இந்தியாவின் ஹாட்டஸ்ட் இயக்குநரான மணிரத்னத்தின் அடுத்த திரைப்படம் திரைக்கு வர தயார் நிலையில் உள்ளது.
‘காற்று வெளியிடை’ என்கிற பெயரில் அவர் உருவாக்கியிருக்கும் இத்திரைப்படம் இப்போதே இந்தியா முழுவதிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தப் படத்தின் இசை வெளியீடு மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று காலை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.
இந்த விழாவில் இயக்குநர் மணிரத்னம், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், கார்த்தி, அதிதிராவ் ஹைதாரி, ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் , பாடலாசிரியர் மதன் கார்க்கி, ஆர்.ஜே. பாலாஜி மற்றும் சிறப்பு விருந்தினராக நடிகர் சூர்யாவும் கலந்து கொண்டார்.
விழாவில் இயக்குநர் மணிரத்னம் பேசும்போது, “இந்த ‘காற்று வெளியிடை’ திரைப்படம் இந்திய விமான படை வீரர்களின் பின்னணியில் உருவாகியுள்ள ஒரு அழகான காதல் கதை.
நான் ஒவ்வொரு முறையும் வட இந்தியாவில் படப்பிடிப்புக்கு செல்லும்போது விமானப் படை வீரர்களை பார்ப்பேன். அவர்களை பார்க்கும்போதெல்லாம் எனக்கு பிரமிப்பாக இருக்கும்.
இப்போது மூன்று நாட்களுக்கு முன்னால் நான் கார்த்தியை சந்தித்தபோது, “நான் யாராவது ஒரு விமான படை அதிகாரியை எங்காவது கண்டால் உடனே எழுந்து மரியாதை செலுத்துகிறேன்..’ என்றார். அதுதான் அவர்கள். அவர்களுக்கு மரியாதை செலுத்தும்விதமாகத்தான் இந்த படம் இருக்கும்.
25 வருடங்கள் நானும் ரஹ்மானும் ஒன்றாக பயணித்துள்ளோம். அவரை நான் சந்தித்தது நேற்று போல் உள்ளது. அப்போது அவரை பார்த்தது போல்தான் இப்போவும் அவர் உள்ளார். ஒவ்வொரு முறையும் ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து வேலை செய்வது எனக்கு புதிய அனுபவமாகும்.
நான் அவரிடம் நாளை படப்பிடிப்பு. உடனேயே பாடல் வேண்டும் என்று கேட்டுவிட்டு அடுத்த நாள் அவரை பாடலுக்காக சந்திக்க சென்றால், தீம் மியூசிக்கை பக்கவாக ரெடி செய்து வைத்திருப்பார். ஆனால் அந்த தீம் மியூசிக்கை கேட்டதும் சந்தோஷத்தில் நம் மனம் மாறி தீம் மியூசிக்கை ரசிக்க ஆரம்பித்துவிடும். என் ஒவ்வொரு படத்துக்கும் தேவையான இசையை தேடி பிடித்து கொடுப்பவர் அவர்.
நான் இந்த நேரத்தில் கவிஞர் வைரமுத்து அவர்களுக்கும், ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் நன்றி கூறிக் கொள்கிறேன் . அடுத்த படத்தை ஏ.ஆர்.ரஹ்மான் உடன் இணைந்து பணியாற்ற இப்போதே உங்கள் முன்னால் கேட்டு கொள்கிறேன்…” என்றார் இயக்குநர் மணிரத்னம்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பேசும்போது, “இயக்குநர் மணிரத்னம் சார் எனக்கு கிடைத்தது ஒரு வரப்பிரசாதம் எனலாம். நான் மணிரத்னம் சார் அவர்களை பார்க்கவில்லை என்றால் வைரமுத்து சார் மற்றும் இன்று நான் இருக்கும் இடம் இதெல்லாம் எங்களுக்குக் கிடைத்திருக்காது. அவருடன் வேலை பார்ப்பது ஒரு டிவைனான அனுபவம்…” என்றார்.
நடிகர் சூர்யா பேசும்போது, “மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தில் இருந்து வந்த சின்ன தயாரிப்பு நான். நான் ‘ஆயுத எழுத்து’ திரைப்படத்தில் நடிக்கும்போது படப்பிடிப்பு தளத்தில் கூட்டத்தை விலக்கிக் கொண்டிருந்த தம்பி கார்த்தி, இப்போது அதே மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் தயாரிப்பில். இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து விட்டான் என்பது மகிழ்ச்சியான ஒரு விஷயமாகும்.
இப்போது கார்த்தியின் மனம் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் என்பது எனக்கு நன்றாக தெரிகிறது. கார்த்தியை இதை போல் நான் பார்த்ததே இல்லை. வீட்டில் அனைவருக்கும் கார்த்தியை இந்த இடத்தில் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது. மணி சார் இந்த படத்தில் வேறு ஒரு கார்த்தியை நமக்கு காட்டியுள்ளார். கார்த்தி இந்த படத்தில் நடித்துள்ளது புதியதொரு கதாபாத்திரம்.
நான் மணி சாரிடம் ஒன்று கேட்டு கொள்ள விரும்புகிறேன்.. எப்படி சார் இன்னும் அழகு, அழகான காதல் கதைகளை உருவாக்கி கொண்டு வருகிறீர்கள்? நான் வீட்டில் இன்னும் ‘பொண்டாட்டி’ என்ற வார்த்தையை பயன்படுத்தி கொண்டுதான் இருக்கிறேன்…” என்றார்.
நடிகை அதிதிராவ் ஹைதாரி பேசும்போது, “நான் சோசியல் மீடியாவில் தமிழ் மக்கள் அனுப்பும் மெசெஜ்கள் அனைத்தையும் படித்து வருகிறேன். சின்ன வயதில் எனக்கு ஒரு கனவு. மணி சார் படத்தில் நடிக்க வேண்டும் என்பதுதான் அந்த கனவு. அந்த கனவு இப்போது நிஜமாகி உள்ளது. நான் இன்னும் நிறைய கனவு காண்பேன். மணி சாரோடு இணைந்து பணியாற்றியது எனக்கு மிகப் பெரிய பலம். கார்த்தி ஒரு ஜென்டில்மேன்…” என்றார்.
நாயகன் கார்த்தி பேசும்போது, “நான் மணி சாரிடம் ஜூனியர் மோஸ்ட் உதவி இயக்குநராக இருந்து ஹீரோவாகிவிட்டேன். எனக்கு இது ஒரு கனவு படம் என்றால் அது பொய்யாக இருக்கும். ஏனென்றால் எனக்கு இப்படி ஒரு நல்ல கனவு வந்ததே இல்லை. நான் அமெரிக்காவில் படிக்கும்போதே ‘படிப்பு முடிந்தவுடன் சினிமாவுக்கு செல்லப் போகிறேன்’ என்றதும் எல்லோரும் சொன்னது ‘உனக்கு ஏன் இந்த வேலை?’ என்றுதான். பொறியியல் படித்துவிட்டு ஏன் சினிமாவுக்கு செல்ல வேண்டும் என்று என்னுடைய வெள்ளைக்கார நண்பர்கள்கூட கேட்டார்கள்.
நான் மணி சாரிடம் சினிமாவை கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். அங்கே நிறைய கற்றுக் கொண்டேன். நான் வேலையில் சின்சியாராக உள்ளதற்கு காரணம் மணி சாரிடம் வேலை செய்ததுதான் காரணம். மணி சார், என்னிடம் ‘நடிக்க சான்ஸ் வந்தால் கண்டிப்பாக நடி’ என்றார்.
இது ஒரு ஆழமான எமோஷனலான காதல் கதை. மணி சார் இந்த படத்தில் நடிக்க சொல்லி என்னிடம் ஸ்கிரிப்ட்டை கொடுத்தது எல்லாம் கனவு போல் இருந்தது. இந்த படத்தில் நடிப்பதற்காக நான் மீசையை எடுத்த கதையை சொன்னால் ஒரு புத்தகமே போடலாம்.
இந்த படத்தில் நான் பைட்டர் பிளைட் பைலட்டாக வருகிறேன். நான் பைட்டர் பிளைட் பைலட்ஸ் உடன் ஒரு நாள் முழுவதும் இருந்தேன். இதெல்லாம் இந்த படத்தில் நடிக்க எனக்கு நல்ல அனுபவமாக இருந்தது.
இப்போதும் விமானப் படை ஆபிசர்களை நான் பார்க்கும்போது என்னையறியாமல் சட்டென்று எழுந்து நின்றுவிடுவேன். அந்த அளவுக்கு படத்தில் நான் ஏற்றிருக்கும் எனது கேரக்டர் என்னை ஆழமாகப் பாதித்துள்ளது..” என்றார்.















