City light pictures தயாரிப்பில் தமிழ் திரையுலகின் பெருமைமிகு படைப்பாளியான இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தின் இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வை சொல்லும் படைப்பாக, ரொமான்ஸ் ஜானரில் இந்த ‘2K லவ் ஸ்டோரி’ திரைப்படம் உருவாகியுள்ளது.
City light pictures சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் இப்படத்தை தயாரிக்கிறார்.
புதுமுக நாயகன் ஜெகவீர் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் மீனாட்சி கோவிந்தராஜன் நாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் பால சரவணன், ஆண்டனி பாக்யராஜ், ஜெயப்பிரகாஷ், வினோதினி மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
இயக்கம் – சுசீந்திரன், ஒளிப்பதிவு – V.S.ஆனந்த கிருஷ்ணன், இசை – டி.இமான், பாடல்கள் – கார்த்திக் நேத்தா, படத் தொகுப்பு – தியாகு, கலை இயக்கம் – சுரேஷ் பழனிவேலு, நடன இயக்கம் – ஷோபி, பால்ராஜ், பத்திரிக்கை தொடர்பு – சதீஷ்(AIM), ஆடை வடிவமைப்பாளர் – மீரா, போஸ்டர் வடிவமைப்பாளர் – கார்த்திக், தயாரிப்பு நிர்வாகி -T.முருகேசன், தயாரிப்பாளர் – விக்னேஷ் சுப்ரமணியன்.
இன்றைய 2 கே கிட்ஸ்களின் உலகத்தில் ‘ஃபிரண்ட்ஸ்’, ‘காதல்’, ‘பெஸ்டி’ என்கின்ற மூன்று வார்த்தைகள் மிக, மிக அதிகமாக பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
“இவள் எனக்கு பெஸ்டி. அவன் எனக்கு பெஸ்டி, இவன் எனக்கு பிரெண்ட். அவன் எனக்கு கிளோஸ் பிரண்டு. ஆனால், அவன் என்னுடைய லவ்வர் அல்ல; என் லவ்வர் வேறு..” என்றெல்லாம் இன்றைய இளசுகள் மாறி, மாறி பேசுவதால் வீட்டில் இருக்கும் பெற்றோர்கள் மிகவும் குழம்பிப் போயிருக்கிறார்கள்.
70-கள், 90-களில் பிறந்து வளர்ந்த இன்றைய பெற்றோர்களுக்கு இது சட்டென்று புரியவில்லை. ஏற்கும் மனநிலையும் அவர்களுக்கு இல்லை. இது என்ன வகையான சமூக வளர்ச்சி என்பதும் அவர்களுக்கு தெரியவில்லை.
‘பெஸ்டி’ என்பதற்கு என்ன அர்த்தம் என்று பெற்றோர்கள் கேள்வி கேட்கிறார்கள். “ஒரு ஆணும், பெண்ணும் கடைசிவரையில் பிரண்டாகவே இருந்துவிட முடியுமா?..” என்று சந்தேகம் கேட்கிறார்கள். “பெஸ்டி’யும் இல்லாமல் ‘பிரண்டு’ம் இல்லாமல் ‘லவ்வர்’ மட்டும் தனியாக எப்படி எங்கே இருந்து வருவான்..? எங்கே இருந்து வந்து குதிப்பான்?..” என்றும் பெற்றோர்களுக்கு ஒரே கவலை.
அந்தக் கவலைகளுக்கெல்லாம் பதில் சொல்லும்விதமாக இந்தப் படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன்.
கார்த்திக் என்ற ஜெகவீரும், மோனி என்ற மீனாட்சியும் சிறு வயதிலிருந்தே நண்பர்களாகவே வளர்ந்திருக்கிறார்கள். இப்போது கல்லூரி வரையிலும் ஒன்றாகவே படித்து வளர்ந்திருக்கிறார்கள். ஒருவர் வீட்டில் ஒருவர் சாப்பிட்டு வளர்ந்திருக்கிறார்கள். ஒருவரை பற்றிய ஒருவர் தெளிவாக அனைத்து விஷயங்களையும் அறிந்து வைத்திருக்கிறார்கள். மோனியின் மென்ஸஸ் தேதிகள்கூட கார்த்திக்குத் தெரியும். கார்த்திக்கு சாப்பிட எது பிடிக்கும்… எது பிடிக்காது.. என்பது மோனிக்கும் தெரியும். இந்த அளவுக்கு இவர்கள் இருவரும் திக்கஸ்ட் பிரெண்ட்டாக இருக்கிறார்கள்.
இப்பொழுது திருமணங்களுக்கு வீடியோ எடுப்பது, குறும் படங்களை எடுப்பது என்று இருவரும் இணைந்து பிஸினஸும் செய்து வருகிறார்கள். இவர்கள் இருவருமே இப்போதுவரையிலும் தாங்கள் இருவரும் ‘பெஸ்ட் பிரண்டு’ என்று தங்களை சொல்லிக் கொள்கிறார்கள். ‘காதலிக்க வேண்டும்’, ‘திருமணம் செய்ய வேண்டும்’ என்ற எண்ணமே எங்களுக்கு இடையில் இல்லை” என்பதை இருவருமே தெளிவுபடுத்திவிட்டார்கள்.
இந்த நேரத்தில் கார்த்தி, மோனியுடன் கல்லூரியில் ஒன்றாகப் படித்த பவித்ரா, கார்த்தியிடம் வந்து “நாம் காதலிக்கலாமா?..” என்று சொல்லித் தன் காதலை ஆரம்பிக்கிறார். கார்த்தியும் இதற்கு “ஓகே” சொல்லிவிட இவர்களது காதலும் ஆரம்பமாகிறது. ஆனால் இதுவும் நிலைக்கவில்லை. திடீரென்று ஒரு விபத்தில் பவித்ரா இறந்துவிட கார்த்திக், மோனி இருவரும் மிகவும் அப்செட் ஆகிறார்கள்.
இதற்கடுத்து கார்த்திக், மோனி இருவருக்குமே திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என்று இருவரின் பெற்றோர்களும் சொல்ல.. இபொழுதும் இவர்கள் அதே கதையைத்தான் சொல்கிறார்கள்.
“எங்கள் இருவருக்கும் இடையில் காதலே கிடையாது. கல்யாணம் எங்களுக்கு செட் ஆகாது” என்கிறார்கள். இதற்கு ஒரு மாற்று வழியை பெற்றவர்களே சொல்கிறார்கள்.
“ஏதாவது ஒரு வீட்டில் மாப்பிள்ளைக்கு தங்கச்சியோ, அக்காவோ இருக்குற மாதிரி பாருங்க. கார்த்திக் மோனியின் மாப்பிள்ளையின் அக்காவையோ தங்கச்சியையோ கல்யாணம் பண்ணிக்கட்டும். இருவரும் ஒரே வீட்டில் சம்பந்தம் வைத்துக் கொண்டால் உங்களுக்கும் பிரச்சனை இல்லாமல் இருக்கும். உங்களுடைய நட்பும், கடைசிவரையிலும் நீடிக்கும்” என்கிறார்கள்.
இதற்கு “ஓகே” சொல்லும் கார்த்திக்கும், மோனியும் தங்களுடைய பள்ளி கல்லூரி கால நண்பனான நிரஞ்சனை சந்திக்க வந்த இடத்தில் அவருக்கு ஒரு தஙகை இருப்பதாக உணர்ந்து அந்த வீட்டிலேயே திருமணம் செய்து கொள்ள இருவருமே முனைகிறார்கள்.
ஆனால் இந்தத் திருமணத்தை நடத்தவிட கூடாது என்பதற்காக அந்தப் பெண்ணின் தாய் மாமனும், மற்றவர்கள் சேர்ந்து சதி செய்கிறார்கள். இதற்குப் பிறகு என்ன நடந்தது..? இவர்களின் திருமணம் நடந்ததா..? இல்லையா…? என்பதுதான் இந்தப் படத்தின் சுவையான திரைக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ஜெகவீர் அறிமுக நடிகர் என்றாலும் அது தெரியாத அளவுக்கு தன்னுடைய கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை கொடுத்திருக்கிறார்.
2 கே இளைஞர்களுக்கு உரித்தான கேலி, கிண்டல், எதையும் ஸ்போர்ட்டிவ்வாக எடுத்துக் கொள்ளும்விதம், அவர்களுக்கு இடையில் அவர்கள் பேசிக் கொள்ளும் சகஜமான பேச்சுக்கள்… என்று பல காட்சிகளிலெல்லாம் மிக சிறப்பாக நடித்திருக்கிறார். ஆனால் ஒரு சில எமோஷன்ஸை காட்ட வேண்டிய இடத்தில் மட்டும் இன்னும் கொஞ்சம் நன்றாக நடித்திருக்கலாமே என்று தோன்றுகிறது.
மோனியாக நடித்திருக்கும் மீனாட்சி கோவிந்தராஜன் படத்தின் மிகப் பெரிய தூண் என்று சொல்லலாம் அந்த வயதுக்கேற்ற நடிப்பை காண்பித்திருக்கிறார். படத்தில் முதலில் இருந்து கடைசிவரையிலும் இருதலைக் கொள்ளி எறும்பு போல தவியாய் தவிக்கும்விதமாய் தன் நடிப்பை பிரமாதப்படுத்தியிருக்கிறார்.
அவருக்குள் இருக்கும் பொஸஸ்னிவஸ்ஸை ஒரு சில இடங்களில் வெளிப்படுத்தும்பொழுது சூப்பர் என்றே சொல்லலாம். கிளைமாக்ஸ் காட்சியில் திருமணம் மீது நம்பிக்கையில்லாமல் இருக்கும் குழப்பத்தை அவர் காட்டுகின்ற இடத்தில் யதார்த்தமான நடிப்பை காண்பித்திருக்கிறார்.
ஜெகவீரின் காதலி பவித்ராவாக நடித்திருக்கும் லத்திகா பாலமுருகன் அழகியல்ல. ஆனால் கேமராவுக்கு ஏற்ற முகம். அவருடைய அறிமுக கட்சிகயிலிருந்து கடைசிவரையிலும் அப்பாவியாகவே நடித்திருக்கிறார். அவர் அடிக்கடி மீனாட்சியைப் பற்றி புகாராக இல்லாமல் ஒரு பிரண்டிடம் சொல்வதைப்போல கார்த்திக்கிடம் சொல்லுகின்ற இடம் மிகவும் ரசிக்க வைத்திருக்கிறது.
கிராமத்து வில்லன் கோஷ்டியான சிங்கம் புலியும், பால சரவணனும் சேர்ந்து இடைவேளைக்கு அப்புறம் கொஞ்சம், கொஞ்சம் நம்மை சிரிக்க வைத்திருக்கிறார்கள். மேலும் மாப்பிள்ளையாக நடித்திருக்கும் நிரஞ்சனும், அவரது தங்கையாக நடித்திருக்கும் ஹரிதாவும்கூட சிறந்த நடிப்பை கொடுத்திருக்கிறார்கள். அதிலும் ஹரிதா தன்னை பற்றிய அவதூறை சந்திக்கும்போது நிறுத்தி நிதானமாக அவர் பேசுகின்ற அந்த கோபப் பேச்சு நிச்சயம் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.
மெச்சூர்டான பெற்றோர்கள்.. நம்பிக்கையான நண்பர்கள்.. என்று அனைத்துக் கேரக்டர்களின் ஸ்கெட்ச்சையும் யதார்த்தமாக வடிவமைத்திருக்கிறார் இயக்குநர். ஹீரோயினின் அம்மாவாக நடித்திருக்கும் வினோதினியும், ஹீரோவின் அம்மாவாக நடித்திருப்பவரும் அம்மாக்களின் மனதைப் படம் பிடித்துக் காட்டுவதுபோல நடித்துள்ளனர்.
“என்னைப் பற்றி உனக்கென்னம்மா தெரியும்..?” என்று மகள் கேட்கும்போது பேசாமல் இருக்கும் வினோதினியும், ஹரிதாவின் வீட்டில் நடக்கும் சண்டைக்குப் பிறகு முகம் வாடிப் போகும் ஹீரோவின் அம்மாவும் மெளனத்திலேயே தங்களது சிறப்பான நடிப்பைக் காண்பித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு மிக, மிக தரம். பாடல் காட்சிகளையும், அந்த கிராமத்து அழகையும் காட்டியிருக்கும்விதம் நிச்சயம் சிறப்பானது. கண்ணில் ஒற்றிக்கொள்ளும்படியான ஒளிப்பதிவைக் கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.
இமானின் இசையில் ‘அங்குலி மங்குலி’ என்ற பாடல் பட்டையை கிளப்புகிறது. மீதமிருக்கும் பாடல்களும் கேட்கின்ற ரகம்தான். அதேபோல் பின்னணி இசையையும் கொஞ்சம் அடக்கி வாசித்து நகைச்சுவையை தூண்டிவிடும்படியாக பின்னணி இசையை அமைத்திருக்கிறார் இமான்.
இத்திரைப்படம் இன்றைய 2-கே கிட்ஸ்களின் மனநிலையை தெளிவுபடுத்துவது போல திரைக்கதையை அமைத்து மிக சிறப்பாக இயக்கத்துடன் வந்திருக்கிறது.
இன்றைய இளைஞர்களும், இளைஞிகளும் ஒருவருக்கொருவர் நட்பாக பழகினால், அந்த நட்புதான் நாளடைவில் காதலாக மாறும் என்ற பெற்றோர்களின் பயத்தலுக்கு இந்தப் படம் ஒரு விளக்கம் அளிக்கிறது.
அந்த நட்பு இறுதிவரையிலும் நல்ல நட்பாகவே இருக்கலாம். பார்க்கின்றவர்கள் பார்வையில்தான் அது தப்பாக தெரியும். ஆனால் அவர்களுக்கிடையில் நட்பாகவே இருப்பதற்கு 100% வாய்ப்பு உண்டு என்பதை இந்த படத்தில் சொல்லி இருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன். நட்பாகவே பழகி வருபவர்கள் நிச்சயமாக தம்பதிகளாக மாற முடியாது என்பதை இந்தப் படத்தில் பல வசனங்களை மூலமாக அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார் இயக்குநர்.
காதல், நட்பு, பிரிவு, திருமணம் பற்றிய அவர்களுடைய எண்ணம்… பெற்றோர்களுடன் அவர்கள் பேசுகின்றவிதம் இதையெல்லாம் மிக அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார். அதோடு திரைக்கதைக்கு தேவையில்லாத வேற எந்த விஷயமும் படத்தில் இல்லை. படத்தின் கதை ஒரே நேர்கோட்டில் சென்று இருப்பதால் படம் முழுவதையும் கடைசிவரை நம்மால் வெகுவாக ரசிக்க முடித்து இருக்கிறது.
இந்த 2 கே லவ் ஸ்டோரி, காதலர்களுக்கு மட்டுமேயானதல்ல; நல்ல நண்பர்களுக்கும், நல்ல நட்புகளுக்கும் தேவையான திரைப்படம்!!!
RATING : 3.5 / 5