குழந்தைகள் மற்றும் குடும்பங்களின் ஃபேவரைட் ஹீரோவான சிவகார்த்திகேயன் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில், ராஜேஷ்.எம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘Mr.லோக்கல்’.
ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா மிக பிரமாண்டமாக தயாரித்துள்ள இந்த படம் கோடை விருந்தாக வரும் மே 17-ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.
சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் டீசர், டிரைலர் மற்றும் பாடல்கள் மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு பிரசாத் லேப் தியேட்டரில் நேற்று மாலை நடைபெற்றது.
ஒட்டு மொத்தப் படக் குழுவினரும் இந்த விழாவில் கலந்து கொண்டு படத்தைப் பற்றியும், தங்களது அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் முதலில் பேசிய படத்தின் விநியோகஸ்தரான சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் சக்திவேலன் பேசும்போது, “சிவா நடிப்பில் மிகப் பெரிய ஹிட்டை கொடுத்த ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தின் வியாபாரம் எனக்கு தெரியும். தயாரிப்பைவிடவும் 2 மடங்கு லாபம் கொடுத்த ஒரு படம். அதில் இருந்து அவரின் ஒவ்வொரு படத்தின் வியாபாரத்தையும் நான் கவனித்து வருகிறேன்,
சிவா இப்போது மிகப் பெரிய உயரத்துக்கு போயிருக்கிறார். குழுந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு மிகவும் பிடித்த ஆல் செண்டர் ஹீரோவாகி இருக்கிறார். சிவா சார் படம் எப்போ ரிலீஸ் பண்ணாலும் ஹிட் அடிக்கும், இது உச்சக்கட்ட கோடையில் வெளியாகிறது, இந்த கோடையில் இந்த படம்தான் ஆட்சி செய்யும்…” என்றார்.
நடன இயக்குநர் தினேஷ் பேசும்போது, “இயக்குநர் ராஜேஷின் முதல் படத்திலிருந்து நான் அவருடன் பணியாற்றி வருகிறேன். ஹிப் ஹாப் ஆதியிடம் பேசும்போது பல்லவி, சரணம் எல்லாம் எனக்கு தெரியாதுன்னு சொல்வார், ஆனால் பாடல்கள் எல்லாம் செமையா இருக்கும். சிவகார்த்திகேயன் நடித்த எல்லா படங்களிலுமே நான் ரெண்டு, மூணு பாடல்கள் பண்ணிருவேன். 2011-ல சிவாவை நான் எப்படி பார்த்தேனோ, அப்படியேதான் இப்பவும் இருக்கார்…” என்றார்.
நடிகர் ரோபோ சங்கர் பேசும்போது, “இயக்குநர் ராஜேஷ் சார் படம் என்றாலே குடும்பத்தோடு ரசித்து பார்க்கும் படமாக இருக்கும். சிவாவை அப்போ எப்படி பார்த்தோமோ அப்படியே இருக்கார். ஒவ்வொரு காட்சியிலும் மற்ற நடிகர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க ஒரு பெரிய மனசு வேண்டும். அவர் நடனத்திலும் மிகப் பெரிய உயரத்தை தொட்டிருக்கிறார். ஹிப் ஹாப் ஆதி இளைஞர்கள் அனைவரையும் ஈர்த்து தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்…” என்றார்.
இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி பேசும்போது, “ஞானவேல்ராஜா சாருடன் இன்று நேற்று நாளை படத்தில்தான் எனக்கு அறிமுகம் கிடைத்தது. அவருடன் இந்த படத்தில் முதன் முறையாக இணைந்திருக்கிறேன். இயக்குநர் ராஜேஷ் சாரின் அணுகுமுறையே வித்தியாசமாக இருக்கும், அவருடன் வேலை பார்த்தது மிக நல்ல அனுபவம்.
இந்தப் படத்துக்கு 9 பாடல்கள் இசையமைத்தோம், அதில் 4 பாடல்கள்தான் படத்தில் இருக்கும். சிவகார்த்திகேயன் அவர்களுக்கு முதன்முறையாக இசையமைக்கிறேன். இந்த படத்தில் அனிருத் பாடியிருப்பது எனக்கு ஸ்பெஷலான ஒரு தருணம். இது முழுக்க முழுக்க நகைச்சுவையான ஒரு படம், ஹீரோ ஸ்தானத்தில் இருந்து இறங்கி செம்ம லோக்கலா காமெடியில் கலக்கியிருக்கிறார் சிவா…” என்றார்.
தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா. “நாயகன் சிவகார்த்திகேயனை ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ சமயத்தில் எப்படி அவரை சந்தித்தேனோ, அதே மாதிரிதான் இன்றும் இருக்கிறார். எவ்வளவு பெரிய படத்தையும் தன் தோள்களில் தாங்கக் கூடிய ஒரு ஹீரோவாக இன்று மாறியிருக்கிறார்.
வழக்கமாக விநியோகஸ்தர்கள்தான் ‘எப்போ ரிலீஸ்’; ‘எப்போ ரிலீஸ்’னு கேட்பாங்க. ஆனால் இந்த படத்துக்கு குழந்தைகள், குடும்பங்கள் எப்போ ரிலீஸ்னு கேட்டுக்கிட்டே இருக்காங்க. ராஜேஷ் ஒரு எளிமையான இயக்குநர். எந்த சூழ்நிலையிலும் கூலாக இருப்பவர்.
டி.ராஜேந்தர் சாருக்கு அடுத்து அதிகப்படியான துறைகளில் வித்தகர் ஹிப் ஹாப் ஆதிதான். ஹீரோவுக்கு இணையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் நயன்தாரா. இதுவொரு முழு நீள பொழுதுபோக்கு திரைப்படமாக வந்திருக்கிறது.
என் வாழ்வில் மிக முக்கியமான, சிரமமான காலகட்டத்தில் எனக்கு இந்த படத்தை பண்ணி கொடுத்திருக்கிறார் சிவகார்த்திகேயன். இதை எக்காலத்திலும் நான் மறக்க மாட்டேன்…” என்றார்.
படத்தின் இயக்குநரான எம்.ராஜேஷ் பேசும்போது, “சிவகார்த்திகேயன், ஞானவேல்ராஜா சாருடன் இந்த படத்தை நான் செய்கிறேன் என்ற பேச்சுவார்த்தை வந்த உடனேயே எனக்கு பெரிய ஹிட் படமா கொடுத்துருங்க என்றார் ஞானவேல்ராஜா சார்.
“குடிக்கிற காட்சிகள், குடித்து விட்டு பாடுற பாடல், பெண்களை திட்டி பாடுற பாடல் என எதுவும் வேண்டாம்” என்றார் சிவகார்த்திகேயன். அப்படி எதுவும் இந்த படத்தில் இருக்காது, கிளீன் படமாக இருக்கும்.
சிவா சார் தொலைக்காட்சியில் இருந்த காலத்தில் இருந்தே நான் அவரின் ரசிகனாக இருக்கிறேன். இந்த படத்தில் இவ்வளவு நடிகர்கள் வந்ததற்கு முக்கிய காரணமே சிவா சார்தான்.
சிவாவுக்கு சமமான கதாபாத்திரம் நயன்தாராவுடையது. நயன்தாராவிடம் கதை சொன்னவுடன் அவருக்கும் மிகவும் பிடித்து போனது. அவரும் படத்தின் மிகப் பெரிய பலமாக அமைந்திருக்கிறார். ராதிகா மேடம் இத்தனை வருடங்களாக நடித்து வருபவர், அவரின் அனுபவம் எங்களுக்கு ஒரு பாடம்.
நட்சத்திரங்கள் அத்தனை பேரையும் ஒரே படத்தில் கொண்டு வந்ததுதான் சவாலான விஷயம், அதை சிறப்பாக செய்து கொடுத்தார் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா.
நான் நெகடிவ்வான விஷயங்களை விரும்புவதில்லை, ஆதியும் அது போலவே இருந்ததால் எங்கள் முதல் சந்திப்பிலேயே இருவருக்கும் செட்டானது. அவர் பாடல்களும், இசையும் சிறப்பாக வந்திருக்கிறது. கோடையில் குடும்பத்துடன் போய் ரசிக்கும்வகையில் ஒரு படமாக இருக்கும்..” என்றார்.
நாயகன் சிவகார்த்திகேயன் பேசும்போது, “இது மிகவும் எளிமையான ஒரு பொழுதுபோக்கு படம். நான் டிவியில் இருந்த காலத்தில் இருந்தே ராஜேஷ் சாருடன் பணிபுரியும் ஆசை எனக்குள் இருந்தது. ‘சிவா மனசுல சக்தி’ படத்தில் ஒரு சின்ன இடத்தில் நான் டப்பிங் பேசியிருக்கிறேன்.
அதன் பிறகு ராஜேஷ் சார் எனக்காக பெரும் முயற்சி எடுத்து உருவாக்கிய படம்தான் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’. என் கேரியரில் மிக முக்கியமான படம். மறுபடியும் ராஜேஷூடன் இணைய பேச்சுவார்த்தை நடந்தது. எப்படியாவது அவருடன் திரும்பவும் ஒரு படம் பண்ணிடனும் என்ற ஆசை எனக்குள் இருந்தது. அந்த ஆசை இந்தப் படத்தில்தான் நிறைவேறி இருக்கிறது. நல்ல ஒரு குழு அமைந்ததுதான் இந்த படத்தின் மிகப் பெரிய பலம்.
நயன்தாரா உடன் எனக்கு இது இரண்டாவது படம். ‘வேலைக்காரன்’ படத்தில் பெரிய அளவில் அவருக்கும் நடிக்க வாய்ப்பு கொடுக்க முடியாமல் போய் விட்டது. இந்தப் படத்தில் அவர் படம் முழுக்க வருவார்.
இசையமைப்பாளர் ஆதி படத்துக்கு என்ன தேவையோ அதை சிறப்பாக கொடுக்கிறார். பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் கலக்கியிருக்கிறார். இந்த படத்தை மிகவும் கலர்ஃபுல்லாக கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன்.
சினிமாவில் வெளியில் சொல்ல வேண்டிய விஷயங்களை யாரும் இங்கு பேசுவதில்லை. ஞானவேல்ராஜா சார் அதை வெளிப்படையாக பேசுயிருப்பது பெரிய விஷயம்.
இனிமேல் 6 மாதங்களுக்கு ஒரு முறை நல்ல நல்ல படங்கள் மூலம் உங்களை சந்திப்பேன். இது எனக்கு ஒரு புதுமையான விஷயமாக இருக்கும். ரசிகர்கள்தான் என் பலம். அவர்கள் கொடுக்கும் ஊக்கம்தான் என்னை மேன்மேலும் உயர்த்துகிறது…” என்றார் நடிகர் சிவகார்த்திகேயன்.

















