full screen background image

“ஆதார்’ படத்தை நான் பினாமி பெயரில் தயாரிக்கவில்லை” – நடிகர் கருணாஸ் மறுப்பு..!

“ஆதார்’ படத்தை நான் பினாமி பெயரில் தயாரிக்கவில்லை” – நடிகர் கருணாஸ் மறுப்பு..!

ஆதார்’ படத்தைத் தான் நேரடியாகவோ, பினாமி பெயரிலோ தயாரிக்கவில்லை” என்று மறுத்திருக்கிறார் நடிகர் கருணாஸ்.

நேற்று முன்தினம் நடைபெற்ற ‘ஆதார்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அவர் இதனைத் தெரிவித்தார்.

அந்த விழாவில் நடிகர் கருணாஸ் பேசுகையில், “முதலில் இந்தப் படத்தின் தயாரிப்பாளருக்கு நன்றி. ஏனெனில் நான்தான் பினாமி பெயரில் இந்தப் படத்தை தயாரிக்கிறேன் என தகவல்கள் பரவியிருக்கிறது.

கூவம் என்றால் நாறும். அதிலும் கூவத்தூர் சம்பவத்திற்குப் பிறகு ஒவ்வொருவரும், ஒவ்வொரு வகையில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதெல்லாம் தவறு. அதே தருணத்தில் இவர்களை திருத்துவது என் வேலை அல்ல. அதற்கான கால நேரமும் எனக்கு இல்லை.

பொது வாழ்க்கை என்று வந்துவிட்டால் ஆயிரம் பேர், ஆயிரம் விமர்சனத்தை முன் வைப்பார்கள். அதற்காக வருத்தப்பட்டு பதிலளிப்பதைவிட நடப்பதை எதிர்கொள்ள வேண்டும்.

ராம்நாத்தின் இந்த ‘ஆதார்’ படத்தின் கதையைக் கேட்டு, அந்தக் கதை மீது நம்பிக்கை வைத்து, தயாரிப்பாளர்கள் முதலீடு செய்துள்ளார்கள். அவருக்கும் அவருடைய துணைவியாருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இயக்குநர் அமீர் அண்ணன் இந்த மேடையில் என்னை வாழ்த்திப் பேசியது மறக்க முடியாத தருணமாக நினைக்கிறேன். அமீர் இயக்கத்தில் உருவான ராம்’ படத்தில் நான்தான் நடிக்க ஒப்பந்தமானேன். இதற்காக சென்னை துறைமுகம்வரை சென்று போட்டோ சூட்டிலும் கலந்து கொண்டேன்.

அதன் பிறகு அவர்கள் இருவரும் நண்பர்களாக பேசிக் கொண்டிருக்கும் பொழுது நான் மூன்றாம் மனிதராக வேடிக்கை பார்த்திருக்க வேண்டும். ஆனால், சற்று உரிமை எடுத்துக் கொண்டு, உள்ளே புகுந்து சிலவற்றை பேசினேன். அது தவறாக முடிந்துவிட்டது.

உடன் இருந்தவர்களும் எனக்கு சரியான புத்திமதியை எடுத்துரைக்கவில்லை. இதனால் எனக்கு கிடைத்த வாய்ப்பு என்னைப் போன்ற மற்றொரு எளிய மனிதனுக்கு கிடைத்தது. அந்த வகையில் எனக்கு மகிழ்ச்சிதான். இயக்குநர் அமீருடன் பணியாற்றவில்லை என்ற வருத்தம் என்னுள் இருந்தது. ஆனால் இன்று அவர் என்னைப் பாராட்டி பேசியது. அதிலும் மறைந்த நடிகர் நாகேஷ் அவருடன் ஒப்பிட்டு பேசியது என்னால் வாழ்நாள் முழுவதும் மறக்க இயலாது.

இந்தப் படத்தில் பாரதிராஜாதான் நடிக்க வேண்டியதிருந்தது. ஆனால், அவர் நடிக்கவில்லை. இந்த தருணத்தில் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திரா சொன்ன ஒரு விசயம் நினைவுக்கு வருகிறது. ‘ஒரு நல்ல சினிமா தனக்கான தொழில் நுட்பக் கலைஞர்களையும், தனக்கான நடிகர்களையும் தானே தேடிக் கொள்ளும்’ என்பார். அது இந்தப் படத்தில் முழுமையாக நிறைவேறியது.

ஏராளமானவர்களுக்கு ‘திண்டுக்கல் சாரதி’ படத்தில் சிம்ரன்தான் நாயகி என தெரியாது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் சிம்ரனைத்தான் எனக்கு நாயகியாக அளித்தார்கள். ஆனால் நான் என் தகுதிக்கு சிம்ரன் வேண்டாம் என உறுதியாக கூறினேன்.

சிம்ரன் நடித்திருந்தால் இந்தப் படம் இந்த அளவிற்கு வெற்றி பெற்றிருக்காது. ஏனெனில், என்னைப் போன்ற கதாபாத்திரத்திற்கு ஆவரேஜான பெண்ணே அழகாக இருப்பார். அந்தக் கதைக்கு அவ்வளவு பெரிய நாயகியை நடிக்க வைத்தால், ரசிகர்களே சிம்ரன் ஓடி விடுவார் என்று நினைத்து விடுவார்கள். அதனால் சிம்ரன் வேண்டாம் என உறுதியாக முடிவெடுத்து, வேறு ஒருவரை நடிக்க வைத்தேன்.

இது எப்படி பொருத்தமான முடிவாக இருந்து படத்தை வெற்றி பெற செய்ததோ.. அதேபோல் இந்த படத்திலும் இந்த கதை தனக்கான நடிகர்களை தேர்வு செய்து கொண்டது.

‘சேது’ படத்தில் நான் நடிக்கவில்லை. ஆனால் அந்த படம் வெளிவருவதற்கு நான் கடுமையாக உழைத்தேன். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அந்தப் படத்தின் வெளியீட்டுக்காக உழைத்ததால், இயக்குநர் பாலா இயக்கத்தில் நடிகனாக அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது.

22 ஆண்டுகளுக்கு முன் நந்தா’ படத்தின் படப்பிடிப்பை இங்குதான் அரங்கம் அமைத்து நடத்தினார்கள். ஆனால் இன்று இந்த இடம் வேறு ஒருவரின் கைகளுக்கு மாறிவிட்டது. ஆனால், 22 ஆண்டுகளுக்கு பிறகு அதே இடத்தில் நான் நடித்த ஒரு படத்தின் இசை வெளியீடு நடைபெறுகிறது என்றால், உண்மையிலேயே எனக்கு கிடைத்த வெற்றியாகத்தான் பார்க்கிறேன்.

எனக்கு இருந்த சின்ன, சின்ன ஆசைகளை எல்லாம் இந்த சினிமாதான் நிறைவேற்றியது. அதனால் தற்போது எனக்கு யார் மீதும் பொறாமையோ.. மனவருத்தமோ கிடையாது.

சினிமாவில் சம்பாதித்ததை சினிமாவில் முதலீடு செய்தேன். லாபத்தையும் பார்த்தேன். நஷ்டத்தையும் பார்த்தேன். சினிமாவில் நான் நிறைய கஷ்டங்களும் லாபங்களும் தோல்விகளும் சந்தித்தாலும் சினிமா என்னை ஒருபோதும் கைவிடவில்லை. நான் சினிமாவுக்கு உண்மையாக இருந்தேன். அதனை அளவு கடந்து நேசித்தேன். நேசித்தும் வருகிறேன்.

இதுவரையிலும் சினிமாவுக்குள் இருந்து நீ என்ன சம்பாதித்தாய்..?” என்று யாராவது என்னைக் கேட்டால், “இந்த சினிமாவில் நான் ராம்நாத் என்ற ஒரு இயக்குநரை  நண்பராக சம்பாதித்திருக்கிறேன்…” என்று உறுதியாக சொல்வேன்…” என்றார்.

 
Our Score