ஃபார்ட்சூன் ஃப்ரேம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் செல்வராம் மற்றும் வெங்கடேஷ் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘ஞானச்செருக்கு’.
இந்தப் படத்தில் மறைந்த ஓவியர் வீரசந்தானம், வ.ஐ.ச.ஜெயபாலன், தமிழ் மாறன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தை இயக்குநர் தரணி ராசேந்திரன் இயக்கியிருக்கிறார்.
‘ஞானச்செருக்கு’ படம் பற்றி இயக்குநர் தரணி ராஜேந்திரன் பேசும்போது, “நான் பொறியியல் படித்திருந்தாலும் எனக்குள் சினிமா ஆர்வம் அதிகமாக இருந்ததால் ஒளிப்பதிவு பக்கம் என் கவனம் திரும்பியது. அதன் பிறகு ஒளிப்பதிவில் டிப்ளமோ கோர்ஸ் முடித்தேன்.
சினிமாவில் உதவி இயக்குநராக சேர்வதில் ஏற்படும் காலதாமதம் தேவையில்லை என நினைத்ததால், நானே குறும்படங்களை எடுக்க ஆரம்பித்து அதன் மூலம் சினிமாவைக் கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன்.
ஒரு கட்டத்தில் நானே தனியாகப் படமெடுக்கும் நம்பிக்கை வந்தபோது ஓவியர் வீர சந்தானத்துடன் எனக்கு நட்பு ஏற்பட்டது. என் கதையின் நாயகனாக நடிக்க வீர சந்தானம் பொருத்தமான தேர்வாக இருந்தார்.
‘இந்தக் கதையை படமாக எடுப்பது அபத்தமான முயற்சி’ என்று கூட பலர் கூறினார்கள். முதலில் அரைமணி நேரம் படமாக எடுத்து பார்ப்போம் என்று நினைத்தேன். அதன் பிறகு ஒரு தயாரிப்பாளரிடம் இந்தக் கதையை கூறியபோது, ‘ஒரு பெரிய படமாக எடுக்கும் அளவிற்கு டெவலப் செய்யுங்கள்’ என்று கூறினார்.
எல்லாவற்றையும் முடித்த நேரத்தில் அவரால் அந்த படத்தை தயாரிக்க முடியாத சூழல் ஏற்பட்டது.. அந்த படத்தில் என்னுடன் இருந்த பலரும் அந்த சமயத்தில் விலகிவிட்டனர். அதன் பின்னர் நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரின் உதவியுடன் கொஞ்சம் கொஞ்சமாக பணம் போட்டு இந்த படத்தை எடுத்து முடித்தோம்.
இன்னும் சரியாகச் சொல்வதென்றால் க்ரவ்டு பண்டிங் முறையில்தான் இந்த படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இப்படி ஒரு விஷயம் ஓவியர் வீர சந்தானத்துக்கு தெரியாது. ஆனால், ஒரு கட்டத்தில் படப்பிடிப்பு நடத்த தேவையான பணம் இல்லை என்று தெரிய வந்தபோது என்னை அழைத்து கண்டித்தார்.
பின்னர் அவரை எப்படியோ சமாதானப்படுத்தி எனது சம்பளம், எனது மாமாவின் பெர்சனல் லோன் ஆகியவற்றைக் கொண்டு மாதா மாதம் கொஞ்சம் கொஞ்சமாக படப்பிடிப்பை நடத்தி முடித்தோம்..
ஓவியர் வீர சந்தானம்கூட, தனக்கு ஏதாவது சம்பளம் கொடுக்க வேண்டும் என நினைத்தால் அதையும் இந்த படத்திற்கு பயன்படுத்திக் கொள் என்று சொல்லிவிட்டார்.
இத்தனை கால இடைவெளியில் தாமதமாக இந்த படம் உருவானாலும் கால மாற்றம் இதன் கதையில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பது பிளஸ் பாயிண்ட்.
இந்தப் படத்தின் டப்பிங் முடிந்த பின்பு ஓவியர் வீர சந்தானம் மறைந்துவிட.. அது என்னை ரொம்பவே பாதித்தது. அதன் பிறகு சிறிய இடைவெளி விழுந்தாலும், மீண்டும் புதிய குழுவினருடன் இந்த படத்தின் வேலைகளை முடித்தேன்.
இந்தப் படம் வெளியாவதற்கு முன்பு இந்த படத்தின் மதிப்பு பற்றி வெளியே தெரிய வேண்டும். அதன் பிறகு அதை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்தேன்.
நான் எடுத்துள்ளது கமர்சியல் படம்தான். ஆனாலும், இந்தப் படத்தை திரைப்பட விழாக்களுக்கு அனுப்பினேன்.. கிட்டத்தட்ட நாற்பது நாடுகள் சிறந்த படமாக இதை அங்கீகரித்துள்ளன. இந்த படத்திற்கு இதுவரை 7 சர்வதேச விருதுகள் கிடைத்துள்ளன.
இயக்குநர் இமயம் பாரதிராஜா இந்த படத்தை பார்த்துவிட்டு என்னை கட்டிப் பிடித்து கை கொடுத்து பாராட்டினார். அவர் மட்டுமல்ல, எழுத்தாளர்கள், முக்கியமான அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இந்த படத்தைப் பார்த்து பாராட்டி உள்ளார்கள்.
இது வெகுஜன படம்தான். இந்த படத்திலும் மூன்று ராப் பாடல்கள் இருக்கின்றன.. 80 வயதில் உள்ள ஒரு கலைஞனின் எழுச்சிதான் இந்த படம். இந்த சமூகம், அதிகார வர்க்கம் ஒரு கலைஞனை எப்படி பார்க்கிறது என்பதைத்தான் இது காட்டுகிறது.
இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருந்தால் மிகப் பொருத்தமாக இருந்திருக்கும். அந்த அளவிற்கு முழுக்க, முழுக்க கமர்சியல் படம்தான் இது.
குடித்துவிட்டு கூத்தடிப்பவர்களுக்கும் இரட்டை அர்த்த வசனங்களை எதிர்பார்ப்பவர்களுக்கும் இந்த படம் நிச்சயம் பிடிக்காது.. காரணம் நான் குப்பை படத்தை எடுக்கவில்லை.. படம் பார்க்க வரும் ரசிகர்களை முட்டாளாக்கி அனுப்பக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்.
நல்ல படத்தை திரையிடக் கூடாது என்று எந்த தியேட்டர்காரர்களும் நினைப்பதில்லை. நல்ல படம் என்பதை அவர்களிடம் நாம்தான் சரியாக கொண்டு செல்ல வேண்டும். அவர்களுக்கும் வியாபாரம், குடும்பம் என்றெல்லாம் இருக்கிறது அல்லவா..? அதனால் அவர்களை நாம் குறை சொல்ல வேண்டியதில்லை.
இதற்கடுத்த எனது படங்கள் கமர்ஷியலாகவும், அதேசமயம் எனக்கான அடையாளமாகவும் இருக்கும் என்பதையும் சொல்லிக் கொள்கிறேன். விரைவில் இந்த படம் வெளியாக இருக்கிறது. அதற்கான வேலைகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன..” என்று கூறினார் அறிமுக இயக்குநரான தரணி ராசேந்திரன்.














