கருடன் பிலிம் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் தயாரித்துள்ள திரைப்படம் ‘தொடாதே’.
இந்தப் படத்தில் நடிகர் ‘காதல்’ சுகுமார் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பிரீத்தி நடிக்கிறார். படத்தில் நாயகனுக்கு இணையான, முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் தயாரிப்பாளர் ஜெயக்குமார் நடித்துள்ளார்.
இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் இயக்குநர் அலெக்ஸ். ஒளிப்பதிவு – ராஜேஷ், இசை – ராஜா, பாடல்கள் – பூமாதேவி, பாலமுருகன், ஜெயக்குமார், இணை இயக்கம் – நாகேந்திரன், உதவி இயக்கம் – பார்த்திபன், வள்ளி, சண்டை இயக்கம் – சிவப்பிரகாஷ், படத் தொகுப்பு – ஜி.நாகர், நடன இயக்கம் – பாரதி, மக்கள் தொடர்பு – கோவிந்தராஜ், இணைத் தயாரிப்பு – எஸ்.அலெக்ஸ், தயாரிப்பு எஸ்.ஜெயக்குமார்.
பெரும்பாலான கொலை மற்றும் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோர் ‘போதையில் செய்துவிட்டேன்’ என்றே வாக்குமூலம் அளிக்கிறார்கள்.
நடுத்தரக் குடும்பத்திற்கும், கீழான மக்களின் வருமானம் மதுபானக் கடைகளில் சீரழிகிறது. அதை குடிமகன்கள் புரிந்து கொண்டு, குறைந்தபட்சமாவது திருந்த வேண்டும் என்கிற நோக்கில், ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது.
‘குடியைத் தொடாதே’, ‘பெண்ணின் விருப்பமில்லாமல் அவளைத் தொடாதே’, ‘போதைப் பொருட்களை தொடாதே’ என்னும் சமூகக் கருத்துக்களை மையமாக வைத்து இந்தப் படத்தின் திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குநர் அலெக்ஸ்.
கொடைக்கானல், மதுரை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் இயல்பான கதை மாந்தர்களுடன், மண்ணின் மணம் மாறாமல் இந்தத் ‘தொடாதே’ படம் படமாக்கப்பட்டுள்ளது.
தற்போது படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் இசை வெளியீடும், அதைத் தொடர்ந்து பட வெளியீடும் நடைபெறவுள்ளது.









