சண்டக்கோழி படத்தின் அடுத்த பாகம் திரைக்கு வர தயாராகிவிட்டது. இந்தப் படம் வரும் அக்டோபர் 18-ம் தேதி ஆயுத பூஜை பண்டிகை திருநாளன்று வெளியாகவுள்ளது.
படத்தில் விஷால், கீர்த்தி சுரேஷ் நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். ராஜ்கிரண் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் வரலட்சுமி சரத்குமாரும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடைய கேரக்டர் என்னவென்பது சஸ்பென்ஸ் என்று இயக்குநர் லிங்குசாமியும், ஹீரோ விஷாலும் சொல்லியிருப்பதால் வரலட்சுமி மீதான எதிர்பார்ப்பு மிகவும் கூடியுள்ளது.
இந்தப் படத்தில் நடித்தது பற்றி நடிகை வரலட்சுமி சரத்குமார் பேசும்போது, “இந்த ‘சண்டக்கோழி-2’ திரைப்படத்தில் வேலை பார்க்கும்போது நிறைய சந்தோஷமான தருணங்கள் இருந்தது. லிங்குசாமி சார் மிகவும் கூலான மனிதர். ‘சண்டக்கோழி-2’-வில் நான் கம்போர்ட் சோணிலிருந்து வெளியே வந்து நடித்துள்ளேன்.
நாங்கள் திண்டுக்கல், காரைக்குடி போன்ற பகுதிகளில் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தி வந்தோம். அங்கே நிறைய தொடர்ச்சியாக நிறைய அழகான வீடுகள் இருக்கும். படத்தின் பல முக்கியமான காட்சிகளை அங்கே தான் எடுத்தோம். கிளைமாக்ஸ் காட்சி சிறப்பாக வந்துள்ளது. கண்டிப்பாக ரசிகர்களுக்கு அது விருந்தாக இருக்கும்.
படத்தில் நான் நிறைய சவாலான காட்சிகளில் நடித்துள்ளேன். வெயிலில் தொடர்ந்து படப்பிடிப்பு நடந்ததால் எனக்கு முகம் மற்றும் உடலில் கலர் மாற்றம் ஏற்பட்டது. இப்படத்தில் ரசிகர்கள் விரும்பும் அனைத்தும் உள்ளது…” என்றார் வரலட்சுமி.












