100 – சினிமா விமர்சனம்..!

100 – சினிமா விமர்சனம்..!

ஆரா சினிமாஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் காவியா வேணுகோபால் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

அதர்வா, ஹன்சிகா மோத்வானி இருவரும் நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். தயாரிப்பாளர் மகேஷ் கோவிந்தராஜூம் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும், ராதாரவி, யோகிபாபு, ஆடுகளம் நரேன், பிராணஷ். திவ்யா, ஹரிஜா, பாஸ்கர், மைம் கோபி, சீனு மோகன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – கிருஷ்ணன் வசந்த், இசை – சி.எஸ்.சாம், படத் தொகுப்பு – ரூபன், கலை இயக்கம் – உமேஷ் ஜே.குமார், சண்டை இயக்கம் – திலீப் சுப்பராயன், நடன இயக்கம் – சதீஷ் கிருஷ்ணன், அனுஷா ஸ்வாமி, பாடல்கள் – சி.எஸ்.சாம், லோகன், பைனல் மிக்ஸிங் – உதயகுமார், ஒலி வடிவமைப்பு – அருண் சீனு, ஆடை வடிவமைப்பாளர் – சாரா விஜய்குமார், கிராபிக்ஸ் – ஹரிஹரன் சுதன், மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா, எழுத்து, இயக்கம் – சாம் ஆண்டன், தயாரிப்பாளர் – மகேஷ் கோவிந்தராஜ், காவ்யா வேணுகோபால்.

குரு ஸ்ரீமிஷ்ரி எண்டர்பிரைசஸ் நிறுவனம் தமிழகம் முழுக்க வெளியிட்டுள்ளது.

நாயகன் அதர்வா சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு எழுதி பணி நியமன ஆணைக்காகக் காத்திருப்பவர். இவருடைய நண்பர் இப்போது பதவியில் இருக்கும் சப்-இன்ஸ்பெக்டரான மகேஷ்.

நிஜத்தில் அடாவடிப் பேர்வழியான அதர்வா குற்றம் நடந்தால் உடனேயே போட்டுத் தாக்கிவிட வேண்டும் என்கிற கொள்கை உடையவர். மகேஷுக்கு கடன் கொடுத்துவிட்டு அதை அடாவடித்தனமாக திருப்பிக் கேட்கும் அந்தப் பகுதி கவுன்சிலருக்கே இரத்தம் வரவழைத்து அனுப்பி வைக்கிறார்.

கல்லூரியில் படிக்கும் தனது நண்பனின் தங்கையை கிண்டல் செய்தான் என்கிற காரணத்துக்காக ஒரு பையனை கல்லூரிக்குள்ளேயே போய் அடித்து உதைக்கிறார். பின்புதான் தெரிகிறது இருவரும் காதலர்கள் என்று..!

அடி, உதை வாங்கிய பையனின் சொந்த அக்காள்தான் நாயகி ஹன்ஸிகா. ஹன்ஸிகாவைப் பார்த்தவுடன் மயங்கிவிடும் அதர்வா தம்பியிடம் பழம் விட்டு தனது காதலை வாழ வைத்துக் கொள்கிறார்.

ஹன்ஸிகாவின் அப்பாவிடம் டியூஷன் படிக்கும் ஒரு பெண் திடீரென்று காணாமல் போகிறார். அந்தப் பெண் தன்னைக் காதலிக்காததால் தானே அந்தப் பெண்ணைக் கடத்திச் சென்று கொலை செய்து எரித்தும்விட்டதாகச் சொல்லி ஒருவன் நீதிமன்றத்தில் சரணடைகிறான். அவன் மைனராக இருப்பதால் சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்படுகிறான்.

இந்த நேரத்தில் அதர்வாவுக்கு சப்-இன்ஸ்பெக்டர் போஸ்டிங் கிடைக்கிறது. ஆனால் ஸ்டேஷனில் இல்லாமல் முதல் பணியை போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் ஒதுக்குகிறார்கள்.

வேண்டாவெறுப்பாக அங்கே பணியாற்றுகிறார் அதர்வா. அவர் சந்திக்கும் 100-வது போன் அழைப்பில் செத்துப் போனதாக சொல்லப்படும் அந்தப் பெண் உயிரோடு இருப்பதாக அதர்வாவுக்குத் தெரிய வருகிறது.

அவளை மீட்பதற்கு தானே களத்தில் குதிக்க நினைக்கிறார் அதர்வா. அதைச் செய்தாரா.. இல்லையா… என்பதுதான் இந்த 100 படத்தின் திரைக்கதை.

படத்தின் இடைவேளைக்குப் பின்புதான் கதையே தெரிய வருகிறது. அதுவரையிலும் ஏனோ தானோவென்றுதான் திரைக்கதை நகர்கிறது. இது மிகப் பெரிய பேக் டிராப். முதல் காட்சியிலேயே சப்-இன்ஸ்பெக்டராக கதையை கொண்டு சென்றிருக்கலாம். இது மாதிரியான கதைகளுக்கு முதல் ஷாட்டிலேயே கதையைச் சொல்லிவிட வேண்டும்.

கல்லூரி மற்றும் கவுன்சிலர் அடிதடி காட்சிகளை நீக்கியிருக்க வேண்டும். அவைகள் எந்தவிதத்திலும் அதர்வாவின் கேரக்டர் ஸ்கெட்ச்சிற்கும், திரைக்கதைக்கும் பலனளிக்கவில்லை. இதேபோல் காதல் போர்ஷனும் ஏதோ கடமைக்கே என்று அமைக்கப்பட்டிருப்பது போலவே தோன்றுகிறது.

இடைவேளைக்குப் பின்பு கடத்தப்பட்ட பெண் போனில் தொடர்பு கொண்டு பேசிய பின்புதான் படத்தின் மீது ஒரு ஆர்வமே ஏற்படுகிறது. இந்த ஆர்வத்தை முதல் காட்சியிலேயே கொடுத்திருக்க வேண்டும். இயக்குநர் கோட்டைவிட்டுவிட்டார்.

அதிலும் ஒரு டீ குடிக்கிற இடைவெளியில் வெளியில் போய் குழந்தையைக் கடத்தியவனைப் பிடிப்பதும், பெண்ணைக் கடத்தியவனைப் பிடிப்பதும் மிகப் பெரிய லாஜிக் மிஸ்டேக். படம் பார்க்கும் காவல்துறையைச் சேர்ந்தவர்களே இதைப் பார்த்தால் சிரிப்பார்கள்.

நிஜத்தில் கட்டுப்பாட்டு அறையில் இருப்பவர்கள் கேபினைவிட்டு எழுந்து வெளியேறுவதும், பின்பு உள்ளே வருவதற்கும் டைம் கோட் கூட உண்டு. இப்படி அலுவலகத்தைவிட்டு வெளியேறவே முடியாது. அதிலும் தங்களுக்குச் சம்பந்தமில்லாத விஷயங்களில் நேரிடையாக தலையிடவும் முடியாது. இது அவர்களுடைய துறை சட்டத்தின்படி மிகக் கடுமையானக் குற்றம்.

நாயக பிம்பத்தைத் துதிபாடுவதாகச் சொல்லி கொஞ்சமும் ஏற்க முடியாத காட்சிகளை வைத்து படத்திற்கு மிகப் பெரிய எதிர் விமர்சனத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் சாம் ஆண்டன்.

நாயகன் அதர்வாவுக்கு வேண்டுமானால் இது முக்கியமான படமாக இருக்கலாம். ஆனால் போலீஸ் துறைக்கு பெருமை சேர்க்கும் படமாக இது இல்லை என்பதுதான் உண்மை.

நாயகன் அதர்வாவை போலீஸ் டிரெஸ்ஸில் பார்க்கும்போது புதுமுக அதிகாரி வேடத்திற்குக் கச்சிதமாகப் பொருந்துகிறார். துணை கமிஷனர் ராதாரவியிடமும், கமிஷனர் ‘ஆடுகளம்’ நரேனிடமும் தனது போலீஸ் பணி பற்றிப் பேசும் இடத்தில் சுவாரஸ்யத்தைக் கூட்டுகிறார் அதர்வா. ஆனால் அது போகப் போகச் சப்பையாகி அவருக்கே வேட்டு வைத்துவிட்டது.

இனிமேல் தன்னுடைய நாயகன் என்கிற பிம்பத்தை மறந்துவிட்டு திரைப்படத்தில் ஏற்கும் வேடத்திற்கேற்ற திரைக்கதை இருக்கும் படங்களில் நடித்தால்தான் அவருடைய நடிப்புக்கான ஸ்கோப் முழுமையாகக் கிடைக்கும்.

ஹன்ஸிகா இந்தப் படத்தில் 8 காட்சிகளில் மட்டுமே வருகிறார். உடல் இளைத்துப் போய், கன்னம் ஒட்டிப் போய்.. சின்ன குஷ்பு என்ற பெயரில் இருவர் இப்போது கவுசல்யா நிலைமையில் காட்சியளிக்கிறார்.

சராசரி நாயகிக்கான தனது பணியை செவ்வனே செய்திருக்கிறார் ஹன்ஸிகா. பாடல் காட்சிகளில் மட்டும் அதே சூப்பர் ரின் சோப் சிரிப்பு. இது போதும் என்கிறார்கள் ஹன்ஸிகாவின் ரசிகர்கள்.

யோகி பாபுவுக்கு சப்-இன்ஸ்பெக்டர் வேடமாம். பொருத்தமே இல்லை. இந்தக் கோலத்தில் இருப்பவர் போலீஸ் வேலையில் சேரவே முடியாது. ஆனாலும் காமெடிக்காக அவரையும் திணித்து, சில காட்சிகளில் நம்மை சிரிக்க வைத்துக் காப்பாற்றியிருக்கிறார்கள்.

‘பிஸ்டல் பெருமாளாக’ நடித்திருக்கும் ராதாரவியின் குணச்சித்திர நடிப்பு மட்டுமே படத்தில் இருக்கும் ஒரேயொரு ஆறுதல். அவர் தனது கதையைச் சொல்லும்போதே கிளைமாக்ஸில் வில்லனை போட்டுத் தள்ளப் போவது இவரே என்பது புரிந்துவிடுகிறது. ஆனாலும் சிறந்த நடிப்பு.

மைம் கோபியும், சீனு மோகனும் ஒரு பக்கம் வில்லனாக நடித்திருக்கிறார்கள். இருவரும் ஒருவரையொருவர் போட்டுக் கொடுக்கும் வேலையில் ஈடுபடும் அந்தக் காட்சி சுவாரஸ்யம்தான்.

தயாரிப்பாளர் மகேஷ் கோவிந்தராஜ் இந்தப் படத்தில் அறிமுகமாகியிருக்கிறார். சிறப்பாகவே நடித்திருக்கிறார். குறையில்லை. பொதுவாக அறிமுகம் என்றாலே நல்ல கேரக்டரில்தான் செய்வார்கள். ஆனால் இதில்.. எதிர்மறை வில்லனாக நடித்து அறிமுகமாகியிருக்கும் அவரது தைரியத்திற்கு நமது பாராட்டுக்கள். தொடர்ந்து இது போன்ற வேடங்களில் அவர் நடிக்கலாம். கடத்தப்பட்ட பெண்ணாக நடித்தவரும் சிறப்பாக நடித்திருக்கிறார். பாராட்டுக்கள்.

ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவில் இரவு நேரக் காட்சிகள் வித்தியாசமாக இருக்கிறது. ஹன்ஸிகாவின் இத்துப் போன அழகையும், அதர்வாவின் போலீஸ் கம்பீரத்தையும்கூட கேமிரா முழுங்கியிருக்கிறது. போலீஸ் கட்டுப்பாட்டு அறையை சில, பல கோணங்களில் பார்ப்பதற்கு அழகாக இருப்பதுபோலவே படமாக்கியிருக்கிறார் ராஜசேகர்.

இதேபோல் இந்த போலீஸ் கட்டுப்பாட்டு அறையை வடிவமைத்த கலை இயக்குநருக்கு நமது பாராட்டுக்கள்.

இசையமைப்பாளர் சி.எஸ்.சாம் தான் இசையமைத்ததுதான் இசை என்று சொன்னதால் பாடல்கள் திரும்பவும் கேட்கும் ரகமில்லை. அதோடு அவரே பாடல்களையும் எழுதியிருக்கிறார். இனிமேல் கவிஞர்களுக்கே தமிழ்ச் சினிமாவில் வேலையில்லாமல் போகப் போகிறது.

சாமின் பின்னணி இசைகூட படத்திற்கு பலம் சேர்க்கவில்லை. சஸ்பென்ஸ், திரில்லர் படங்களுக்கே உரித்தான பயவுணர்ச்சியையும், எதிர்பார்ப்பையும் இந்தப் படத்தின் பின்னணி இசை கொடுக்கவில்லை என்பது வருத்தத்திற்குரியது.

படத்தின் முற்பாதியில் இருக்கும் சில காட்சிகளை நீக்கிவிட்டு வேகமாக அதர்வாவை சப்-இன்ஸ்பெக்டராக்கி போலீஸ் ஸ்டேஷனிலேயே பணியமர்த்தி இந்தக் குற்றங்களைக் கண்டுபிடிக்கும் பணியை ஒப்படைப்பதுபோல படத்தின் கதையை எழுதியிருந்தால் நிச்சயமாக படம் இதைவிட சிறப்பாகவே இருந்திருக்கும்.

போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் பணியில் இருக்கும் ஒரு சப்-இன்ஸ்பெக்டரின் கேரக்டர் ஸ்கெட்ச், இந்தப் படத்திற்கு எந்தவிதத்திலும் பலனளிக்கவில்லை.

அதே சமயம், பணக்காரர்கள் படிக்கும் பள்ளியில் மத்திய தர வகுப்பைப் சேர்ந்த மாணவனை சேர்த்தால், அவனது வாழ்க்கை முறை மாறும்.. என்பதை ஒரு மெஸேஜாக இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குநர். இதனை இன்னும் அழுத்தமாகச் சொல்லியிருக்கலாம்.

இந்த ‘100’ படத்தை லாஜிக்கெல்லாம் பார்க்காமல் ஒரு திரைப்படமாக மட்டுமே பார்க்க நினைத்தால், பார்த்துவிட முடியும்..!

Our Score