2001-ம் ஆண்டு வெளியான ‘பத்ரி’ என்ற தமிழ்ப் படத்தில் அறிமுகமானவர் நடிகை பூமிகா சாவ்லா. அதன் பின்பு ‘ரோஜா கூட்டம்’, ‘சில்லுன்னு ஒரு காதல்’, ‘சிறுத்தை’, ‘சித்திரையில் நிலாச் சோறு’, ‘களவாடிய பொழுதுகள்’, ‘யு டர்ன்’, ‘கொலையுதிர் காலம்’ ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்திருக்கிறார்.
பூமிகா சாவ்லா சமீபத்தில் தெலுங்கில் இரண்டு பிளாக் பஸ்டர் படங்களான கோபிசந்தின் ‘சீட்டிமார் ‘ மற்றும் விஸாக் சென்னின் ‘பாகல்’ ஆகிய படங்களில் நடித்திருந்தார்.
தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, போஜ்பூரி என்று பல மொழிகளிலும் பூமிகா சாவ்லா நடித்திருந்தாலும், சென்னையை தனது இரண்டாவது வீடாக கருதுகிறார். மேலும் தமிழ் சினிமா ரசிகர்களின் அன்பையும் அரவணைப்பையும் ஒரு ஆசீர்வாதமாக கருதுகிறார்.
தமிழில் கடைசியாக வெளியான நயன்தாரா நடித்த ‘கொலையுதிர் காலம்’ படத்தைத் தொடர்ந்து, தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘கண்ணை நம்பாதே’ படத்திலும் பூமிகா சாவ்லா நடித்து வருகிறார்.

இந்தக் ‘கண்ணை நம்பாதே’ படத்தில் தனது கதாபாத்திரத்தை பற்றி பூமிகா சாவ்லா பேசும்போது, “இந்தப் படத்தில் கதையை நகர்த்தும் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நான் நடிக்கிறேன். மேலும், உண்மையைச் சொல்வதென்றால், சாதாரண கதாபாத்திரங்களில் நடிப்பதில் எனக்கு அலுப்பாக இருக்கிறது.
இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக இது போன்ற வேடங்களில் நடித்துள்ளேன். அதனால்தான் ‘கொலையுதிர் காலம்’ படத்தில் வித்தியாசமான நடிப்பை தேர்வு செய்தேன். எதிர்மறையான கதாபாத்திரங்களில் நடிப்பதில் எனக்கு கவலையில்லை, ஒரு நடிகராக, வெவ்வேறு கதாபாத்திரங்களை ஏற்று நடிக வேண்டும்.
தமிழ் சினிமா சில அற்புதமான உள்ளடக்கங்களை வழங்குகிறது. இனிமேல் தமிழில் அடிக்கடி பல படங்களில் பணியாற்றுவேன் என்று நம்புகிறேன்…” என்றார்.









