சுபசெந்தில் பிக்சர்ஸ் என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்திற்கு “ஐவராட்டம்” என்று பெயரிட்டுள்ளனர். இந்தப் படத்தில் நடிகர் ஜெயபிரகாஷின் மகன்கள் நிரஞ்சன் ஜெயபிரகாஷ், துஷ்யந்த் ஜெயபிரகாஷ் இருவரும் நடிக்கிறார்கள். இவர்களுடன் அம்ருத் கலாம் என்பவரும் முக்கிய வேடமேற்கிறார். இவர்களுடன் முக்கிய வேடத்தில் ஜெயபிரகாஷ், சி.கே.செந்தில்குமார் இருவரும் நடிக்கிறார்கள்.
கதாநாயகியாக நித்யாஷெட்டி நடிக்கிறார். மற்றும் ‘பசங்க’ சிவகுமார், ‘லொள்ளு சபா’ மனோகர், கிங்காங், ‘மதயானை கூட்டம்’ காசி, ராஜபாண்டி, ஆலன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – ரவீந்திரநாத் குரு
எடிட்டிங் – சூர்யா
இசை – சுவாமிநாதன். இவர் இசையமைப்பாளர் செல்வகணேஷின் மகன்.
பாடல்கள் – மோகன்ராஜன்
நடனம் – நந்தா
கலை – மயில்கிருஷ்
தயாரிப்பு மேற்பார்வை – சலீம்
கதை, திரைக்கதை, வசனம் இயக்கம் – மிதுன் மாணிக்கம்.
தயாரிப்பு – சி.கே.செந்தில்குமார்.
படம் பற்றி இயக்குனர் மிதுன் மாணிக்கம் பேசும்போது, “விளையாட்டை மையப்படுத்தி இப்போது நிறைய படங்கள் வருகின்றன. இது சினிமாவின் மூலம் இளைஞர்களை உற்சாகப்படுத்தி விளையாட்டை ஊக்குவிக்கும் முயற்சி. அந்த புதிய முயற்சியில் நாங்களும் இறங்கி இருக்கிறோம்.
சிவகங்கை மாவட்டத்தில் ஐந்து பேர் மட்டும் விளையாடும் கால்பந்தாட்டம் பற்றிய கதை இது. வேறு எந்த இடத்திலும் இந்த விளையாட்டை விளையாட அரங்கம் இல்லை. இதற்கான அரங்கு சிவகங்கையில் மட்டும்தான் இருக்கிறது. கூடவே, அண்ணன் தம்பிகளுக்குள் ஏற்படும் பிரச்சனை, மற்றும் காதல், குடும்ப சென்டிமென்டையும் உள்ளடக்கிய கதை இது. படத்தின் படப்பிடிப்பு முழுவதும் சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்று முடிந்திருக்கிறது…” என்றார்.









