பொதுவாக வெளிநாட்டில் தயாரான டிவிடிக்கள்தான் விமானம் மூலமாக தமிழ்நாட்டுக்குள் வந்து அனைத்து ஊர்களிலும் பைரசி டிவிடிக்களாக விற்பனையாகி வருவதாக தமிழ் திரைப்பட துறையைச் சேர்ந்தவர்கள் புகார் கூறி வந்தார்கள்.
ஆனால், சமீபகாலமாக தமிழ்நாட்டில் இருக்கும் சினிமா தியேட்டர்களிலிருந்தே திருட்டு டிவிடி பதிவு செய்யப்பட்டு விற்பனைக்கு வந்திருப்பதை அந்தந்த படங்களின் தயாரிப்பாளர்கள் கண்டறிந்து தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கூறியிருந்தனர்.
இந்த நிலையில் அவ்வாறு திருட்டு டிவிடி தயாரிப்பிற்கு உதவிய தியேட்டர்களுக்கு இனிமேல் புதிய படங்களை திரையிட தர மாட்டோம் என்று தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தடாலடியாக முடிவெடுத்து அறிவித்திருக்கிறது.
இது தொடர்பாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை இது :
“ஒரு திரைப்படத்தினை மிகுந்த பொருட்செலவில், அந்த திரைப்படத்தின் தயாரிப்பார் பல கஷ்டங்களை கடந்து தயரிக்கிறார். அவ்வாறு தயாரித்த அந்த திரைப்படத்தினை கடும் சிரமங்களுக்கிடையே வெளியிடுகிறார்.
ஆனால் அந்த திரைப்படம் வெளியிட்ட அன்றைய தினமே பைரசி மூலம் இணையதளங்களில் வந்து விடுகிறது. இது திரையரங்குகள் மூலம் திருட்டுத்தனமாக படம் பிடிக்கப்பட்டுதான் வெளியாகிறது என்று தற்போது ஆதாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில் தமிழகத்தில் இருக்கும் 10 திரையரங்குகள் மூலம் திருட்டுத்தனமாக படம் பிடித்தது கண்டுபிடிக்கப்பட்டு அந்த திரையரங்குகளின் மீது சட்ட ரீதியாக வழக்கும் தொடரப்பட்டுள்ளது. ஆனால் மேலும், மேலும் தொடர்ந்து இது நடந்து கொண்டுதான் வருகிறது.
இதுவரையிலும் திருட்டுத்தனமாக பைரஸி டிவிடி எடுக்கப்பட்டு ஆதாரத்துடன் உறுதி செய்யபட்ட தியேட்டர்கள் :
- கிருஷ்ணகிரி முருகன் – மனுசனா நீ
- கிருஷ்ணகிரி நயன்தாரா – கோலிசோடா 2
- மயிலாடுதுறை கோமதி – ஒரு குப்பைக் கதை
- கரூர் எல்லோரா – ஒரு குப்பைக் கதை
- ஆரணி சேத்பட் பத்மாவதி – மிஸ்டர் சந்திரமௌலி
- கரூர் கவிதாலயா – தொட்ரா
- கரூர் கவிதாலயா – ராஜா ரங்குஸ்கி
- பெங்களூரு சத்யம் – இமைக்கா நொடிகள்
- விருத்தாசலம் ஜெய் சாய் கிருஷ்ணா தியேட்டர் – சீமராஜா
- மங்களூர் சினிபொலிஸ் – சீமராஜா.
மேற்கண்ட திரையரங்குகளுக்கு இனி எந்தவிதமான ஒத்துழைப்பும் வழங்குவதில்லை என்று தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவெடுத்து அதனை qube நிறுவனத்திற்கும் தெரிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி வருகிற அக்டோபர்- 17, 18-ம் தேதிகளில் வெளியாகும் புதிய திரைப்படங்களின் தயாரிப்பாளர்களும் qube நிறுவனத்திற்கு கடிதம் மூலமும், மின்னஞ்சல் மூலமாகவும் தங்களது திரைப்படங்களை மேற்படி திரையரங்குகளில் திரையிட வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்கள்.
எனவே நமது சங்க உறுப்பினர்கள் அனைவரும் மேற்கண்ட முடிவிற்கு ஆதரவு தரும் வகையில் இனி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வெளியாகும் எந்த ஒரு திரைப்படங்களையும் மேற்கண்ட திரையரங்குகளில் திரையிட வேண்டாம் என்று qube நிறுவனத்திற்கு மின்னஞ்சல் அனுப்ப வேண்டுமாய் அன்புடன் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்…”
– இவ்வாறு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தயாரிப்பாளர் சங்கத்தின் இந்த முடிவு நிச்சயமாக தமிழகத்தில் தயாரிக்கப்படும் பைரசி டிவிடிக்களை கட்டுப்படுத்தும்…” என்று உறுதியாக நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் உறுப்பினர்கள்..!









