‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து காரணமாக இயக்குநர் மணிரத்னம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்ய லட்சுமி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரகுமான் உள்ளிட்ட பல மொழிகளை சேர்ந்த பிரபல நட்சத்திரங்கள் நடிக்கும் ‘பொன்னியன் செல்வன்’ படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாக்கப்பட்டு வருகிறது.
லைகா புரொடெக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை பிரம்மாண்டமாக இரண்டு பாகங்களாக உருவாக்குகிறார் இயக்குநர் மணிரத்னம்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் நடைபெற்றது. சுமார் 60-க்கும் மேற்பட்ட குதிரைகள் இந்தப் படப்பிடிப்பில் கலந்து கொண்டன. அப்போது ஏற்பட்ட ஒரு விபத்தில், ஒரு குதிரை உயிரிழந்துள்ளது.
இது தொடர்பாக இயக்குநர் மணிரத்னம் மீதும், குதிரையின் உரிமையாளர் மீதும் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இது குறித்து விலங்குகள் நல வாரியம் விசாரணை செய்ய மாவட்ட ஆட்சித் தலைவருக்கு, தெலுங்கானா விலங்குகள் நல வாரியம் கடிதம் எழுதியுள்ளது.
படப்பிடிப்பில் எதிர்பாராதவிதமாக நடந்த விபத்து காரணமாக குதிரை இறந்ததால் அதற்காக இயக்குநர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதை கண்டு திரையுலகத்தினர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.









