நடிகை ஆண்ட்ரியா, தான் நடிக்கிற ஒவ்வொரு படத்திலும் அழுத்தமாக முத்திரை பதிக்கக் கூடியவர். அந்த வரிசையில் அவர் தற்போது அதிரடியான காவல் துறை அதிகாரியாக ‘மாளிகை’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
சாந்தி பவானி என்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர்கள் கமல்போரா, ராஜேஷ் குமார் ஆகியோர் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர். இத்திரைப்படம் ஒரே நேரத்தில் கன்னடம், தமிழில் உருவாகியுள்ளது.
இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் ‘தில்’ சத்யா.
இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று இரவு கிரீன் பார்க் ஹோட்டலில் மிகப் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது.
விழாவின் துவக்கத்தில் தயாரிப்பாளர்கள் கமல் போரா மற்றும் ராஜேஷ் குமார் இருவரும் விழாவுக்கு வந்திருந்த விருந்தினர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார்கள்.
இந்த விழாவில் இயக்குநர் தில் சத்யா பேசும்போது, “தமிழில் எனக்கு இதுதான் முதல் படம். இந்தப் படத்தை இயக்கியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப் படத்தில் ஆண்ட்ரியா ஆங்கிலப் பட நாயகிகளைப்போல் நடித்துள்ளார். கதாநாயகனாக நடித்திருக்கும் ஜே.கே, இந்தப் படம் கதாநாயகிக்குதான் முக்கியத்துவம் என்றாலும், நல்லக் கதையம்சம் கொண்ட படம் என்பதற்காக நடித்துக் கொடுத்தார். இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் சாரைப் பற்றி நான் சொல்லவே வேண்டாம். அவர் உண்மையிலேயே பெரிய மனிதர். சகஜமாக பழகி நடித்துக் கொடுத்தார். படத்தில் வேலை செய்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். இது ஒரு நல்ல ஆக்ஷன் திரில்லர் படம். ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்..” என்றார்.
நடிகை ஆண்ட்ரியா பேசும்போது, ” இந்தப் படத்தில் நான் நடிக்க முக்கிய காரணமே எனக்கு இரண்டு வேடங்கள் என்பதால்தான். பொதுவாக ஹீரோக்களுக்குத்தான் இம்மாதிரியான வேடங்கள் கிடைக்கும். அதோடு இந்தப் படம் பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் கொண்ட படம். ஒரே படத்தில் ரொமான்ஸ், பைட், பீரியட் கேரக்டர் எல்லாமும் இருக்கு. அதனால்தான் ஒத்துக் கொண்டேன்.
நாயகிக்கு முக்கியத்துவம் அதிகமுள்ள இந்தப் படத்தில் நடித்ததிற்காக ஹீரோ ஜே.கே-வுக்கு எனது நன்றிகள். இந்த மாதிரியான கதை ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும். மற்றும் படத்தில் என்னுடன் நடித்த அலி சார் மற்றும் கே.எஸ்.ரவிக்குமார் சார் இருவருக்கும் எனது நன்றி.
நான் நிறைய பெரிய இயக்குநர்களிடம் வேலை செய்திருக்கிறேன். ஆனால், இந்தப் படத்தின் அனுபவம் என் நடிப்பு கேரியரில் மிகவும் முக்கியமானதாக உள்ளது.
இந்தப் படம் முதலில் கன்னடத்தில் பண்ண வேண்டிய படமாகத்தான் இருந்தது. ஆனால் தயாரிப்பாளர்தான் எனக்கு தமிழிலும் மார்க்கெட் இருக்கு. அதனால், தமிழிலும் எடுப்போம் என்று சொன்னார்.
ஒரு இந்தி தயாரிப்பாளர், கன்னட இயக்குநர் இருவருக்கும் எனக்கு தமிழில் மார்க்கெட் இருக்கிறது என்ற உண்மை தெரிந்திருப்பதில் எனக்கு தோன்றி இருப்பது மகிழ்ச்சிதான். ஆனால் இந்த உண்மை தமிழ்ச் சினிமாவில் இருப்பவர்களுக்கு இல்லையே..?” என்றார்.
இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பேசும்போது, “நான் இப்போது ஏழு தமிழ் படங்களில் நடித்து வருகிறேன். இந்த இயக்குநர் சொன்ன கதை எனக்கு மிகவும் பிடித்தது. அதனால்தான் உடனேயே நடிக்க சம்மதித்தேன். இந்தப் படத்தில் நான் போலீஸ் கமிஷனர் வேடத்தில் நடித்திருக்கிறேன்.
இந்தப் படத்தின் இயக்குநர் ‘தில்’ சத்யாவிற்கு நிறைய விசயங்கள் தெரிந்திருக்கிறது. ஆனாலும் என்னிடம் யோசனைகள் கேட்பார்.
இப்படத்தின் ஹீரோ ஜே.கே. மிகவும் அழகாக இருக்கிறார். ஆண்ட்ரியா திறமையானவர். நடனம், பாட்டு, நடிப்பு என பன்முகத் திறமை அவரிடம் உண்டு. அவர் நடிப்பில் ‘தரமணி’ படம் எனக்கு மிகவும் பிடிக்கும். அதைப்போல் இந்தப் படத்திலும் சிறப்பாக நடித்திருக்கிறார்…” என்றார்.
இசையமைப்பாளர், நடிகர் விஜய் ஆண்டனி பேசுகையில், “நான் கலந்து கொண்ட சினிமா சம்பந்தமான நிகழ்ச்சிகளில் இதுதான் மிகப் பெரிய நிகழ்ச்சியாக இருக்கிறது. படத்தின் டைட்டில், டீசர், இந்த விழா என எல்லாமே பாசிட்டிவாக இருக்கிறது.
இந்தக் கதை மிக வித்தியாசமாக அமைந்திருப்பதால் நிச்சயம் இந்தப் படம் ஜெயிக்கும். தயாரிப்பாளர் கமல்போரா சார் இன்னும் நிறைய படங்களை தமிழில் தயாரிக்க வேண்டும். ‘சகலகலாவல்லி’ ஆண்ட்ரியா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இந்தப் படத்திலும் அவர் கலக்கி இருப்பார் என்று நம்புகிறேன். இந்தப் படத்தின் இயக்குநருக்கு மிகப் பெரிய வாழ்த்துகள்..” என்றார்.













