நீரின்றி, உணவின்றி, தொழில் இல்லாததால் வாழ்வாதாரத்துக்கு வழியின்றி தவிக்கும் விவசாயிகள் பிரச்சினையை மையப் பின்னணியாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் ‘வாழ்க விவசாயி’.
இந்தப் படத்தை கதிர் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் ‘பால் டிப்போ’ கதிரேசன் தயாரித்துள்ளார்.
இப்படத்தில் தேசிய விருது பெற்ற நடிகர் அப்புக்குட்டி, வசுந்தரா, முத்துராமன், ‘ஹலோ’ கந்தசாமி, ஸ்ரீகல்கி, ‘மதுரை’ சரோஜா அம்மாள், திலீபன், குழந்தை நட்சத்திரங்கள் வினோத், சந்தியா, ஆனந்த ரூபிணி, கவிஞர் விக்கிரமாதித்யன், விஜயன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – கே.பி.இரதன் சந்தாவத், இசை – ஜெயகிருஷ், பாடல்கள் – யுகபாரதி, தமிழ்மணி அமுதன், தமயந்தி, படத் தொகுப்பு – பா.பிரவின் பாஸ்கர். கலை இயக்கம் – ஆர். சரவண அபிராமன். நடனம் – ‘காதல்’ கந்தாஸ், ஒலிக் கலவை – G.தரணிபதி, மக்கள் தொடர்பு – சக்தி சரணன். புதுமுக இயக்குநரான பி.எல்.பொன்னி மோகன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்திற்கான படப்பிடிப்பு ராஜபாளையம், தென்காசி, வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர், அதன் அருகிலுள்ள சொக்கம்பட்டி, விருதுநகர் போன்ற ஊர்களிலும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் நடந்துள்ளது.
விவசாயம் சாகுபடி செய்து அறுவடைக் காலம்வரையிலும் படமாக்கப்பட வேண்டியிருந்ததால் இந்தப் படத்தில் முற்றிய நெல் இடம் பெறுவது அவசியம் என்பதால் உரிய காலம் வரும்வரை நீண்ட நாள் காத்திருந்து எடுத்துள்ளனர்.
படத்தில் யுகபாரதியின் வரிகளின் ஆறு பாடல்கள் உள்ளன. குறிப்பாக, “அம்மாடி அம்மாடி நெல் வாசம்.. அன்பை அள்ளித் தந்திருச்சு உன் பாசம்… வெள்ளாம எல்லாமே தண்ணீரிலே… என் எல்லாமே உன் கண்ணீரிலே…” என்கிற இந்தப் பாடல் காதல் பாடல் போலவும் விவசாயம் சார்ந்து உணர்வுகளைத் தொடும் வகையிலும் இருக்குமாம்.
இப்படம் தயாராகி பொங்கலுக்கு வெளியிடுவதாக எதிர்பார்ப்புடன் இருந்த படக் குழுவினர். ரஜினிகாந்த் நடித்த ‘தர்பார்’ பொங்கலுக்கு வருவதால் சற்று இடைவெளி விட்டுச் வெளியீட்டை இப்போது தள்ளி வைத்துள்ளனர்.
விவசாயிகளின் அறுவடைக் காலத்தில் படத்தை வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டதில் படக் குழுவினர் மொத்தமும் வருத்தத்தில்தான் இருக்கிறார்கள்.
விவசாயிகள் வாழ்ந்தால்தான் நாடு வாழும் என்கிற கருத்தை மையப்படுத்தி இப்படம் உருவாகியிருக்கிறது. மேலோட்டமாக இல்லாமல் முழுக்க முழுக்க விவசாயம் சார்ந்த பிரச்சினைகளை அலசுகிற இந்தப் படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார் தேசிய விருது நடிகர் அப்புக்குட்டி.
படம் தாமதமானது குறித்து நடிகர் அப்புக்குட்டி பேசும்போது, “இந்த ‘வாழ்க விவசாயி’ திரைப்படம் எனக்கு ஸ்பெஷலான படம். ஒரு விவசாயியின் மகனான நான் இதில் விவசாயியாகவே வாழ்ந்திருக்கிறேன். எனக்கு இப்படத்தின் மீது பெரும் மதிப்பு உள்ளது. நான் நடித்த விவசாயி கதாப்பாத்திரத்திற்காகப் பெருமைப்படுகிறேன். அந்தப் படம் என் எதிர்பார்ப்புக்குரிய படம் என்பேன்.
நாங்கள் இந்த விவசாயம் சார்ந்த கதையை தயாரிப்பாளரிடம் சொல்லிச் சம்மதம் பெற்ற காலம் ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு எல்லாம் முந்தியது. ஆனால் அதற்குப் பிறகு விவசாயம் சார்ந்து நிறைய படங்கள் வந்தன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரியாக இருந்தது. ஆனால் அது பற்றி நான் பதற்றம் அடையவில்லை; வருத்தப்படவில்லை.
ஏனென்றால் நான் எடுத்துக் கொண்டுள்ள கதையும் கருத்தும் அழுத்தமானவை. என்னுடைய படத்தின் மீதும் கதையின் மீதும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. சொல்லியுள்ளவிதத்தின் மீதும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
எனவே இந்தப் படம் விவசாயம் சார்ந்த படங்களில் பத்தோடு பதினொன்றாக நிச்சயமாக இருக்காது. அதே சமயம் விவசாயம் சார்ந்த மற்றப் படங்களை போட்டியாகவும் பார்க்கவில்லை.
விவசாயம் பற்றிய எல்லா திரைப்படங்களையும் நான் மதிக்கிறேன். வரவேற்கிறேன். விவசாயம் என்று வரும் அத்தனை கதைகளையும் நாங்கள் வரவேற்கிறோம். விவசாயம் ஒரு இழிவான தொழில் அல்ல. மதிப்பிற்குரிய தொழில், அறம் சார்ந்த தொழில் இது என்பதைப் படத்தில் சொல்லியிருக்கிறோம்.
உலகத்தின் தொழில் சங்கிலித் தொடரில் அனைத்தும் விவசாயத்தை சுற்றித்தான் இருக்கின்றன. ஆனால் மக்கள் அதைப் பார்க்கின்ற பார்வையில் மதிப்பில்லை., வணிக உலகம் விவசாயத்தின் மீது காட்டுகிற பார்வையும் தவறாக உள்ளது. விவசாயம் செய்யும் மக்களின் மனதில் தாழ்வு மனப்பான்மை உண்டாகும்படி விவசாயியை இந்த உலகமும் தாழ்வாக நினைக்கிறது. வணிகச் சந்தையும் தாழ்த்தப்பட்டவர்களாகவே பார்க்கிறது.
விவசாயத்துக்கு எதிரான வணிக அரசியலை மறைமுகமாக சொல்லியிருக்கிறோம். கருத்துப் பிரச்சாரம் செய்யாமல் அதைப் புரிய வைத்திருக்கிறோம். இந்தப் படத்தில் போராட்டம் இருக்காது. கிளர்ச்சி, புரட்சி எதுவும் இருக்காது. ஆனால், நெகிழ்ச்சியாக இருக்கும்.
இந்தப் படம் இந்த 2020 பொங்கல் தினத்தன்று திரைக்கு வந்திருக்க வேண்டியது தள்ளிப் போய்விட்டது. இது வருத்தமான விஷயம்தான். ‘வாழ்க விவசாயி’ படம் பொங்கலுக்கு வருவதுதான் சரியானது என்பேன்.
‘தை மாதம்’ பொங்கல் காலம் என்பது விவசாயிகளின் அறுவடைக் காலம். விவசாயம் முடிந்து அறுவடை செய்யும் அந்தக் காலக்கட்டத்தில் விவசாயிகள் பற்றிய படம் வெளியிட்டால் நன்றாக இருக்கும் என்ற நோக்கத்தில் பொங்கலுக்காகத் திட்டமிடப்பட்டது.
ஆனால் ‘தர்பார்’ போன்ற பிரம்மாண்டமான வணிக ரீதியான படங்களின் வெளியீட்டின்போது வெளியிட்டால் வெற்றி பாதிப்பது மட்டுமல்லாமல் இம்முயற்சி கவனம் பெறாமல் போய்விடும் என்பதால் நம் படத்தை சற்றுத் தள்ளி வைத்துள்ளனர்.
நம் படம் சரியான நேரத்தில் வர வேண்டும். இல்லையேல் சரியானவிதத்தில் மக்களைச் சென்றடைய வேண்டும். எனவே சற்று தாமதமானாலும் சரியான விதத்தில் இன்னொரு நாள் வெளியாகி மக்களைச் சென்றடைந்தால் எனக்கு மகிழ்ச்சிதான்.
விவசாயிகளின் வாழ்க்கை, ஒரு போராட்டமாக இருப்பதுபோல் இந்தப் படத்தின் வெளியீடும் ஒரு சவாலாகத்தான் இருக்கும் போலிருக்கிறது.
சாகுபடி செய்யும்போது ஒரு விவசாயி புயல், காற்று, கனமழை, வெள்ளம் போன்ற அனைத்து இயற்கைச் சீற்றங்களையும் தடைகளையும் சந்தித்துத்தான் மகசூல் அறுவடை செய்கிறான். அதுபோல்தான் இந்தப் படமும் சவால்களையும் தடைகளையும் தாண்டி வெற்றி மகசூலை அறுவடை செய்யும்..!
நான் இப்போது எட்டு படங்களில் நடித்து வருகிறேன். ‘வல்லவனுக்கு வல்லவன்’, ‘பூம் பூம் காளை’, ‘வைரி’, ‘ரூட்டு’, ‘மாயநதி’, ‘குஸ்கா’, ‘இந்த ஊருக்கு என்னதான் ஆச்சு’, ‘பரமகுரு’, ‘கல்தா’ போன்ற படங்கள் கைவசம் உள்ளன. எனக்கு எந்த வருத்தமும் இல்லை; மகிழ்ச்சியாகவே இருக்கிறேன்…” என்றார்.