ஜி.ஆர்.மூவி மேக்கர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாராகும் முதல் திரைப்படம் ‘நர்மதா’.
இந்தப் படத்தில் விஜய் வசந்த் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக நந்திதா ஸ்வேதா நடிக்கிறார். மேலும், எம்.எஸ்.பாஸ்கர், சந்தோஷ் பிரதாப், புதுமுகம் அருண் தீபக், மாஸ்டர் ரெனீஷ் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
சதீஸ் பி. சரண் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு, தேசிய விருது பெற்ற எடிட்டர் ராஜா முகமது படத்தை தொகுக்கிறார். கலை இயக்கத்தை ஜெய் காந்த் கவனிக்க, ஓம் பிரகாஷ் சண்டை காட்சிகளை அமைக்கிறார். திரைக்கதை எழுதி தயாரிப்பதுடன் இயக்குநராக அறிமுமாகிறார் கீதா ராஜ்புத்.
தாய் – மகன் பாசத்தைப் பற்றிப் பேசும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று நாகர்கோயிலில் பூஜையுடன் தொடங்கியது.
படம் பற்றி இயக்குநர் கீதா ராஜ்புத் பேசும்போது, “எமோஷனல் பேமிலி எண்டர்டெயின்மெண்ட் டிராமா ஜேனரில் உருவாகும் திரைப்படம் இது.
ஒரு தாய்க்கும் மகனுக்கும் உள்ள பாசப் பிணைப்பை நெகிழ்ச்சியான பயணத்தின் பின்னணியில் உணர்வுபூர்வமாகச் சொல்கிறேன்.
கதையின் நாயகியாக நடித்திருக்கும் நந்திதா ஸ்வேதா, ஏழு வயது ஆண் குழந்தைக்கு தாயாக நடிக்கிறார். கதையின் நாயகனாக நடிக்கும் விஜய் வசந்த் இதுவரை திரையில் பார்த்திராத புதிய கேரக்டரில் நடிக்கிறார். இந்த படத்தில் கௌரவ வேடத்தில் நடிக்க முன்னணி நடிகர் ஒருவருடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
நாகர்கோயிலில் இப்படத்திற்காக பிரம்மாண்டமான முறையில் இயற்கை வளத்துடன் கூடிய திறந்த வெளி அரங்கம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. படத்தின் படபிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது…” என்றார்.
இயக்குநர் கீதா ராஜ்புத், திருநங்கைகளைப் பற்றி ‘என்னைத் தேடிய நான்’, காதல் பற்றிப் பேசும் ‘மயக்கம்’, காது கேளாத மற்றும் வாய் பேசாத ஒரு பையனை மையப்படுத்திய ‘கபாலி’ என மூன்று குறும் படங்களை தயாரித்து இயக்கியிருக்கிறார்.
இதற்காக சிறந்த இயக்குநர் என்ற விருதையும் வென்றிருக்கிறார் என்பதும், பாலாவின் இயக்கத்தில் உருவான ‘தாரை தப்பட்டை’ படத்தில் உதவியாளராக பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.









