டபுள் மீனிங் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் தயாரித்திருக்கும் முதல் படம் ‘வாட்ச்மேன்’.
ஜி.வி.பிரகாஷ் குமார், சம்யுக்தா ஹெக்டே, சுமன், ராஜ் அர்ஜூன், யோகி பாபு ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படத்தை, இயக்குநர் விஜய் இயக்கியிருக்கிறார்.
ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கும் இந்தப் படம் வரும் ஏப்ரல் 12-ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.
இதையொட்டி படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு பிரசாத் லேப் தியேட்டரில் நேற்று மாலை நடைபெற்றது.
தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் பேசும்போது, “எங்கள் நிறுவனத்தில் இப்போது மூன்று படங்களை தயாரித்து வருகிறோம். அதில் முதல் படம்தான் இந்த ‘வாட்ச்மேன்’ திரைப்படம்.
இயக்குநர் விஜய் எப்போதுமே நாயகிகளை அறிமுகப்படுத்துவார், அவர்கள் அதன் பிறகு மிகவும் புகழ் பெற்ற நடிகைகளாக வலம் வருவார்கள். அப்பேர்ப்பட்ட விஜய் இப்போது எங்களை ஒரு தயாரிப்பாளராக அறிமுகப்படுத்தியிருக்கிறார். அவருக்கு எங்களது நன்றி.
எங்கள் முதல் படத்திலேயே மிகச் சிறந்த தொழில் நுட்பக் கலைஞர்கள் அமைந்தது எங்களுக்கு கிடைத்த வரம், இந்த கோடை விடுமுறையில் அனைவரும் ரசிக்கும் படமாக இது இருக்கும்…” என்றார்.
படத் தொகுப்பாளர் ஆண்டனி பேசும்போது, “இந்தப் படத்தில் ஒரு நாயும் நடித்துள்ளது. அந்த நாய் எப்படி சொல்லிக் கொடுத்த மாதிரி நடித்தது என்று எனக்கு இப்போதுவரையிலும் மிகவும் ஆச்சர்யமாக இருக்கிறது. படத்தை பார்க்க நானும் ஆவலாக இருக்கிறேன்…” என்றார்.
தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான பி.டி.செல்வக்குமார் பேசும்போது, “இயக்குநர் விஜய் எனக்கு ‘தலைவா’ படத்தில் இருந்து நல்ல நண்பர். அவர் தயாரிப்பாளர்களின் இயக்குநர்.
தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் ஆஸ்திரேலியாவில் படித்தவர். ஆனாலும் தமிழ் சினிமாவில் சினிமா மீது மிகுந்த காதல் உடையவர். நல்ல சினிமாக்களை எடுக்க வேண்டும் என்ற தாகத்தில் சினிமாவுக்கு வந்தவர். ‘சைக்கோ’, ‘மாயோன்’ என அடுத்தடுத்து நல்ல, புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
குழந்தைகள், குடும்பங்களை மையமாக வைத்து கோடை விடுமுறையில் இந்த ‘வாட்ச்மேன்’ படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறோம். இந்த படத்தால் யாருக்கும் நஷ்டம் வந்து விடக்கூடாது என்ற நல்ல மனதோடு இருக்கிறார். அவர் நல்ல மனதுக்கு எல்லாமே நல்லதாக அமையும்…” என்றார்.
நடிகர் சுமன் பேசுகையில், “இந்தப் படத்தில் எனக்கு நல்ல ஒரு கதாப்பாத்திரத்தையும், அதை சிறப்பாக செய்ய சுதந்திரத்தையும் கொடுத்த விஜய் அவர்களுக்கு நன்றி.
இதுவரையிலும் 9 மொழிகளில் 450 படங்களில் நடித்திருக்கிறேன். தமிழ் சினிமாவில் நடிப்பது எப்போதுமே எனக்கு மகிழ்ச்சி அளிக்கும் விஷயம். இந்த கதை மிகவும் புதுமையாக இருந்தது, இயக்குநர் விஜய் ஒவ்வொரு படத்திலும் புதுப்புது முயற்சிகளை செய்து வருகிறார்.
இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் பல பாடல்களை கேட்டு ரசித்திருக்கிறேன். அவர் எப்படி நடிப்பார் என்பதை பார்க்க ஆவலாக இருந்தேன். படப்பிடிப்பு தளத்துக்கு வந்தால் காட்சியை பற்றி ஒரு முறை கேட்பார், நடித்து காட்டுவார். அவருக்கு இந்த படம் ஒரு முக்கியமான படமாக இருக்கும்.
இந்தப் படத்தை தயாரிக்க தயாரிப்பாளருக்கு மிகப் பெரிய தைரியம் வேண்டும். ஐதராபாத்தில் 175 ஏக்கர் நிலத்தை இந்தியாவின் வாட்ச்மேன்களாக இருக்கும் ராணுவ வீரர்களுக்கு தானமாக கொடுக்க இருக்கிறேன்…” என்றார்.
படத்தின் இயக்குநரான விஜய் பேசும்போது, “ஒரு இயக்குநருக்கு ஒவ்வொரு படமும் முக்கியமான படம். அருண்மொழி மாணிக்கம் எனக்கு ஐந்தாண்டுகளாக நண்பர், அவர் தயாரிக்கும் முதல் படத்தை இயக்கும் வாய்ப்பை எனக்கு கொடுத்ததற்கு நன்றி.
ராஜ் அர்ஜூன் ‘தாண்டவம்’, ‘தலைவா’, இந்தியில் சீக்ரெட் சூப்பர் ஸ்டார் படங்களில் நடித்தவர். ‘வாட்ச்மேன்’ படத்தை பார்த்தால் அவர் பக்கத்தில் போக எல்லோரும் பயப்படுவார்கள்.
சுமன் சார் சின்ன வயதில் இருந்து எனக்கு ஆக்ஷன் ஹீரோ. அவரை இந்த படத்தில் நடிக்க வைக்க அணுகியபோது, ‘கதை புதுமையாக இருக்கிறது’ எனக் கூறி உடனடியாக ஒப்புக் கொண்டார்.
ஜி.வி.பிரகாஷின் வளர்ச்சி எனக்கு எப்போதுமே மகிழ்ச்சி அளிக்கக் கூடியது. நாங்கள் இருவரும் ஒரே நேரத்தில் சினிமாவில் அறிமுகமானவர்கள். அவர் ஒரு நடிகராக மிகப் பெரிய உயரத்துக்கு சென்றிருக்கிறார். இது ஒரு நல்ல படமாக இருக்கும்…” என்றார்.
நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் பேசும்போது, “நாச்சியார்’ படத்தில் என் கதாபாத்திரத்தை வடிவமைத்து கொடுத்தவர் விஜய் சார்தான். அவர் இயக்கிய ஒன்பது படங்களுக்கு நான் இசையமைத்திருக்கிறேன். இப்போது அவரின் இயக்கத்தில் ஒரு நடிகனாகவும் நடித்திருக்கிறேன். இந்த ‘வாட்ச்மேன்’ படத்தை ஒரு ஸ்டைலிஷ் படமாக உருவாக்க ஒட்டு மொத்த தொழில் நுட்பக் குழுவும் கடுமையாக உழைத்திருக்கிறது. கோடை விடுமுறையில் குழந்தைகளை கவரும் ஒரு படமாக இது இருக்கும்…” என்றார்.














