RFI நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் வி.பி.ஆர். தயாரித்துள்ள புதிய திரைப்படம் ‘ஆறிலிருந்து ஆறுவரை’.
இந்தப் படத்தில் கெளசிக் என்ற புதுமுக இளைஞர் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். இதேபோல் குஷ்பூ சிங் என்னும் புதுமுகம் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார்.
மேலும் ஜெயப்பிரகாஷ், ஜார்ஜ், மிப்புசாமி, ‘லொல்லு சபா’ மனோகர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஒப்பனை – வினோத், உடைகள் – சிவாஜி, தயாரிப்பு நிர்வாகம் – சாய் சரவணா, மக்கள் தொடர்பு – நெல்லை சுந்தர்ராஜன், நடனம் – சுரேஷ், ஒளிப்பதிவு – வி.தேவ், இசை – ஜீவா வர்ஷினி, படத் தொகுப்பு – சி.எஸ்.பிரேம், தயாரிப்பு – வி.பி.ஆர்., எழுத்து, இயக்கம் – ஸ்ரீஹரி.
இந்தப் படத்திற்கு ஜீவா வர்ஷினி என்னும் ஒரு பெண் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்த் திரையுலகில் பெண் இசையமைப்பாளர்களே இ்லலாத சூழலில் ஒரு பெண் இசையமைக்க வந்திருப்பது பாராட்டுக்குரிய விஷயம்.
காலை 6 மணியில் இருந்து மாலை 6 மணிவரையிலும் நடக்கும் கதைதான் இந்தப் படம்.
கதையின் நாயகியான ஏஞ்சல் மூன்று பேரை கொலை செய்து தன் வீட்டில் மறைத்து வைக்கிறாள். இந்த நிலையில் ஹீரோ ராஜா, ஏஞ்சலை சந்திக்கிறான். அவள் அழகில் மயங்கி அவளுடன் அவளுடைய வீட்டிற்கு வருகிறான். அவளை காதலிக்கத் துவங்குகிறான்.
இந்த சூழலில் அந்த வீட்டில் இருக்கும் மூன்று பிணங்களையும் ராஜா பார்த்துவிடுகிறான். பிறகு ராஜா என்ன செய்தான் என்பதுதான் இந்தப் படம்.
சஸ்பென்ஸ், திகில், மர்மம் கலந்து ஒரு பேய்ப் படமாகவும், அதே சமயம் ஜனரஞ்சமாகவும் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு பெங்களூர், கொடைக்கானல், தாண்டிக்குடி, சிம்லா, சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்று முடிவடைந்துள்ளது.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் முன்னாள் தலைவரான தாணு இசையை வெளியிட தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தற்போதைய தலைவரான நடிகர் விஷால் இசையை பெற்றுக் கொண்டார்.










