வித்தியாசமான கதைக் களத்தில் உருவாகியிருக்கிறது ‘இதுக்குத்தான் நான் அப்பவே சொன்னேன்’ திரைப்படம்.
இந்தப் படத்தை சிவாஸ் குளோபல் பிலிம்ஸ் சார்பில் டெல்லி ஆர்.சிவா தயாரிக்கிறார்.
இந்தப் படத்தில் இளம் நாயகன் மகேந்திரன் ஹீரோவாக நடிக்கிறார். திவ்யா நாயகியாக நடிக்கிறார். மேலும் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி, ‘கிரேன்’ மனோகர், ‘லொள்ளு சபா’ மனோகர், மூர்த்தி, ஈ.ராமதாஸ், ‘நெல்லை’ சிவா, டெல்லி ஆர்.சிவா, முத்துக்காளை, சுப்புராஜ், ‘டவுட்’ செந்தில், ‘மிப்பு கலக்கல்’ சத்யா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இசை – காந்த் தேவா, ஒளிப்பதிவு – விஜய் எஸ்.குமரன், நடன இயக்கம் – ராதிகா, எஸ்ரா எடிசன், சிவராக், கார்த்தி, தயாரிப்பு நிர்வாகம் – எஸ்.ஆர்.பிரபா, எழுத்து, இயக்கம் – ஏ.ஆர்.சிவா.
படம் பற்றி இயக்குநர் ஏ.ஆர்.சிவா பேசும்போது, “வேலைக்குச் செல்லாமல் வெட்டியாக தனது நண்பர்கள் மூவருடன் ஊருக்குள் சுற்றிக் கொண்டிருக்கிறார் ஹீரோ மகேந்திரன். இவர் நண்பர்களுடன் சேர்ந்து செய்யும் செயல்களெல்லாம் கடைசியில் காமெடியாக முடிகின்றன. இதனால் இவர்களின் அட்டூழியங்களைத் தாங்க முடியாமல் ஊர் மக்களும் தவியாய் தவிக்கின்றனர்.
ஊர்க்காரர்களின் பேச்சையும், ஏச்சையும் கேட்டு வருத்தப்படும் மகேந்திரனின் தாய் மாமா, தனது மகளை மகேந்திரனுக்கு திருமணம் செய்வித்து அவரை நல்ல வழிக்குக் கொண்டு வர எண்ணி மகேந்திரனிடமே இது பற்றிப் பேசுகிறார்.
மகேந்திரனோ இந்த வயதில் திருமணம் செய்தால் தனது சுதந்திரம் பறி போய்விடுமோ என்றெண்ணுகிறார். இதனால் தனக்குத் திருமணம் இப்போது வேண்டாம் என்று மறுக்கிறார்.
ஆனால் அவரது தாய் மாமாவோ விடாமல் வற்புறுத்தி, ‘நான் சொல்லும் ஒரு வேலையை நடக்காமல் பார்த்துக் கொண்டால் உன் கல்யாணத்தை நிறுத்திவிடுகிறேன். இல்லையெனில் உனக்கும், என் மகளுக்கும் கல்யாணம் உறுதி..’ என்கிறார்.
இதனை ஹீரோ மகேந்திரனும் ஏற்றுக் கொள்கிறார். தனது கல்யாணத்தை தடுத்து நிறுத்த தன் தாய் மாமா சொன்ன விஷயம் நடைபெறாமல் தடுக்க பெரும்பாடுகிறார். முடிவு என்ன என்பதுதான் படத்தின் கதை. முழுக்க, முழுக்க நகைச்சுவை கலந்து படத்தை உருவாக்கியிருக்கிறேன்..” என்றார் இயக்குநர் ஏ.ஆர்.சிவா.










