full screen background image

17 சர்வதேசத் திரைப்பட விருதுகளை வென்ற ’21 கிராம்ஸ்’ பைலட் திரைப்படம்

17 சர்வதேசத் திரைப்பட விருதுகளை வென்ற ’21 கிராம்ஸ்’ பைலட் திரைப்படம்

இப்போது வருகிற எந்தப் படத்தைப் பார்த்தாலும் வெட்டு, குத்து, ரத்தம் என்று மனித உயிரை மலிவாகக் காட்டும் வகையில் காட்சிகள் வருவது சகஜமாகி வருகிறது.

இந்த நிலையில் உயிரின் விலை மதிப்பற்றது. மனிதன் ஒருவனின் உயிரை எடுக்க யாருக்கும் உரிமையோ அதிகாரமோ கிடையாது என்கிற கருத்தை வலியுறுத்தும் வகையில் வித்தியாசமான யாரும் சொல்லாத கோணத்தில் உருவாகியுள்ள படம்தான் ’21 கிராம்ஸ்’.

இந்தப் படத்தில் கதாநாயகனாக மோகணேஷ் என்கிற அறிமுக நடிகர் நடித்துள்ளார். அண்மையில் காலமான குணச்சித்திர நடிகர் பூ ராமு ஓர் அழுத்தமான கதாபாத்திரத்தின் மூலம் இந்த படத்தில் நடித்து, படம் பார்ப்பவர்கள் மனதில் நிறைகிறார்.

இப்படத்திற்கு  சௌந்தர்ராஜன், அன்பு டென்னிஸ் என்கிற இருவர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். இந்த இருவருக்கும் சில படங்களிலும் இணைய தொடர்களிலும் விளம்பரப் படங்களிலும் பணியாற்றிய அனுபவம் உண்டு.

இப்படத்திற்கு இசையமைத்துள்ள விஜய் சித்தார்த், ராக்கி புகழ்  நடிகர் வசந்த் ரவி நடித்துள்ள புதிய படத்திற்கு இசையமைத்து வருகிறார். அந்தப் படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

இந்தப் படத்தை யான் சசி இயக்கி உள்ளார். அவர் ஏற்கெனவே சில படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.

இந்தப் படம் பற்றி இயக்குநர் யான் சசி கூறும்போது, “முழு நீளத் திரைப்படம் இயக்குவதுதான் எனது கனவு . அப்படி நான் ஒரு படத்திற்காகப் பேசி ஒரு பெரிய  நிறுவனத்தால் எனக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. படம் துவங்க வேண்டிய நேரத்தில் கொரோனா காலம் வந்து விட்டது. தாமதமாகிக் கொண்டே வந்தது.

இடையில் ஏதாவது செய்யலாம் என்று ஒரு சிறு முயற்சியாக 15 நிமிடத்தில் ஓடக் கூடிய ஒரு பைலட் பிலிம் போல் இதை உருவாக்குவது எனத் திட்டமிட்டேன். ஆனால் அதன் கதை வளர்ந்து விரிவாகி, அந்தக் கதை தானே பெருக்கிக் கொண்டு ஒரு முழு நீளப் படமாக  52 நிமிடங்களில் ஓடக் கூடிய படமாக உருமாறி உருவாகியுள்ளது.

நான் எடுத்துக்கொண்ட கதை அதன் வீரியத்தால் பல பிரச்சினைகளைத் தாண்டி முழுப் படமாக வடிவம் பெற்று இன்று பார்த்தவர்கள் எல்லாம் பாராட்டுகிறார்கள். அதைப் திரையிட்டுக் காட்டியபோது அனைவரும் இப்படிக்கூட இதைச் சொல்ல முடியுமா என்று வியந்து பாராட்டினார்கள். திரைப்பட விழாக்களுக்கு அனுப்பிய போது பல இடங்களில்  விருதுகளைப் பெற்றுள்ளது.

கொல்கத்தா சர்வதேச கல்ட்டு திரைப்பட விழாவில் இப்படத்திற்கு சிறந்த படம், சிறந்த  நடிகர், சிறந்த இயக்குர், சிறந்த ஒளிப்பதிவு என மொத்தம் நான்கு விருதுகளைப் பெற்றது. அந்தத் திரைப்பட விழாவில்தான் விஜய் சேதுபதியின் மாமனிதன்’ படத்திற்கும் விருதுகள் கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது .

அதேபோல தாகூர் சர்வதேச திரைப்பட விழா, சிங்கப்பூர் திரைப்பட விழா, டோக்கியோ, இத்தாலி ரோம், அமெரிக்கன் கோல்டன் பிக்சர்ஸ் திரைப்பட விழாக்கள் என்று சர்வதேச திரைப்பட விழாக்களில்  இதுவரை 17 விருதுகள் இந்த படத்திற்கு கிடைத்திருக்கின்றன.

படத்தை முடித்து திரையிட்டுக் காட்டியபோது, பலரும் கொடுத்த பாராட்டுகளும் வாழ்த்துகளும் எங்களுக்குப் பெரிய உற்சாகத்தைக் கொடுத்தன. திரைப்பட விழாக்களில் கிடைத்து வரும் விருதுகளும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்கிற நம்பிக்கையை எனக்கு அளித்து வருகிறது…” என்றார் இயக்குநர் யான் சசி.

Our Score