல் இளைத்து, முகமும் சுருங்கி நயன்தாராவின் ரசிகர்களுக்கே பிடிக்காததுபோல் தோற்றமளித்திருக்கிறார்.

ஆனால் நடிப்பில் பேயாய் கதறியிருக்கிறார். தனது மகளைப் பீடித்திருக்கும் பேயின் அட்டகாசத்தைத் தாங்க முடியாமல் தவிக்கும் பெண்ணாக ஒட்டு மொத்தப் படத்தையும் தாங்கியிருக்கிறார் நயன்தாரா. உணர்ச்சிமயமான காட்சிகளிலும் தனது வழமையான சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் நயன்ஸ்.

சத்யராஜ் பொறுப்பான தாத்தாவாக.. மகளின் கையறு நிலையை எண்ணி பதறிப் போய் கோவையில் இருந்து சென்னைக்கு ஓடி வந்து பேத்தியைக் காப்பாற்றத் துடிக்கும் அந்த நடிப்பிலேயே படத்தை ரசிக்கும்படி நம்மையும் தூண்டிவிட்டிருக்கிறார்.

பேய் பிடித்த பெண்ணாக நடித்திருக்கும் ஹனிபாவின் நடிப்பு நிச்சயமாக நம்ப முடியாதது. இயக்குநரின் அழுத்தமான இயக்கத்தினால் தனது உடல் மொழியால்கூட அனைவரையும் பயமுறுத்தியிருக்கிறார் ஹனிபா நபீசா. பாராட்டுக்கள். வாழ்த்துகள்..!

பயப்படக் கூடிய தருணங்களில் எந்த நேரம் நம்மைத் தூக்கி வாரிப் போடப் போகிறார்களோ தெரியவில்லையே என்று நாம் நினைக்கும் அளவுக்கு பின்னணி இசையும், ஒளிப்பதிவும் கை கோர்த்துக் கொண்டு வேலை பார்த்துள்ளது.

இசையமைப்பாளர் பிரித்வி சந்திரசேகரின் பின்னணி இசைதான் படத்திற்கு மிகப் பெரிய பக்க பலமாக அமைந்துள்ளது. பல காட்சிகளில் படம் பார்ப்பவர்கள் அலறும் வகையில் பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார் இசையமைப்பாளர்.!

அதேபோல் மணிகண்டன் கிருஷ்ணமாச்சாரியின் ஒளிப்பதிவும் அசத்தல். இருட்டிலேயே நகரும் கேமிராவும், காட்சிகளும்.. அடுத்தது என்ன.. எப்போது வெடிக்கும்.. பேய் முகம் காட்டும் என்றெல்லாம் பார்வையாளர்களை எதிர்பார்க்க வைக்கும் திரைக்கதைக்கேற்ற ஒளிப்பதிவினை கொடுத்திருக்கிறார்.

படத் தொகுப்பாளரும் தன் பங்குக்கு அனைத்துக் காட்சிகளையும் நறுக்குத் தெரித்தாற்போல் கத்தரித்துக் கொடுக்க தியேட்டரில் பல காட்சிகளில் இசையின் மிரட்டல் தாங்க முடியாமல் கை தட்டல்கள் ஒலிக்கின்றன. இதேபோல் ஒலிப்பதிவும், சவுண்ட் மிக்ஸிங்கும் கச்சிதமாக அமைந்துள்ளன.

ஹாலிவுட் படங்களுக்கு இணையாக பயமுறுத்தும் இசை, ஒளிப்பதிவு, ஒலி கலவை போன்ற தரமான தொழில் நுட்ப பணிகள் இந்தப் படத்தில் அமைந்திருப்பது இயக்குநருக்குக் கிடைத்திருக்கும் வரம்தான்.

கொரோனா காலக்கட்டம் என்றாலும்கூட கொரோனா பாதித்தவர் என்றாலும்கூட அவசியமான மருத்துவக் காரணங்களுக்காக நோயாளிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுதான் இருந்தார்கள்.

இந்தப் பெண்ணை மருத்துவமனைக்குக் கொண்டு போகும் முயற்சி செய்து அது முடியாமல் போனதுபோல ஒரு காட்சியை வைத்திருந்தால் கதை இன்னும் நம்பகத்தன்மை உடையதாக இருந்திருக்கும்.

ஆனாலும் என்ன..? வெறும் 99 நிமிடங்களுக்குள் நம்மை பயம் கொள்ள வைத்து, பல காட்சிகளில் நிஜமாகவே நம்மையும் அலற வைத்து வெளியில் அனுப்பி வைத்திருக்கிறார் இயக்குநர் அஸ்வின் சரவணன்.

இனிமேல் வரக் கூடிய சஸ்பென்ஸ், திகில், திரில்லர் படங்களுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகவும் இந்தப் படத்தைக் குறிப்பிடலாம்.

படக் குழுவினருக்கு நமது பாராட்டுக்கள்..!

RATING : 4.5 / 5

Our Score