full screen background image

“சினிமா விமர்சகர்களை தற்குறிகள் என்று நான் சொல்லவில்லை” – இயக்குநர் மிஷ்கின் மறுப்பு..!

“சினிமா விமர்சகர்களை தற்குறிகள் என்று நான் சொல்லவில்லை” – இயக்குநர் மிஷ்கின் மறுப்பு..!

“சினிமா விமர்சகர்களை தற்குறிகள் என்று நான் சொல்லவில்லை”யென்று இயக்குநர் மிஷ்கின் மறுத்துள்ளார்.

இயக்குநர் மிஷ்கின் நேற்றைக்கு வெளியான ஒரு வாரப் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் “சினிமா விமர்சகர்களை தற்குறிகள்” என்று கூறியதாக செய்தி வெளியாகியிருந்தது.

“காலைல எந்திரிச்சவுடனே புளியோதரையை சாப்பிட்டுட்டு புளிச்ச ஏப்பத்தோட பேஸ்புக்ல விமர்சனம் எழுதுறவங்களை நான் கண்டுக்க மாட்டேன். அப்படி என் படங்களை யாராவது விமர்சனம் செஞ்சாங்கன்னா அவங்களை தற்குறிகள்ன்னுதான் சொல்லணும்..” என்று அந்தப் பேட்டியில் மிஷ்கின் கூறியதாக அந்தப் பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது.

இந்தப் பத்திரிகை வெளியானவுடன் இந்தச் செய்தியைப் படித்துவிட்டு பத்திரிகையாளர்களும், விமர்சகர்களும் சமூக வலைத்தளங்களில் இயக்குநர் மிஷ்கினுக்கு தங்களது கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.

எதிர்ப்புகள் கிளம்பியதையடுத்து இயக்குநர் மிஷ்கின் இன்றைக்கு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். தான் பேசியதை வேறு அர்த்தத்தில் அந்தப் பத்திரிகை பிரசுரித்து இருப்பதாக கூறியிருக்கிறார் மிஷ்கின்.

அந்த அறிக்கையில், “என் படத்தை விமர்சிப்பவர்கள் தற்குறிகள் என ஒரு பத்திரிகையில் குறிப்பிட்டதைப் பார்த்து மிகவும் வருத்தப்பட்டேன். தலைப்பு சுவையாக இருக்க வேண்டுமென நான் சொன்னதை வேறு மாதிரி புரிந்து கொண்டு செய்தி போட்டிருக்கிறார்கள், நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை.

என் படத்தைப் பாருங்கள். படம் நன்றாக இருந்தால் பாராட்டுங்கள். படம் நன்றாக இல்லையெனில் கடுமையாக விமர்சியுங்கள். இப்போதல்ல… என் முதல் படத்திலிருந்தே இதைச் சொல்கிறேன். விமர்சிப்பது அனைவரின் உரிமை. உரிமை மீறலை நான் என்றும் அனுமதிக்க மாட்டேன்…” என்று கூறியிருக்கிறார்.

Our Score