ஹோம்பாலே பிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட் செலவில் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கே.ஜி.எஃப்.- சாப்டர்-2.’
இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தயாராகியிருக்கும் இந்த ‘கே.ஜி.எஃப்.சாப்டர்-2’ படத்தில் கதையின் நாயகனாக ‘ராக் ஸ்டார்’ யஷ் நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருக்கிறார்.
இவர்களுடன் பாலிவுட் நடிகர் சஞ்சய்தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், அச்சுத் குமார், ராவ் ரமேஷ், ஈஸ்வரி ராவ், ராமச்சந்திர ராஜு, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
புவன் கௌடா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு, ரவி பர்சூர் இசை அமைத்திருக்கிறார்.
இந்தப் படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார்.
இந்தப் படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழா நேற்று மாலை பெங்களூரூவில் ஓரியன் மாலில் உள்ள பி.வி.ஆர். தியேட்டரில் நடைபெற்றது.
இந்த விழாவின் நிகழ்வை பாலிவுட்டின் முன்னணி இயக்குநரும், தயாரிப்பாளருமான கரண் ஜோகர் தொகுத்து வழங்கினார்.
‘கே.ஜி.எஃப்.-சாப்டர்-2’ முன்னோட்ட வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்திருந்த அனைவருக்கும் ஹோம்பாலே பிலிம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்ததூர் நன்றி தெரிவித்தார்.
இந்தப் பிரம்மாண்டமான விழாவில், ‘கே.ஜி.எஃப்.’ படத்தின் இரண்டாம் பாகத்திற்கான முன்னோட்டம் தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் வெளியானது.
‘கே.ஜி.எஃப்.சாப்டர்-2‘ படத்தின் தமிழ் பதிப்பு முன்னோட்டத்தை பிரபல கன்னட நடிகரான சிவராஜ்குமார் வெளியிட்டார்.
இந்த விழாவில் இயக்குநர் பிரசாந்த் நீல் பேசுகையில், “கே.ஜி.எஃப்.’ படத்தின் முதல் பாகத்தை பெரிய அளவில் வெற்றி பெற செய்து, கன்னட சினிமாவை இந்திய திரையுலகில் ஒரு முக்கிய இடத்திற்குக் கொண்டு வந்ததற்கு பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் நன்றி.
நாங்கள் இந்த ‘கே.ஜி.எஃப்.’ பயணத்தைத் தொடங்கி எட்டு வருடங்கள் நிறைவடைகிறது. சொல்ல முடிந்த அனைத்தையும் இந்தப் படத்தில் கதையாக சொல்லி இருக்கிறேன். அனைவரும் படம் பார்க்கும்வரை என்னால் காத்திருக்க இயலாது.
என்னுடன் சிறந்த தொழில் நுட்பக் குழுவினர் இருக்கிறார்கள். அவர்களின் துணை இல்லாமல் இந்த ‘கே.ஜி.எஃப்.’ படைப்பு உருவாக சாத்தியமில்லை என்று உறுதியாகக் கூறுவேன். ‘கே.ஜி.எப்.சாப்டர்-2’ படத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்காக இப்படத்தை பல்வேறு மொழிகளில் வெளியிடுபவர்களுக்கும் நன்றி.
நாங்கள் தேர்ந்தெடுத்த நடிகர்கள் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருந்தார்கள். அவர்களின் நடிப்பால் ரசிகர்கள் ஈர்க்கப்பட்டனர். இந்த ‘கே.ஜி.எஃப்.-2’ படத்தில் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டிக்கு பெரிய கதாபாத்திரம் கிடைத்துள்ளது.
இந்த ‘கே.ஜி.எஃப்.-சேப்டர்-2’ படம் ஏப்ரல் 14 அன்று தேதியன்று வெளியாகும்போது, படத்தின் நாயகனான யஷ், “ஏன் ‘ராக் ஸ்டார்’ என அனைவராலும் அன்புடன் அழைக்கப்படுகிறார்..?” என்பது அனைவருக்கும் தெரிய வரும்.
யஷ் அனைத்து அம்சங்களும் அடங்கிய நவீன செல்போன் போன்றவர். அவர் என்னை நன்றாக வளர்த்தார். எனக்கு நம்பிக்கை கொடுத்தார். பல இடங்களில் வசனம்கூட எழுதினார். அவரும் நன்றாக நடித்து, தன்னுடைய பங்களிப்பை நிறைவாக செய்திருக்கிறார்.
கடந்த எட்டு ஆண்டுகளில் ‘கே.ஜி.எஃப்.-2’ படத்தின் அனைத்து நல்ல விஷயங்களையும் மறைந்த டாக்டர் புனித் ராஜ்குமாருக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன். அவர் எங்களின் பெருமை..” என்றார்.









