காதல் கலந்த நகைச்சுவை படமாக உருவாகியிருக்கும் ‘ஆரம்பமே அட்டகாசம்’ படத்தை சுவாதி பிலிம் சர்க்யூட் சார்பில் மாலதி வேலு, எஸ். சுக்குருல்லா ஆகியோர் தயாரித்துள்ளனர்.
இந்தப் படத்தில் ‘லொள்ளு சபா’ ஜீவா ஹீரோவாக நடித்திருக்கிறார். சங்கீதா பட் ஹீரோயின். இவர் கன்னடத்தில் பல வெற்றிப் படங்களின் கதாநாயகி. மேலும், பாண்டியராஜன், சாம்ஸ், வையாபுரி, ஸ்ரீநாத், வாசுவிக்ரம், கு.ஞானசம்பந்தம், முனீஸ், நெல்லை சிவா, மதுமிதா, ‘லொள்ளு சபா’ மனோகர், லொள்ளுசபா சேசு, ‘லொள்ளு சபா’ உதய் என்று தமிழ் சினிமாவின் நகைச்சுவை பட்டாளமே இந்த படத்தில் ரசிகர்களை குஷிப்படுத்த களம் இறங்கியுள்ளது.
ஒளிப்பதிவு – ஆனந்த், இசை – ஜெ.கே.தாஸ், பாடல்கள் – கலைக்குமார், பிரான்சிஸ் கிருபா, மலை மன்னன், படத் தொகுப்பு – மாரிஸ் எ.வெங்கடேஷ், நடனம் – சுரேஷ், தயாரிப்பு – மாலதி வேலு, சுக்குருல்லா, எழுத்து, இயக்கம் – ரங்கா.
தல அஜித்தின் தீவிர ரசிகரான இயக்குநர் ரங்கா, அஜித்தின் சூப்பர் ஹிட் படங்களான ‘ஆரம்பம்’, ‘அட்டகாசம்’ ஆகிய இரண்டு படங்களின் தலைப்பையும் இணைத்து ‘ஆரம்பமே அட்டகாசம்’ என்று டைட்டில் பிடித்துள்ளார். ரங்கா இயக்கியிருக்கும் இரண்டாவது படம் இது. ரங்கா ஏற்கனவே இயக்கியிருக்கும் ‘நாய்க்குட்டி’ படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.
சென்னை, கேரளா, ஹைதராபாத் ஆகிய இடங்களில் உருவாகும் இந்த படம், காதலுடன் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவை படமாக உருவாகியிருக்கிறது.
படத்தின் ஹீரோவான ‘லொள்ளு சபா ஜீவா’, சூப்பர் ஸ்டார் ரஜினியின் தீவிர ரசிகர் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் இந்தப் படத்தில் உலக நாயகன் கமல்ஹாசனை ஃபாலோ செய்திருக்கிறார் ஜீவா.
பொதுவாக, தமிழ் ஹீரோக்களில் உலக நாயகன் கமல்ஹாசனைத்தான் ‘முத்த மன்னன்’ என்று சொல்வார்கள். கமலஹாசனின் படத்தில் கண்டிப்பாக ஒரு ‘லிப் லாக்’ முத்தக் காட்சி இடம் பெறும். ஆனால் ஜீவா நடிக்கும் இந்த படத்தில் மட்டும் மொத்தம் பத்து ‘லிப் லாக்’ காட்சிகள் இடம்பெறுகின்றன. அந்த வகையில் ‘லிப் லாக்’கில் கமலின் சாதனையை ஒரே படத்தில் தாண்டியிருக்கிறார் ஜீவா.
இதென்ன வேண்டுதலா என்று தெரியவில்லை..?! கமல்ஹாசனை நடிப்பில் மிஞ்சியிருக்கிறேன் என்று சொன்னால் நிச்சயம் பூமழை தூவி பாராட்டலாம்..! ஆனால் முத்தக் காட்சியில் மிஞ்சினேன் என்று சொன்னால் நாமென்ன சொல்வது..? செய்வது..?














