full screen background image

“கே.ஜி.எஃப்.-சேப்டர்-2′ இந்தியத் திரைப்படமாக உருவாகியுள்ளது..” – மலையாள நடிகர் பிருத்விராஜ் பாராட்டு..!

“கே.ஜி.எஃப்.-சேப்டர்-2′ இந்தியத் திரைப்படமாக உருவாகியுள்ளது..” – மலையாள நடிகர் பிருத்விராஜ் பாராட்டு..!

ஹோம்பாலே பிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட் செலவில் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கே.ஜி.எஃப்.- சாப்டர்-2.’

இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தயாராகியிருக்கும் இந்த ‘கே.ஜி.எஃப்.சாப்டர்-2’ படத்தில் கதையின் நாயகனாக ‘ராக் ஸ்டார்’ யஷ்  நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருக்கிறார்.

இவர்களுடன் பாலிவுட் நடிகர் சஞ்சய்தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், அச்சுத் குமார், ராவ் ரமேஷ், ஈஸ்வரி ராவ், ராமச்சந்திர ராஜு, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

புவன் கௌடா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு, ரவி பர்சூர் இசை அமைத்திருக்கிறார்.

இந்தப் படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார்.

இந்தப் படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழா நேற்று மாலை பெங்களூரூவில் ஓரியன் மாலில் உள்ள பி.வி.ஆர். தியேட்டரில் நடைபெற்றது.

இந்த விழாவின் நிகழ்வை பாலிவுட்டின் முன்னணி இயக்குநரும், தயாரிப்பாளருமான கரண் ஜோகர் தொகுத்து வழங்கினார்.

கே.ஜி.எஃப்.-சாப்டர்-2’ முன்னோட்ட வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்திருந்த அனைவருக்கும் ஹோம்பாலே பிலிம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்ததூர் நன்றி தெரிவித்தார்.

இந்தப் பிரம்மாண்டமான விழாவில், கே.ஜி.எஃப்.’ படத்தின் இரண்டாம் பாகத்திற்கான முன்னோட்டம் தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் வெளியானது.

‘கே.ஜி.எப்.சாப்டர்-2‘ படத்தின் தமிழ் பதிப்பு முன்னோட்டத்தை பிரபல கன்னட நடிகரான சிவராஜ்குமார் வெளியிட்டார்.

இந்த விழாவில் இந்தப் படத்தைத் மலையாளத்தில் வெளியிடும் பிரபல மலையாள நடிகரும், தயாரிப்பாளருமான பிருத்விராஜ் பேசுகையில், “இந்த ‘கே.ஜி.எஃப்.-சேப்டர்-2’ படத்தை ஏப்ரல் 14-ம் தேதி திரைரங்குகளில் காண மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

அண்மையில் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொள்ள கேரளா வந்திருந்த நடிகர் யஷ்ஷை நான் சந்தித்தேன். அப்போது, இந்த “கே.ஜி.எஃப்.-சேப்டர்-2’ படத்தை பிரம்மாண்டமாக வெளியிட வேண்டும்” என நான் அவரை வற்புறுத்தினேன்.

ஏனெனில் எனக்கு இந்தப் படத்தின் வெற்றியில் உறுதியான நம்பிக்கை இருந்தது. ‘கே.ஜி.ஃப்’ படத்தின் முதல் பாகம் புதிய டிரெண்டை உருவாக்கி, இந்தியா முழுவதும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

தென்னிந்திய சினிமாவுக்கு இது பெருமையான தருணம். இந்திய திரை உலகினர் ஒன்றிணைய வேண்டிய நேரம் இது. பாலிவுட், மோலிவுட், கோலிவுட் டோலிவுட் என எல்லா வுட்களும் இருக்கட்டும். இருப்பினும் எல்லா தடைகளையும் உடைத்து, கை கோர்த்து, இந்தியாவிற்கான திரைப்படத்தை படைப்போம்.” என்றார்.

Our Score