இயக்குநர் பரத் நீலகண்டனின் இயக்கத்தில் அருள்நிதி, ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்திருக்கும் படத்திற்கு ‘K-13’ என்று வித்தியாசமாக பெயர் வைத்திருக்கிறார்கள்.
இந்த ‘K-13’ படத்தை SP சினிமாஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் S.P.ஷங்கர் மற்றும் சாந்தா பிரியா இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள். இணை தயாரிப்பு – கிஷோர் சம்பத் மற்றும் டி.டெஸாஸ்ரீ. தர்புகா சிவா இசையமைக்க, அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்கிறார். சுதேஷ் வடிவமைத்திருக்கும் அதிரடி சண்டைக் காட்சிகள் இந்த படத்தின் சிறப்பம்சங்களில் ஒன்றாக இருக்கும்.
படத்தின் தலைப்பு மற்றும் அதன் முக்கியத்துவம் பற்றி இயக்குநர் பரத் கூறும்போது, “K-13’ என்பது ஒரு வீட்டின் முகவரி, அது இந்த படத்தின் கதையுடன் மிகவும் நெருங்கிய தொடர்பை உடையது. சில வரம்புகளுக்கு உட்பட்டு, படத்தை பற்றி நாங்கள் இப்போது எதுவும் சொல்ல முடியாது, பார்வையாளர்களே படத்தை பார்த்து அனுபவிக்க வேண்டும் என விரும்புகிறோம்.
இந்த ‘K-13’ ஒரு இருக்கையின் விளிம்பில் உட்கார்ந்து பார்க்கும் வகையிலான ஒரு திரில்லர் படமாக இருக்கும். நாயகன், நாயகி ஆகிய இரண்டு கதாபாத்திரங்களும் மிகவும் தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கும். அவர்களை இதில் நடிக்க தேர்ந்தெடுத்ததற்கான காரணம், அவர்கள் இருவருமே சவாலான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் மிகுந்த ஆர்வம் உடையவர்கள்.
மேலும், தங்கள் படம் எவ்வளவு பெரிய வெற்றியை பெற்றாலும், உடனடியாக அடுத்தடுத்த படங்களில் நடிக்க அவசரம் காட்டாதவர்கள். நல்ல கதைக்காக எவ்வளவு காலமும் காத்திருப்பவர்கள்…” என்றார்.










