வித்தியாசமான கதைக்களத்துடன் நல்ல தரமான படங்களை தயாரித்து வரும் எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் V.மதியழகன் தயாரிப்பில் தயாராகும் படம் சாமான்யன்.
கிட்டத்தட்ட பத்து வருட இடைவெளிக்குப் பிறகு ‘மக்கள் நாயகன்’ நடிகர் ராமராஜன் இந்தப் படத்தின் மூலம் கதாநாயகனாகவே தமிழ் சினிமாவில் மறுபிரவேசம் செய்கிறார்.
இந்த படத்தில் கதாநாயகியாக நக்சா சரண் நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர், ராஜாராணி பாண்டியன், மைம் கோபி உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
அச்சுராஜாமணி இசை அமைக்கும் இந்த படத்தின் ஒளிப்பதிவை அருள்செல்வன் மேற்கொள்ள, படத் தொகுப்பை ராம்கோபி கவனிக்கிறார்.. சண்டை காட்சிகளை மிரட்டல் செல்வா வடிவமைக்கிறார். இந்தப் படத்தின் பாடல்களை சினேகன் மற்றும் விஜேபி ஆகியோர் எழுத. இவர்களுடன் பிரபல ஒளிப்பதிவாளர் ரவிவர்மனும் முதன்முறையாக இந்த படத்திற்காக ஒரு பாடலை எழுதியுள்ளார்.
இந்த படத்தை இயக்குநர் ராகேஷ் இயக்குகிறார். இவர் ஏற்கனவே ‘தம்பிக்கோட்டை’, ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’ ஆகிய படங்களை இயக்கியவர்.
இந்த படம் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி என்று ஐந்து மொழிகளிலும் தயாராகிறது.
இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை தி.நகரில் உள்ள கிருஷ்ணவேணி திரையரங்கில் விமரிசையாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் ராமராஜன், ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட படக் குழுவினருடன் மலேசியாவின் முன்னாள் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் குலசேகரன், இயக்குநர் சந்தான பாரதி, கவிஞர் சினேகன், ‘கும்கி-2’ பட கதாநாயகி ஷ்ரத்தா ராவ், ‘பாக்ஸர்’ பட கதாநாயகி ஆர்யா செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் நடிகர் ராதாரவி பேசும்போது, “இது வேற ரூட்டில் போயிருக்க வேண்டிய படம். இதன் நல்ல நேரமோ என்னவோ, ராமராஜன் இந்த படத்தில் வந்து இணைந்து விட்டார்.
நான் ராம.நாராயணன் இயக்கத்தில் ‘பேய் வீடு’ படத்தில் நடித்த சமயத்திலேயே ராமராஜனை அந்தப் படத்தின் உதவி இயக்குநராக எனக்கு தெரியும். அப்போதே அவரிடம் சில விஷயங்களை கவனித்து “சீக்கிரமாக நீ நடிகன் ஆகிவிடுவாய்” என்று சொன்னேன். அதுதான் நடந்தது. அதன் பிறகு அவருடன் சில படங்களில் இணைந்து நடித்துள்ளேன்.
ராமராஜன் என்றைக்குமே ரஜினி கமலுக்கு போட்டியாக இருந்ததில்லை. ஆனால், அவரது படங்கள் அந்த இருவரின் படங்களைவிடவும் நன்றாக ஓடின. அவ்வளவுதான்.. மற்ற ஹீரோக்களுக்கு ஒரு பயத்தை ஏற்படுத்தினார் என்பதை மறுக்க முடியாது.
ஒரு முறை நடிகர் கமல் விமான நிலையத்தில் இவரைப் பார்த்துவிட்டு, இவரது ஹேர் ஸ்டைல் ஒரிஜினல்தானா.. இல்லை.. விக் வைத்திருக்கிறாரோ என்கிற சந்தேகத்தில் தொட்டு பார்த்தாராம்.. ஆனால், இப்போதும் அதே போன்ற ஹேர் ஸ்டைலுடன்தான் காட்சியளிக்கிறார் ராமராஜன். அவருக்கு மனசு சுத்தம். அதனால்தான் முடி கொட்டவில்லை என்று நினைக்கிறேன்.
வெளியூர் செல்லும்போது மதுரை பக்கம் எங்கோ ஒரு கிராமத்தில் ‘ராமராஜன் ரசிகர் மன்றம்’ என்கிற போர்டை பார்த்தபோது, “இவர் அழியமாட்டார்.. இவரை அழிக்க முடியாது” என்று அருகில் இருந்தவரிடம் கூறினேன். நான் இப்படி சொல்வது ஏனென்று சாமான்யனுக்கு புரியும்.
இயக்குநர் ராகேஷ் இதற்கு முன்பு இயக்கிய ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’ படத்தில் கூப்பிட்டு ஒருநாள் மட்டும் வேலை கொடுத்தார். இப்போது கொஞ்சம் இம்ப்ரூவ் ஆகி இந்தப் படத்தில் ஏழு நாட்கள் வேலை இருப்பதாக கூறியுள்ளார்.
எல்லாரும் தியேட்டருக்கு வந்து படம் பார்க்க வேண்டும். ஆனால் தியேட்டருக்கு வந்தால் செலவாகிறது என்று சொல்லக் கூடாது. படம் பார்க்க வந்தால் டிக்கெட் மட்டும் வாங்குங்கள். பாப்கார்ன், கூல்ட்ரிங்க்ஸ் எல்லாம் வாங்கி நீங்களாக செலவை இழுத்துவிட்டுக் கொண்டு அதற்கு விலைவாசியை காரணம் காட்டாதீர்கள்..” என்றார்.
இயக்குநர் நந்தா பெரியசாமி பேசும்போது, “ராமராஜன் 12 வருடம் கழித்து வருகிறாரே என்று கவலைப்பட தேவையில்லை.. காரணம் நெருஞ்சி அடிக்கடி பூக்கும்.. ஆனால் குறிஞ்சி 12 வருடத்திற்கு ஒரு முறைதான் பூக்கும். ராமராஜனும் அந்தக் குறிஞ்சி போலதான்.
இந்த வயதில் ஏன் நடிக்க வருகிறார் என கேள்வி எழுப்பும் சிலருக்கு நான் சொல்வது, நடிப்பதற்கு வயது ஒரு தடை அல்ல.. இவர் இனி தொடர்ந்து நடிப்பார்.. நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்கிற தன்னம்பிக்கையை இன்றுவரை விடாமல் தொடர்ந்து வருகிறார். அதற்காகவே அவரை பாராட்டலாம்.
ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், தான் பிஸியாக இருக்கும் சூழ்நிலையிலும்கூட, இந்தப் படத்திற்காக ஒரு பாடலை எழுதிக் கொடுத்திருக்கிறார் என்றால், அவர் தீவிரமான ராமராஜன் ரசிகர் என்பதால்தான்…” என பாராட்டி பேசினார்.
பாடலாசிரியர் சினேகன் பேசும்போது, “ஒரு சில ஜாம்பவான்கள் கோலோச்சிக் கொண்டிருந்த சமயத்தில் நான் சினிமாவில் நுழையாமல் போய்விட்டேனே என்றும் அவர்களுக்கு பாடல் எழுத முடியவில்லையே என்றும் வருத்தப்பட்டது உண்டு. அப்படிப்பட்டவர்களில் ராமராஜனும் ஒருவர். காரணம் அது ஒரு பொற்காலம்.
நான் இதுவரையிலும் சினிமாவில் கிட்டத்தட்ட 3000 பாடல்களை எழுதி இருந்தாலும் ராமராஜனுக்கு எழுதவில்லையே என்கிற ஏக்கம் இருந்தது. சோளக்காட்டில், வயல் வெளிகளில், பயணங்களில் என அவரது படத்தின் பாடல்களை கேட்டு மகிழ்ந்த எனக்கு என்னுடைய ஆசை நிராசை ஆகிவிடாமல் இன்று அவர் நடிக்கும் படத்திற்கு பாட்டு எழுதும் வாய்ப்பு கிடைத்துள்ளது ஆசிர்வாதம்தான். தமிழ் சினிமாவில் ராமராஜன் என்பவருக்கான நாற்காலி இப்போதுவரை காலியாகவே இருக்கிறது. இதோ, அவரே மீண்டும் அதில் வந்து அமர்ந்திருக்கிறார்…” என்று சிலாகித்து பேசினார்.
இந்த இசை வெளியீட்டு விழாவிற்கு திடீர் சிறப்பு விருந்தினராக வருகை தந்த இயக்குநரும், நடிகருமான சந்தானபாரதி பேசும்போது, “30 வருடங்களுக்கு முன்பு ‘கரகாட்டக்காரன்’ படத்தில் ராமராஜன் ஹீரோவாகவும், நான் வில்லனாகவும் இணைந்து நடித்தோம். தமிழ்நாட்டில் இப்போது என்னை மூலைமுடுக்கெல்லாம் பலருக்கும் தெரிகிறது என்றால் அதற்கு காரணம் அந்தக் ‘கரகாட்டக்காரன்’ படமும் அதில் ராமராஜனுக்கு வில்லனாக நடித்ததும்தான். இத்தனை வருடங்கள் கழித்து அவர் மீண்டும் நடிக்க வந்ததில் எனக்கு மகிழ்ச்சிதான்…” என்று கூறினார்.
நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் பேசும்போது, “பாண்டவர்கள் 12 வருடம் வனவாசம் சென்றார்கள். ராமாயணத்தில் ராமன் 14 ஆண்டுகள் காட்டுக்கு சென்றான். அதேபோல இந்த ராமராஜன் பத்து ஆண்டுகள் கழித்து மீண்டும் வந்திருக்கிறார். அப்படி வனவாசம் சென்று வந்தவர்கள் அனைவருமே அரசாண்டதுபோல, இவரும் நிச்சயமாக அரசாள்வார்.
இவர் நடித்த ‘சோலை புஷ்பங்கள்’ படத்திலேயே நான் டப்பிங் கலைஞராக பணியாற்றி உள்ளேன். ஆனால், இப்போதுதான் முதன்முறையாக இவருடன் இணைந்து நடிக்கிறேன். இவர் எல்லாம் எதற்கு திரும்பவும் நடிக்க வருகிறார் என்று ராமராஜனை பார்த்து பலர் மீம்ஸ் போடுவதாக இங்கே சொன்னார்கள்.. நீங்கள் ஏன் சுவாசிக்க வேண்டும் என்று ஒருவரை பார்த்து கேள்வி கேட்பது எவ்வளவு அநாகரீகமான கேள்வியோ, ராமராஜனை பார்த்து இப்படி ஒரு கேள்வியை கேட்பதும் அது போலத்தான்…” என்று சரியான பதிலடி கொடுத்தார் எம்.எஸ்.பாஸ்கர்.
தயாரிப்பாளர் மதியழகன் இந்தப் படம் குறித்தும் தனது நிறுவனத்தில் உருவாகும் தயாரிப்புகள் குறித்தும் பேசும்போது, “கதைதான் முக்கியம் என்பதை மனதில் கொண்டு படங்களை தயாரித்து வருகிறோம். எங்களது நிறுவன தயாரிப்புகளில் கதாசிரியர் என்பவர் தனியாகவும், படத்தை இயக்குபவர் இன்னொருவராகவும் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். அபோதுதான் நல்ல தரமான படங்களை தர முடியும். ராகேஷ் இந்தப் படத்தின் கதையை சொன்னதும் ராமராஜன் சார் தான் முதலில் நினைவுக்கு வந்தார். அதேபோல அவரிடம் கதை சொன்னதும் ‘சாமான்யன்’ என்கிற டைட்டிலும் என் மனதில் உடனடியாக தோன்றியது. இத்தனை வருடங்கள் கழித்து நடிக்க வரும் அவருக்கு இது ஒரு கம்பேக் படமாக இருக்கும்…” என்று கூறினார்.
இயக்குvர் ராகேஷ் பேசும்போது, “இந்த நிறுவனத்தில் மீண்டும் இரண்டாவது படம் இயக்கும் அளவுக்கு நம்பிக்கையை பெற்றுள்ளேன் என்பதில் மகிழ்ச்சி.. நானும் உங்களைப்போல அங்கே அமர்ந்து ராமராஜனை ரசித்தவன்தான். எனக்கு விஜயகாந்த், ராமராஜன் ஆகியோர் மீண்டும் நடிக்க வேண்டும். அவர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்கிற விருப்பம் இருந்தது.
கடவுள் அருளால் இப்போது ராமராஜன் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்துவிட்டது. இத்தனை வருடங்களாக அவரது ரசிகர் மன்றங்கள் உயிர்ப்புடன் இருப்பதை பார்க்கும்போது பிரமிப்பாக இருக்கிறது.
சாமான்யன் என்றாலே காமன்மேன்தான். ஆனால், இந்த சாமான்யன் காமன்மேன் அல்ல.. அசாதாரணமானவன். கிராமத்தில் இருக்கும் ஒரு நல்ல மனிதர் சூழ்நிலை காரணமாக ஒரு நேரத்தில் திடீரென மாறினால் என்ன ஆகும் என்பதுதான் இந்த கதை.
ஹிட்ச்காக் பட பாணியில் இந்த கேரக்டர் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கதாபாத்திரத்தில் ராமராஜன் நடித்தால் நன்றாக இருக்கும் என முதலில் சொன்னது தயாரிப்பாளர் மதியழகன்தான். கடந்த 10 வருடங்களாக நல்ல கதைக்காக காத்திருந்த ராமராஜனிடம் கதை சொல்லி வெறும் 24 மணி நேரத்தில் இந்தப் படத்தை உறுதி செய்தோம்…” என்று கூறினார்.















