‘வாலி’ படம் மூலம் தமிழ்ச் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார் எஸ்.ஜே.சூர்யா. பின்னர் சில படங்களை இயக்கிய நிலையில், நடிக்கவும் ஆசைப்பட்டு நடிகராக உருமாறினார். இதில் சில படங்கள் வெற்றியும், பல படங்கள் தோல்வியும் அடைந்தன.
கடைசியாக இவர் நடித்த ‘இசை’ படம் படைப்பு ரீதியாக விமர்சனங்களைப் பெற்றது என்றாலும் ஓடவில்லை. இதையடுத்து மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுக்க விரும்பினார் எஸ்.ஜே.சூர்யா. ‘புலி’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தான் அடுத்து விஜய்யை வைத்து இயக்கவும் தயாராக இருப்பதாக கூறியிருந்தார்.
ஆனால் விஜய் அடுத்து பரதன் இயக்கத்தில் நடிக்கப் போவதை அறிந்ததும் மீண்டும் நடிக்கப் போகலாம் என்றெண்ணி மேக்கப் பெட்டியைத் திறந்துவிட்டார் எஸ்.ஜே.சூர்யா. இப்போது நடிப்பதுடன் கூடவே தயாரிப்பாளராகவும் மாறியிருக்கிறார்.
புதுமுக இயக்குநர் மணிகண்டனின் இயக்கத்தில் உருவாகும் ‘174’ படத்தில் தானே ஹீரோவாக நடித்து தயாரிக்க இருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.
இந்தப் புதுமுக இயக்குநரான மணிகண்டன் இயக்குநர் செல்வராகவனிடம் இணை இயக்குநராக பணியாற்றியவராம். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுடன் நடிக்கும் பிற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.
ஒரு மரணம் நிகழ்ந்தவுடன் போலீஸார் இது கொலை என்று சந்தேகிக்கும்போது, ‘174’ சட்டத்தை பயன்படுத்தி முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்வார்கள். இச்சட்டத்தைக் பின்புலமாகக் கொண்டு நகைச்சுவை மற்றும் த்ரில்லர் பாணியில் திரைக்கதை அமைத்திருக்கிறாராம் புதுமுக இயக்குநர் மணிகண்டன்.