full screen background image

“ஜனாதிபதி 1 மணி நேரம்தான் இருப்பாராம்…” – திரைப்பட கலைஞர்களுக்கு நேர்ந்த அவமானம்..!

“ஜனாதிபதி 1 மணி நேரம்தான் இருப்பாராம்…” – திரைப்பட கலைஞர்களுக்கு நேர்ந்த அவமானம்..!

டெல்லியில் நேற்று நடைபெற்ற தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவை 68 திரைப்பட கலைஞர்கள் புறக்கணித்தனர்.

வருடாவருடம் இந்தியாவின் பல்வேறு மொழிகளில் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் அதில் நடித்த நடிகர், நடிகையர், தொழில் நுட்பக் கலைஞர்களுக்கு சிறந்த கலைஞர்களுக்கான விருது கொடுத்து வருகிறது மத்திய அரசு.

இதன்படி 2017-ம் ஆண்டின் சிறந்த திரைப்பட கலைஞர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு விருது வழங்கும் விழா நேற்று டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்றது.

பொதுவாக இந்த விருதுகளை ஜனாதிபதிதான் வழங்குவார். ஆனால் இந்தாண்டு வெறும் 11 பேருக்கு மட்டுமே ஜனாதிபதி வழங்குவார் என்றும், மீதிப் பேருக்கு செய்தி ஒளிபரபப்புத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி வழங்குவார் என்றும் திடீரென்று அறிவிக்கப்பட்டது.

மத்திய அரசின் இந்தத் திடீர் முடிவை எதிர்பார்க்காத திரைப்பட கலைஞர்கள் பலரும் அதிர்ச்சியடைந்தனர். உடனேயே இது குறித்து அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கும், ஜனாதிபதி மாளிகைக்கும் கடிதம் எழுதி தங்களுடைய கண்டனங்களைத் தெரிவித்தனர்.

அதில், “தேசியத் திரைப்பட விருதுகளை குடியரசுத் தலைவர் கையால் பெறுவது என்பது ஒரு கலைஞன் வாழ்நாள் முழுவதும் நினைத்து பெருமைப்படக் கூடிய விஷயம். ஆனால் இம்முறை 11 பேருக்கு மட்டுமே குடியரசுத் தலைவர் விருது தருவார் என்றும், மற்ற 120 பேருக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி விருதைத் தருவார் என அறிவித்திருப்பதும் எங்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தருகிறது.

குடியரசுத் தலைவர் தனது கையால் விருதுகளை வழங்குவது 65 ஆண்டு கால மரபு. தற்போது அது மீறப்படுவதாக எங்களுக்கு தோன்றுகிறது. எனவே இவ்விழாவை புறக்கணிக்கும் முடிவுக்கு தாங்கள் வராவிட்டாலும், பங்கேற்காமல் இருந்து வேதனையை வெளிப்படுத்த போகிறோம்…” என்று அந்தக் கடிதத்தில் தெரிவித்தனர்.

கூடவே  “குடியரசுத் தலைவரே தங்கள் அனைவருக்கும் விருது வழங்க வேண்டும்” என கோரி விருதாளர்கள் 68 பேரும் தாங்கள் தங்கியிருந்த அசோகா விடுதி முன்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

ஆனால் இதையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல் விருது வழங்கும் விழா உரிய நேரத்தில் தொடங்கும் என தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சகம் தெரிவித்தது. அதன்படி நேற்று மதியம் முதல் அமர்வு விழாவும் தொடங்கியது. 

இந்த நிகழ்வில் குடியரசு தலைவர் பங்கேற்கவில்லை.  மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இரானி மற்றும் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் ஆகியோர் திரைப்பட விருதுகளை வழங்கினர். 

national-film-awards-vigyan-bhawan-3

இதனால் அதிருப்தியடைந்த விருது பெற வந்த கலைஞர்களில் 68 பேர் ஒட்டு மொத்தமாய் விழாவைப் புறக்கணித்துவிட்டு வெளிநடப்பு செய்தனர். நடிகர் பகத் பாசில், நடிகை பார்வதி மேனன், பாகுபலி படத்தின் தயாரிப்பாளர் உள்ளிட்ட முக்கியமானோர் வெளியேறியதைத் தொடர்ந்து அவசரம், அவசரமாக அவர்களுடைய பெயர்கள் தாங்கிய பெயர்ப் பலகைகள் அரங்கத்தில் இருந்து நீக்கப்பட்டன.

விருது பெற விருப்பத்துடன் காத்திருந்தவர்களுக்கு மட்டும் அமைச்சர் ஸ்மிருதி இராணி விருதுகளை வழங்கினார்.

அதோடு நேற்று மாலை 6 மணிக்கு அதே இடத்தில் மிக முக்கிய பிரபலங்களுக்கு மட்டும் ஜனாதிபதி ராம்கோவிந்த் விருதுகளை வழங்கினார்.

சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை ஏ.ஆர்.ரகுமானுக்கு ஜனாதிபதியிடமிருந்து பெற்றுக் கொண்டார். ‘மாம்’ திரைப்படத்திற்காக, நடிகை ஸ்ரீதேவிக்கான தேசிய விருதை, அவரது குடும்பத்தினர் பெற்றுக் கொண்டனர். மறைந்த பாலிவுட் நடிகர் வினோத் கண்ணாவுக்கான தாதாசாகிப் பால்கே விருதினை, அவரின் மனைவி கவிதாவும், மகன் அக்சய் கன்னாவும் பெற்றுக் கொண்டார். சிறந்த பாடகருக்கான தேசிய விருதினை ஜேசுதாஸ் பெற்றுக் கொண்டார்.

இதற்கான விளக்கமாக “ஜனாதிபதி எந்தவொரு நிகழ்ச்சியிலும் 1 மணி நேரத்திற்கும் மேலாக அமர மாட்டார்…” என்பதை செய்தி, ஒளிபரப்புத் துறைக்கு முன்கூட்டியே தெரிவித்துவிட்டோம் என்று ஜனாதிபதி மாளிகையிலிருந்து வெளியான பத்திரிகை செய்திக் குறிப்பொன்று தெரிவித்தது.

இதைக் கேட்டு திரைப்பட கலைஞர்கள் பலரும் மனம் வருந்தினார்கள். திரைப்படத் துறையில் மிக உயரிய விருதான தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில்கூட ஜனாதிபதி ஒரு மணி நேரம்தான் இருப்பாரென்றால் திரைப்படத் துறையை பற்றி அவருடைய எண்ணம்தான் என்ன..? கலைஞர்கள் பற்றிய மத்திய அரசின் மதிப்பீடுதான் என்ன என்று கொதித்துப் போயுள்ளனர்.  

Our Score