full screen background image

2020 தீபாவளிக்கு 11 தமிழ்த் திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.

2020 தீபாவளிக்கு 11 தமிழ்த் திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.

கடந்த மார்ச் மாதம் 20-ம் தேதியான வெள்ளிக்கிழமையன்றுதான் கடைசியாக தமிழகத்தில் தியேட்டர்களில் தமிழ்த் திரைப்படங்கள் வெளியாகியிருந்தன.

அதற்கடுத்து உலகம் தழுவிய அளவில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பினால் மார்ச் 23-ம் தேதி தியேட்டர்கள் மூடப்பட்டதால் திரைப்படங்கள் வெளியாவது நிறுத்தப்பட்டது.

இப்போது திரையரங்குகள் திறக்கப்பட்டு சில நாட்கள் கழித்து தீபாவளி தினத்தையொட்டி இன்றைக்குத்தான் 7 திரைப்படங்கள் நேரடியாக தியேட்டர்களில் வெளியாகியுள்ளன.

பிஸ்கோத்’, ‘இரண்டாம் குத்து’,. ‘தட்றோம் தூக்குறோம்’, ‘மரிஜூவானா’, ‘பச்சைக்கிளி’, ‘கோட்டா’, ‘நுங்கம்பாக்கம்’ ஆகிய திரைப்படங்கள் இன்றைக்குத் தியேட்டர்களில் வெளியாகியுள்ளன. இதில் ‘நுங்கம்பாக்கம்’ திரைப்படம் ஏற்கெனவே ஓடிடி தளத்தில் வெளியாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தாண்டு தீபாவளியை முன்னிட்டு இரு நாட்களுக்கு முன்பாக ‘அமேஸான் பிரைம் வீடியோ’ என்னும் ஓடிடி தளத்தில் சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ திரைப்படம் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது.

இன்றைய தீபாவளி தினத்தில் ஓடிடி தளத்திலும் நேரடியாக 2 திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. ‘மூக்குத்தி அம்மன்’, ‘பச்சை விளக்கு’ ஆகியவைதான் அந்தத் திரைப்படங்கள். ‘மூக்குத்தி அம்மன்’ ஓடிடியில் வெளியீடு என்பது ஒரு மாதத்திற்கு முன்பே முடிவு செய்து ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்ததால் தற்போது தியேட்டர்களுக்குக் கொண்டு வர முடியவில்லை. ‘மூக்குத்தி அம்மன்’ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இன்று காலை 8.30 மணிக்கு வெளியானது.

‘பச்சை விளக்கு’ திரைப்படம் ஏற்கெனவே தமிழகத்தில் தியேட்டர்களில் வெளியான திரைப்படம்தான். தற்போது ‘மூவி இன்’ என்னும் ஓடிடி தளத்தில் ‘பே பார் வியூ’ என்னும் திட்டத்தின் கீழ் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தைப் பார்க்க 50 ரூபாய் பணம் கட்ட வேண்டும்.

இவையிரண்டும் இல்லாமல் நேரடியாக சன் தொலைக்காட்சியில் ‘நாங்க ரொம்ப பிஸி’ என்ற திரைப்படம் இன்று காலை வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் நேரடி தயாரிப்பில் இந்தக் கொரோனா லாக் டவுன் காலத்திலேயே துவக்கப்பட்டு, முடிக்கப்பட்டு இன்று தீபாவளியை முன்னிட்டு இன்று காலை 11 மணிக்கு சன் தொலைக்காட்சியில் இத்திரைப்படம் ஒளிபரப்பாகிவிட்டது.

முன்பெல்லாம் பண்டிகை தினங்களில் தியேட்டர்களில் வெளியிடப்படும் திரைப்படங்களைப் பார்க்க அங்கே குவியும் ரசிகர்களின் கூட்டமே அன்றைய தினம் ஒரு மிகப் பெரிய பண்டிகை தினம் என்று சொல்லும்.. ஆனால், இன்றைக்கு தியேட்டர்கள், ஓடிடி, டிவிக்கள் என்று மூன்று இடங்களிலும் புதிய படங்கள் வெளியாகி ரசிகர்களை குழப்பத்தில் ஏற்படுத்தியுள்ளன.

இன்று ரிலீஸான புதிய படங்களின் வசூல் விவரங்கள் வெளியில் வந்தால்தான் உண்மையான வெற்றி யாருக்கு என்பது தெரியும்..

Our Score