நடிகர் கெளதம் கார்த்திக்கும், நடிகை மஞ்சிமா மோகனும் காதலிப்பதாகவும், அவர்களது திருமணம் விரைவில் நடைபெறவிருப்பதாகவும் செய்திகள் பரவியுள்ளன.
பழம் பெரும் நடிகரான முத்துராமனின் பேரனும், நடிகர் கார்த்திக்கின் மகனுமான கவுதம் கார்த்திக்கும் தமிழ்த் திரையுலகத்தில் ஒரு நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
2013-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘கடல்’ படத்தில் அறிமுகமான கவுதம் கார்த்திக் இதுவரையிலும் ‘என்னமோ ஏதோ’, ‘வை ராஜா வை’, ‘முத்துராமலிங்கம்’,’ ரங்கூன்’, ‘இவன் தந்திரன்’, ‘ஹர ஹர மகாதேவகி’. ‘இந்திரஜித்’, ‘தேவராட்டம்’, ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’, ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’, ‘மிஸ்டர் சந்திரமெளலி’, ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது ‘யுத்த சத்தம்’, ‘சிப்பாய்’, ‘பத்து தல’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தும் வருகிறார்.
இந்நிலையில் இவர் மலையாள நடிகையான மஞ்சிமா மோகனை காதலித்து வருவதாகவும் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் கூறப்படுகிறது.
இவர்கள் இருவரும் ‘தேவராட்டம்’ என்ற படத்தில் இணைந்து நடித்தனர். அந்தப் படத்தில் நடித்தபோது இருவருக்கும் இடையில் காதல் உண்டானதாகத் தகவல். இதையடுத்து கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக இவர்கள் இருவரும் சென்னையில் ஒன்றாக வசித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வரும் ஏப்ரல் மாதம் அவர்களது திருமணம் நடக்கும் என தகவல் பரவி வந்த நிலையில், இதனை மறுத்துள்ள மஞ்சிமா, ஏப்ரலில் கௌதம் கார்த்திக் படப்பிடிப்புகளில் பிசியாக இருப்பார் என்றும் இதனால் திருமண தேதி உறுதியானதும் தெரிவிப்பதாகவும் சில பத்திரிகையாளர்களிடத்தில் கூறியுள்ளார்.









