full screen background image

சட்டென்று மாறுது வானிலை – சினிமா விமர்சனம் 

சட்டென்று மாறுது வானிலை – சினிமா விமர்சனம் 

BV Production நிறுவனத்தின் கீழ், இயக்குநர் பாபு விஜய் தயாரித்து இயக்க, நடிகர் ஜெய் நடிப்பில், இன்றைய சமகால பிரச்சனைகளை அழுத்தமாகப் பேசும் புதுமையான ரொமான்டிக் திரில்லராக உருவாகியுள்ளது இந்த சட்டென்று மாறுது வானிலைதிரைப்படம்.

இப்படத்தில் நாயகியாக மீனாட்சி கோவிந்தராஜன் நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, கருடா ராம், ஸ்ரீமன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

என்னங்கடா படத்தோட தலைப்பு  கவிதை மாதிரி இருக்கே அப்படின்னு நினைச்சு இந்தப் படத்துக்குப் போயிடாதீங்க. படத்தின் தலைப்புக்கும், படத்தின் கதை, திரைக்கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை செய்கிறார் ஜெய். அவருக்கு பெற்றோர்கள் இல்லை. ஒரு அனாதை ஆசிரமத்தில் வளர்ந்தவர் ஜெய். இதுவரைக்கும் யாரையும் காதலிக்கவில்லை. இந்த நேரத்தில் ஹீரோயின் மீனாட்சி பார்த்தவுடன் வழக்கமான ஹீரோக்கள் போலவே ஜெய்க்கும் காதல் வருகிறது.

காதலை ரொம்ப நாள் வளர்க்காமல் அடுத்த நாளே மீனாட்சியிடம் ப்ரபோஸ் செய்து விடுகிறார் ஜெய். அவரும் காதலை ஏற்றுக் கொள்ள.. காதலர்கள் ஒரு டூயட் பாட்டையும் பாடி காதலை வளர்க்கிறார்கள். மீனாட்சியின் அப்பா மாநில அமைச்சர். தமிழ்நாட்டின் முதலமைச்சரின் கண்ணில் மீனாட்சி பட்டுவிட அவரை இரண்டாவது மனைவியாக்கிக் கொள்ள துடிக்கிறார் முதலமைச்சர். இதற்காக அமைச்சரின் வீட்டுக்கே வந்து பெண் கேட்கிறார் முதலமைச்சர். மீனாட்சியின் அம்மா இதற்கு ஒத்துக் கொள்ள மறுக்கிறார்.

இதைத் தொடர்ந்து மீனாட்சியின் அம்மா திடீரென்று கொலை செய்யப்பட அம்மா இறந்த தூக்கம் தயாமல் மீனாட்சியும் வீட்டில் இருந்து வெளியேறி ஒரு ஹாஸ்டலில் தங்குகிறார்.

இதற்கு மேலும் பொறுமையாக இருக்க முடியாது என்று நினைக்கும் ஜெய், மீனாட்சியை பதிவு திருமணம் செய்து கொள்கிறார். இதையடுத்து இவர்கள் இருவரும் கொடைக்கானலுக்கு தேனிலவுக்கு வருகிறார்கள்.

அங்கே வில்லன் கருடா ராம் நடத்தும் ஒரு ஹோட்டலில் தங்குகிறார்கள். கருடா ராம் இந்திய முழுவதும் ஹோட்டல்களை நடத்தி வருகிறார். அதோடு அந்த ஹோட்டலில் தங்கும் இளஞ்சோடிகளின் ரகசிய உறவுகளை அவர்களுக்கே தெரியாமல் படம் பிடித்து ஆபாச இணைய தளங்களுக்கு அதை விற்று கோடி கோடியாக சம்பாதிக்கிறார்.

இன்னொரு பக்கம் அமைச்சர் தன் மகளை ஜெய்யிடம் இருந்து பிரித்து வேறு ஒரு தொழில் அதிபரின் மகனுக்கு திருமணம் செய்து வைக்க பிளான் செய்கிறார்.

திருமணத்திற்கு பின்பு நடக்கும் பொருளாதாரப் பிரச்சினைகளில் ஜெய் சிக்கிக் கொள்ள அவரும் மீனாட்சியும் பிரிகிறார்கள். பிரிந்த மனைவியை தேடி அதை கொடைக்கானலுக்கு திரும்பவும் வருகிறார் ஜெய்.

இப்போது திடீரென்று மீனாட்சி காணாமல் போக ஜெய் அவரை தேடி அலைகிறார் ஜெய். மீனாட்சியை ஜெய்தான் கொலை செய்திருப்பார் என்று அழைத்து போலீஸ் அவரை பிடிக்கிறது.

மீனாட்சி கிடைத்தாரா? இல்லையா? கருடா ராம் என்ன ஆனார்? அவர் எப்படி இதற்குள் நுழைந்தார்? ஜெய் என்னவானார்? என்பதெல்லாம் இந்தப் படத்தின் மீதமான திரைக்கதை.

இதுவரையிலும் தனி ஹீரோவாக நடித்து குறிப்பிடத்தக்க அளவுக்கான வெற்றிகளை கொடுக்காத ஜெய், எப்படியாவது வருடத்திற்கு ஒரு படத்திலாவது நடித்த தன்னுடைய படத்தை கொண்டு வந்து விடுகிறார். அந்த வகையில் இந்தப் படம் இப்போது வந்திருக்கிறது.

ஜெய்க்கு எப்போதும் போல ஒரு இளைஞன் கேரக்டர். பார்த்தவுடன் காதல்.. பிடித்தவுடன் பிரபோஸ் செய்து உடனடியாக திருமணமும் செய்து கொண்டு, இரண்டு டூயட்டுகளுக்கு உயிர் கொடுத்து.. தன்னால் முடிந்த அளவுக்கான நடிப்பை காண்பித்து இவ்வளவுதான் ஜெய் என்று சொல்லியிருக்கிறார்.

இந்தப் படத்தில் கொஞ்சம் கூடுதலாக செண்டிமெண்ட் காட்சிகளிலும், எமோஷன்ஸ் காட்சிகளிலும் பார்க்கும்படியான நடிப்பை ஜெய் கொடுத்திருப்பது நமக்கே மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. எல்லாமே இயக்குநரின் கைங்கரியம் என்று நினைக்கிறோம். இதற்காகவே இயக்குநருக்கு நமது பாராட்டுக்கள்.

நாயகியாக நடித்திருக்கும் மீனாட்சி கோவிந்தராஜன் கேமராவுக்கேற்ற முகம். நடிப்பிலும் எதிர்பாராத ஒரு அழகையும், திறமையையும் காட்டியிருக்கிறார். தன்னுடைய ஏமாற்றம், கோபம், வெறுப்பு, காதல் என்று அனைத்து வகையான நடிப்பிலும் தன்னுடைய பெயரை பதிவு செய்யும் அளவுக்கு நடித்திருக்கிறார் மீனாட்சி.

ஜெய்யின் நண்பராக ஐடி நிறுவனத்தில் வேலை செய்யும் ப்ராஜெக்ட் மேனேஜராக நடித்திருக்கும் யோகி பாபு, தன்னுடைய வழக்கமான டைமிங் சென்ஸ் காமெடிகள் மூலமாக கொஞ்சம் கொஞ்சம் சிரிக்க வைத்திருக்கிறார். இந்தக் காமெடியில் இரட்டை அர்த்த ஆபாச வசனங்களையும் இயக்குநர் சேர்த்துக் கொடுக்க, யோகி பாபு அதையும் டைமிங்காக நமக்குக் கொடுத்திருக்கிறார். இவரிடம் அடி வாங்கும் இன்னொரு காமெடியனாக ஆதித்யா கதிரும் ஏதோ கொஞ்சமேனும் நடித்திருக்கிறார்.

கருடா ராமின் வில்லத்தனம் அவருடைய முகத்திலும். குரலிலும் தெரிகிறது. ஒலிக்கிறது. ஐடி நிறுவனத்தின் மேல் அதிகாரியாக நீண்ட இடைவெளிக்கு பிறகு சத்யன் தன் முகத்தை காட்டியிருக்கிறார். முதலமைச்சராக சரவணன் சுப்பையாவும், நேர்மையான இன்ஸ்பெக்டராக ஸ்ரீமனும் சில காட்சிகளில் வந்து சென்று இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம்.நாதன் இது மீடியம் பட்ஜெட் படம் என்பதை உணர்ந்து அதற்கு ஏற்றவாறு காட்சிகளை படம் பிடித்திருக்கிறார். கொடைக்கானலின் அழகை இன்னும் அழகாக காட்டி இருக்கலாம். ஜெய் மீனாட்சி இருவரையுமே அழகாக காட்டியிருக்கிறார்.

கிரிஷ் கோபாலகிருஷ்ணனின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்தான். அதிலும் அக்கார்டி என்ற முதல் பாடலும், நடனமும் சூப்பர்தான். இருந்தாலும் மது வகைகளை ஊக்கப்படுத்துவது போல இந்தப் பாடல் வரிகளும், படமாக்கிய விதமும் இருப்பது வருத்தத்திற்குரியது. பின்னணி இசை திரைக்கதையின் ஓட்டத்திற்கு ஏதுவாக அமைந்துள்ளது.

தன்னால் முடிந்த அளவுக்கான படத் தொகுப்பினை செய்து இருக்கிறார் படத் தொகுப்பாளர். திரைக்கதையில் முன் பின்னான காட்சிகளை வேகமாக நகர்த்தி இருக்கிறார்கள். இதில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.

ஒரு அழகான காதல் கதையுடன் உலகத்தையே பயமுறுத்தி வரும் தனி நபர் உரிமையை திருடுவது, ஆபாச வீடியோக்கள், சைபர் கிரைம் குற்றங்கள் என்று உலகம் முழுவதும் இப்போது மிகப் பெரிய அளவுக்கு பிசினஸாக மாறி இருக்கும் குற்றங்களை வெளிப்படையாக சொல்லி நமக்கும் கொஞ்சம் எச்சரிக்கையும் கொடுத்திருக்கிறார் இயக்குநர் பாபு விஜய்.

திரைக்கதையை இன்னும் கொஞ்சம் நயத்துடனும், கவனத்துடனும் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

RATING : 3.5 / 5

Our Score