மதுரைக்கார காமெடியை சொல்லும் படம் ‘144’.

மதுரைக்கார காமெடியை சொல்லும் படம் ‘144’.

திருக்குமரன் என்டர்பிரைசஸ் சார்பில் சி.வி.குமாரும் அபி & அபி பிக்சர்ஸ் சார்பில் அபினேஷ் இளங்கோவனும் தயாரித்திருக்கும் புதிய படம் ‘144’. இதில் ‘மிர்ச்சி’ சிவா, அசோக் செல்வன், ஓவியா, சுருதி ராமகிருஷ்ணன், முனீஸ்காந்த் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

குருதேவ் ஒளிப்பதிவு செய்கிறார். லியோ ஜான்பால் எடிட்டிங் செய்திருக்கிறார். சீன் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். அறிமுக இயக்குனர் ஜி. மணிகண்டன் இயக்கியிருக்கிறார்.

தயாரிப்பாளர் சி.வி.குமார் தயாரித்த ‘முண்டாசுப்பட்டி’ என்ற கிராமியப் படத்தை போலவே இந்தப் படத்தின் கதைக்களமும் அமைந்திருக்கிறது.

“144 என்பது ஒரு ஊரில் போலீஸ் ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்கும் அரசியல் சட்டப் பிரிவின் எண். இதுதான் படத்தின் கதைக் கரு.

மதுரை அருகேயுள்ள இரண்டு கிராமங்கள்தான் கதைக் களம். ஏரியில் உள்ள மீன்களைப் பிடிப்பதில் இரண்டு கிராமங்களுக்கும் இடையே தகராறு ஏற்பட. கலவரத்தை அடக்குவதற்காக ஊரில் 144 ஊரடங்கு உத்தரவு போடப்படுகிறது, இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. வெளில ஊர் சுத்த போக முடியல.. சினிமாவுக்கு போக முடியல. பக்கத்து தெரு நண்பனை பார்க்க முடியல. முக்கியமா காதலர்கள் ஒருவருக்கொருவர் சந்திக்க முடியலை.

இதனால் இந்த ஊரடங்கு உத்தரவை அனைத்துத் தரப்பு மக்களும் எப்படி சமாளிக்கிறார்கள்.. காதலர்கள் போலீஸுக்கு எப்படி தண்ணி காட்டுகிறார்கள்.. என்பதுதான் இந்தப் படத்தின் சுவையான திரைக்கதை..” என்கிறார் இயக்குநர் மணிகண்டன் .

தனது கேரக்டர் பற்றி பேசிய நடிகர் ‘மிர்ச்சி’ சிவா, “இந்தப் படத்துல நான் கொஞ்சம் டீஸண்ட்டான திருடன். ஆனால் ஒரு பூட்டைக்கூட ஒழுங்கா உடைக்க தெரியாமல் அவ்வப்போது போலீஸில் மாட்டிக் கொள்வேன். திருடுவதற்கு முன்பாகவே மாட்டிக் கொண்டதால் போலீஸே என்னைப் பார்த்து பரிதாப்படும். அதனால போலீஸ் மத்தியில் என் கவுரவத்தை காப்பாத்திக்க ஏதாவதொரு பூட்டை உடைக்க வேண்டிய கட்டாயம் எனக்கு. அப்படியொரு இடத்துல பூட்டை உடைக்கலாம்னு போய் காதல்ல விழுந்திருவேன். அதுலதான் என் காமெடி ராஜாங்கம் ஸ்டார்ட்…“ என்கிறார் சிவா,

மேலும் மதுரை மண் பற்றி பேசிய மிர்ச்சி சிவா, “பொதுவா மதுரைன்னாலே வெட்டுக் குத்துன்னேதான் படம் எடுக்குறாங்க. ஆனால் மதுரை மக்களை பார்த்தால் அப்படி தெரியவே இல்ல. மதுரை மக்கள் ஒவ்வொருத்தர்கிட்டயும் ஒரு தனித் தன்மை இருக்கு. அவங்ககிட்ட, இதுவரை சினிமாவுல காட்டப்படாத ஒரு சூப்பரான காமெடி ஸ்டைல் இருக்கு. எதையுமே, உற்சாகமா, காமெடியா ஜாலியா பாக்குறாங்க. அந்தக் கோணத்தில் நிறைய படங்கள் வந்தா தமிழ் சினிமாவுக்கு நல்லது..“ என்கிறார்.

தயாரிப்பாளர் சி.வி.குமார் பேசும்போது, “நான் மதுரை திருமங்கலத்தில் பொறந்து வளர்ந்தவன். என் வாழ்க்கைல இதுவரை ஒரு நாளும் டாட்டா சுமோவுல வந்து அரிவாள் வெட்டோட படுகொலை செய்றதையெல்லாம் பார்த்ததே இல்ல. மதுரை அப்படிப்பட்ட ஊரும் இல்ல. மதுரைன்னா பாசமும், விருந்தோம்பலும்தான் பேமஸ். நகைச்சுவையும்  இப்படிதான் இருக்கும். அந்த மதுரை நகைச்சுவையை முழுமையாகச் சொல்லும் படம் இது. இது ஒரு காமெடி திரில்லர் டைப் படம். ரசிகர்களுக்கு நிச்சயம் புதுமையான ஒரு காமெடி அனுபவமா இருக்கும்…“ என்கிறார்.

‘144’ திரைப்படம் வரும் நவம்பர் 27-ம் தேதி வெளியாகிறது..!

Our Score