Power King Studio நிறுவனத்தின் சார்பில் பிரபல விநியோகஸ்தரான S. பிரபாகர் தயாரிக்கும் முதல் திரைப்படம் ‘IPC 376’.
தயாரிப்பாளர் எஸ்.பிரபாகர், ‘96’, ‘ ஜூங்கா’, ‘பென்சில்’ போன்ற பல வெற்றிப் படங்களை விநியோகம் செய்தவர். டிஸ்ட்ரிபியூட்டர் மற்றுமல்லாது எக்ஸிபிட்டரும்கூட. பல தியேட்டர்களை நடத்தி வருகிறார். இவர் முதல்முறையாக அதுவும் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் தயாரிக்கும் இரு மொழிப் படம் இது.
இந்தப் படத்தில் நந்திதா ஸ்வேதா முதன் முறையாக ஆக்சன் கதாநாயகியாக பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடிக்கிறார். படம் முழுக்க ஆக்ஷன் நிரம்பியிருக்கும். ஸ்டண்ட் மாஸ்டர் சூப்பர் சுப்பராயன் படத்தில் வித்தியாசமான ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
பிரபு சாலமன், பாலசேகரன் போன்ற இயக்குநர்களிடம் பல படங்களில் பல மொழிகளில் இணை இயக்குநராகப் பணி புரிந்த ராம்குமார் சுப்பாராமன் இந்தப் படத்தை இயக்குகிறார்.
‘தகராறு’, ‘அண்ணாத்துரை’ ஆகிய படங்களின் ஒளிப்பதிவாளர் k. தில்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். ‘கோலமாவு கோகிலா’ படத்தின் தொகுப்பாளர் R. நிர்மல் படத் தொகுப்பைக் கவனிக்கிறார்.
இத்திரைப்படம் பற்றி இயக்குநர் ராம்குமார் சுப்பாராமன் பேசும்போது, “இத்திரைப்படம் போலீஸ் விசாரணை, காமெடி கலந்த சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படம். இது ஹீரோக்கள் பண்ண வேண்டிய கதை. ஆனால் ஹீரோயின்களால் முடியும் கதை. இப்போது சமூக வலைத்தளங்கள்தான் பரபரப்பா இயங்கிக்கிட்டிருக்கு. ஒரு படத்தின் டைட்டிலை இணையத்தில் தேடும்போதே இது எது சம்பந்தமான கதை என்பதை யூகித்துவிடுவார்கள். ஆனால் என்ன கதை என்பதை மட்டும் யூகிக்கவே முடியாது.
தற்போது தொடர்ந்து பெண்களை இழிவுபடுத்தி வந்து கொண்டிருக்கும் திரைப்படங்களுக்கு மத்தியில் இந்தப் படம் பெண்கள் கொண்டாட வேண்டிய படமாக இருக்கும்.
திரில்லர், சஸ்பென்ஸ் என்பதையும் தாண்டி யூகிக்க முடியாத இன்னொரு விஷயமும் படத்தில் இருக்கிறது. அதுதான் இந்தப் படத்தின் ஹைலைட்டாக இருக்கும்…” என்றார்.











